ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பத்தின் விவகாரம் தொடர்பில் முழுமையாக விசாரிக்க ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது பிரியா, நடேசலிங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகள் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அதை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்துள்ளார்.
பாதுகாப்பு கருதியே அவர்கள் தடுப்பு முகாமிற்கு அருகாமையில் உள்ள வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதை நிராகரித்துள் பிரியா, “இது சுத்த பொய். நாங்கள் தடுப்பு முகாமிற்குள் தான் வைக்கப்பட்டுள்ளோம். தடுப்புச்சுவரை தாண்டி வெளியே வர எங்களுக்கு அனுமதியில்லை,” என ஸ்கை நியூசிடம் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள்(கோபிகா, தருணிகா) பிறந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்தனர்.
கடந்த மார்ச் 2018ல் விசா காலாவதியாகியதாக கைது செய்யப்பட்ட இவர்கள் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதே சமயம், பிரியா- நடசேலிங்கம் குடும்பத்தை நாடுகடத்துவதில் ஆஸ்திரேலிய அரசு உறுதியாக இருந்து வருகின்றது.
ஆஸ்திரேலியாவில் பிறந்த குழந்தைகளை காரணம் காட்டி ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க பிரியா- நடசேலிங்கம் முயற்சிப்பதாக பீட்டர் டட்டன் விமர்சித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.