ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக, ஐக்கிய தேசிய கட்சிக்குள் உருவாகியிருக்கும் சர்ச்சை, மிகவும் மோசமான நிலையை அடைந்து உள்ளதாகவே தெரிகின்றது.
‘தாமே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்பதில், ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியாக இருக்கிறார்.
அதேவேளை, அவருக்கு அதற்கு இடமளிப்பதில்லை என்பதில், கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியாக இருக்கிறார்.
இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு, சஜித்துக்கு ஆதரவாகக் கட்சித் தலைமையை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு முன்னர், ஐ.தே.கவுக்குள் தலைமைத்துவப் பிரச்சினை உருவாகியிருந்த போதிலும், இம்முறைபோல், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைமையை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை.
இலங்கையில், அரசியல் கட்சிகளுக்குள், தலைமைத்துவப் போட்டிகளால், சித்தாந்த முரண்பாடுகளால் ஏற்படும் கட்சிப் பிளவுகள் புதியனவல்ல.
இலங்கையில் முதலாவது அரசியல் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சி, அதற்கடுத்த பழைய கட்சியான கொம்யூனிஸ்ட் கட்சி, ஐ.தே.க, அதிலிருந்து பிரிந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழரசுக் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற சகல கட்சிகளுக்கு உள்ளும், தலைமைத்துவப் போட்டிகள் அல்லது சித்தாந்த முரண்பாடுகள் ஏற்பட்டு, கட்சிகள் பிளவுபட்டுள்ளன.
இவற்றில் சில பிளவுகள், நாட்டின் அரசியல் வரலாற்றையே மாற்றக்கூடியதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஐ.தே.க பிளவுபட்டு, ஸ்ரீ ல.சு.க உருவாகியமை, கொம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு, சீன கொம்யூனிஸ்ட் கட்சி உருவாகி, அதிலிருந்து மக்கள் விடுதலை முன்னணி உருவாகியமை, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து தமிழரசுக் கட்சி உருவாகியமை போன்றவற்றை, இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
இன்று போலவே, ஐ.தே.கவுக்குள் எப்போதும் தலைமைத்துவ மோதலே ஏற்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகளுக்குள் ஏற்பட்டது போல, ஐ.தே.கவுக்குள் ஒருபோதும், சித்தாந்தப் பிரச்சினைகள் உருவாகவில்லை.
உதாரணமாக, 1952ஆம் ஆண்டு, ஐ.தே.கவிலிருந்து பிரிந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஆதரவாக, ஐ.தே.க செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிக் கொண்டு, அக்கட்சியிலிருந்து பிரிந்து, ஸ்ரீ ல.சு.கவை ஆரம்பித்த போதிலும், டி.எஸ் சேனாநாயக்கவுக்குப் பின்னர், ஐ.தே.கவின் தலைமை, தமக்குக் கிடைக்கும் என்ற உத்தரவாதம் அவருக்கு இருந்திருந்தால், அவர் அக்கட்சியிலிருந்து பிரிந்திருக்க மாட்டார்.
அதேபோல், ஜே.ஆர். ஜெயவர்தனவுக்குப் பின்னர், காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி ஆகியோரில் ஒருவருக்கு, ஐ.தே.கவின் தலைமைப் பதவியும் ஜனாதிபதி பதவியும் கிடைத்திருந்தால், அவ்விருவரும் கட்சியை விட்டுப் பிரிந்து சென்றிருக்க மாட்டார்கள். தாம், நாட்டில் ஜனநாயகத்துக்காகப் போராடுவதாக அவர்கள் கூறிய போதிலும், உண்மையிலேயே அது பதவிப் போராட்டமேயன்றி வேறொன்றுமல்ல.
ஐ.தே.கவே, நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமையை நாட்டில் அறிமுகப்படுத்தியது. அதேவேளை, அப்பதவியே அக்கட்சிக்குள் கூடுதலான மோதல்களையும் உருவாக்கி இருக்கிறது. அதிலும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு எதிராகவே, கூடுதலான கிளர்ச்சிகள் உருவாகியிருக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைக்கு எதிராக, இதுவரை மூன்று பிரதான உட்கட்சிக் கிளர்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. 2001ஆம் ஆண்டிலும் 2011-2014 காலப்பகுதியிலும், இரண்டு கிளர்ச்சிகள் இடம்பெற்றன. தற்போதையது மூன்றாவதாகும்.
1977ஆம் முதல் 1994 ஆம் ஆண்டு வரை, ஸ்ரீ ல.சு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாட்டில் நடைபெற்ற சகல பிரதான தேர்தல்களிலும் தோல்வியடைந்தன.
அதேபோல், 1994ஆம் ஆண்டு முதல் 2001ஆம் வரை, தேர்தல் தோல்விகளை, ஐ.தே.க சந்தித்து வந்தது. இந்த நிலையில், ஐ.தே.கவின் தோல்விக்கு, ஐ.தே.கவின் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்றதோர் அபிப்பிராயத்தை, ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணியினர், அக்காலத்திலும் (2000ஆம் ஆண்டளவில்) மிகச் சாதுரியமாகச் சமூகத்தில் பரப்பிவிட்டனர். இதை ஐ.தே.கவினர் பலரும் நம்பினர்.
இந்தநிலையில், அப்போதைய ஐ.தே.க உபதலைவர் காமினி அத்துகோரள, பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.ஜே.ஏம். லொக்குபண்டார, இன்று ரணிலின் ஆதரவாளர்களாக இருக்கும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் தலைமையில், 23 ஐ.தே.க எம்.பிக்கள், ரணிலுக்கு எதிராக அன்று செயற்பட ஆரம்பித்தனர்.
2001ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் திகதி, பாதீட்டுத் திட்டம் தொடர்பான, இறுதி வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன்போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உதவியுடன், அரசாங்கத்தை தோல்வியுறச் செய்ய ஐ.தே.க எதிர்பார்த்தது. ஆனால், இ.தொ.கா அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை; வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்றது. அன்றே, நோர்வே நாட்டுக்கு நீண்ட பயணம் ஒன்றை, ரணில் ஆரம்பித்தார். இதற்கிடையே, இ.தொ.காவின் உதவியைப் பெறமுடியாது போனமைக்கு, ரணிலே காரணம் என்று, மேற்படி குழுவினர் ரணிலுக்கு எதிராகச் செயற்பட, இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.
இதைச் சிலர் ரணிலுக்கு அறிவிக்கவே, உடனடியாக நாடு திரும்பிய ரணில், சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர், கட்சியில் ஒரு தலைவருக்குப் பதிலாக, தலைமைத்துவ சபையொன்றை நியமிப்பதாக வாக்குறுதியளித்து, பின்னர் அதை இழுத்தடித்து, கிளர்ச்சிக்காரர்களின் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்தார்.
அந்தக் கிளர்ச்சியின் போது காணப்பட்ட முக்கிய விடயம் என்வென்றால், இன்று ரணிலோடு இருக்கும் ரவி கருணாநாயக்க, அன்று அவருக்கு எதிராகச் செயற்பட்டமையும் இன்று, ரணிலுக்கு எதிரான கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கும் சஜித் பிரேமதாஸ, அன்று ரணிலுக்கு ஆதரவாகச் செயற்பட்டமையுமாகும்.
அதனையடுத்து, 2010ஆம் ஆண்டும் ரணிலுக்கு எதிராக, உட்கட்சிக் கிளர்ச்சியொன்று உருவானது. அந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஐ.தே.க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தோல்வியடைந்த நிலையிலேயே இந்தச் சர்ச்சை உருவானது.
ரணிலின் தலைமையில், தேர்தல்கள் வெற்றிபெறுவதில்லை என்ற ஒரு கருத்தைச் சிலர் அப்போதும் முன்வைத்திருந்தனர். அதேவேளை, சஜித் உள்ளிட்ட சிலர், கட்சித் தலைமையை எதிர்பார்த்தனர்.
இறுதியில், சஜித்தின் குழுவிடமே, தலைமைக்கு எதிரான போராட்டத்தின் தலைமை சென்றடைந்தது. 2011ஆம் ஆண்டு, கோட்டேயில் உள்ள கட்சித் தலைமையகமான ‘சிறிகொத்த’வில் ரணிலின் தலைமையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற போது, கட்சித் தலைமையகத்தின் முன்னால், சஜித் பிரிவு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
அன்று, மஹிந்தவின் அரசாங்கம், ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நீதிமன்ற ஆணையொன்றைப் பெற்று, ‘சிறிகொத்த’ தலைமையகத்தின் முன்னால் உள்ள வீதியைச் செப்பனிட ஆரம்பித்தது. இது இன்றுவரை, அரசியல் அரங்கில் பேசுபொருளாக இருக்கும் சம்பவமொன்றாகும்.
இந்த ரணில்-சஜித் பிணக்கு, 2014ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் வரை நீடித்தது. தாமே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என, சஜித் அடம்பிடித்தார். இன்று போலில்லாவிட்டாலும், பெருமளவிலான கட்சி ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டனர்.
இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரவே, கட்சியின் அப்போதைய செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்க, சர்ச்சையைத் தீர்க்க, மத்தியஸ்தம் செய்தார்.
கட்சியின் தலைவருக்குப் பதிலாகத் தலைமைத்துவ சபையொன்று அமைக்கப்படும் என்று, ரணில் 2001ஆம் ஆண்டு முதல் வழங்கி வந்த வாக்குறுதியின் பிரகாரம், 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம், கரு ஜயசூரியவின் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய தலைமைத்துவ சபையொன்று அமைக்கப்பட்டது. அதில், சஜித்தும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன்படி, இருவருக்கும் இடையே சுமுக நிலை ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், அந்தக் குழுவுக்குக் கட்சி யாப்பின் மூலம், அதிகாரம் வழங்கப்படவில்லை. அத்தோடு, ஜனாதிபதித் தேர்தல் வரவே, மைத்திரிபாலவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகச் சகலரும் நிறுத்தி, தேர்தல் வெற்றிக்காகப் பாடுபட்டனர். பிணக்கும் தலைமைத்துவ சபையும் மறக்கப்பட்டுவிட்டன.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம், நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், ஐ.தே.க படு தோல்வியடைந்தது. அப்போதும் ரணிலின் தலைமையைப் பலர் விமர்சித்தனர்.
அப்போதும், கட்சித் தலைவருக்குப் பதிலாக, தலைமைத்துவ சபையொன்றை நியமிப்பதாக, தொலைக்காட்சியில் தோன்றி, ரணில் வாக்குறுதியளித்தார். ஆனால், அவ்வாறு சபை எதுவும் நியமிக்கப்படவில்லை. இந்தப் பின்னணியிலேயே, தற்போதைய கிளர்ச்சி உருவாகி இருக்கிறது.
கடந்த இரண்டு கிளர்ச்சிகளுக்குப் பின்னர், நடைபெற்ற தேசிய மட்டத் தேர்தலில், ஐ.தே.க அல்லது அக்கட்சியின் தலைமையிலான கூட்டு, வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
2001ஆம் ஆண்டுக் கிளர்ச்சியை அடுத்து, அதேயாண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஐ.தே.க வெற்றிபெற்று ரணில் பிரதமரானார். 2014ஆம் ஆண்டு, கிளர்ச்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, சில வாரங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஐ.தே.க ஆதரவில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றார்.
இம்முறையும் வரலாறு மீட்டப்படுமா? அல்லது, ஐ.தே.க பிளவுபட்டு படுதோல்வியடையுமா?
எம்.எஸ்.எம். ஐயூப்