ஈராக்கிலும் சிரியாவிலும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐஎஸ் அமைப்பின் குடும்ப உறுப்பினர்களை விடுவிப்பதற்கான தாக்குதல்களை மேற்கொள்ளுமாறு அமைப்பின் தலைவர் அல் பக்தாதி தனது உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்..
திங்கட்கிழமை வெளியாகியுள்ள ஒலிநாட பதிவொன்றில் அவரது இந்த வேண்டுகோள் இடம்பெற்றுள்ளது.
உங்கள் சகோதர சகோதரிகளை விடுவிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்,அவர்களை அடைத்து வைத்துள்ள சுவர்களை இடித்து நொருக்கி அவர்களை காப்பாற்றுங்கள் என அல்பக்தாதி தனது அமைப்பின் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
சிலுவை போரில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது சியா ஆதரவாளர்களால் முஸ்லீம் பெண்கள் அவமானசிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம்களால் எப்படி வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என அல்பக்தாதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா ஆப்கான் ஈராக் புதைகுழியில் மூழ்கியுள்ளது என அரை மணிநேர ஒலிநாடாவில் தெரிவித்துள்ள அல் பக்தாதி அமெரிக்கா தனது சகாக்களை காப்பாற்ற முடியாத நிலையிலுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா முன்னர் போல தற்போது எதனையும் செய்ய முடியாத நிலையில் காணப்படுகின்றது அதன் சகாக்களிற்கு போலியான வெற்று வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கமுடிகின்றது என அல்பக்தாதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சிதைவடையச்செய்வதற்கான நடவடிக்கைகள் பல முன்னரங்குகளில் நாளாந்தம் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்பின் அல் பர்கான் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஒலிநாடா குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற பின்னர் அல்பக்தாதி ஒளிநாடாவொன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal