ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறுவதுடன், வேட்பு மனுத்தாக்கலானது ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக நேற்றைய தினம் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க போட்டியிட உள்ளதாக இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அத்துடன் அங்கத்துவம் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் பொது சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் தனித்தோ, அல்லது சுயாதீனமாகவோ தேர்தலில் போட்டியிடுவதாக தமது கட்சி மட்டத்தில் அறிவித்துள்ளனர்.
இதேவேளை பிரதான இரு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமான தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பளாளர்கள் குறித்த விடயத்தில் இன்னும் இழுபறி நிலயைில் உள்ளனர்.
இந் நிலையில் இன்று இடம்பெறும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலில் தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறெறினும் அடுத்தவாரம் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.