கோணாவில் பாடசாலையை எரித்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்!

மனித இனத்தின் அறிவுக்கண்ணைத் திறப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இடமாக பாடசாலையே காணப்படுகின்றது. ஒரு மனிதனுக்கு அறிவு, திறன் ஆகியவற்றை வழங்கி அவனது மனப்பாங்கில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி அவனை மனிதனாக்கி வாழ வைப்பதற்குரிய முக்கிய பணியை பாடசலைகளே ஆற்றுகின்றன. இதனால்தான் பாடசாலைகள் இறைவழிபாட்டுத் தலங்களை விட மேலானவையாகப் போற்றப்படுகின்றன.

அறிவுக்கண்ணைத் திறந்து மனிதனை மனிதனாக்கி மனிதனாக வாழவைக்கும் மிகமுக்கிய பணியைச் ஆற்றும் பாடசாலைக்குத் தீ வைத்து எரித்தல் என்பது மனிதன் தனக்குத் தானே தீ மூட்டி தன்னை எரித்துக்கொள்வதுடன் தனது இனத்தையே எரித்து அழித்துக்கொள்வதற்கு ஒப்பானது.

தன்னையும் தன்னினத்தையும் தீயிட்டு எரித்து அழித்தல் போல கிளி.கோணாவில் மகாவித்தியாலயத்திற்குத் தீ மூட்டி அதிபர் அலுவலகத்திலிருந்த அனைத்து ஆவணங்களும் எரித்து அழிக்கப்பட்ட மிக மோசமான மன்னிக்க முடியாத குற்றச் செயல் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ-9 வீதிக்கு மேற்குப் பக்கமாக வசதி வாய்ப்புக்களில் மிகவும் பின்தங்கிய பிரதேசத்தில் அதிகளவு மக்கள் செறிந்து வாழும் கோணாவில் கிராமத்தின் மத்தியில் கிளி.கோணாவில் மகாவித்தியாலயம் அமைந்து காணபடுகின்றது.

இப்பாடசாலையைச் சுற்றி கோணாவில், காந்திக்கிராமம், யூனியன்குளம், ஊற்றுப்புலம், சோலைநகர் போன்ற வசதி வாய்ப்புக்களில் மிகவும் பின்தங்கிய கிராமங்கள் காணப்படுகின்றன. இக்கிராமங்களில் வசிக்கும் மாணவச் சிறார்களே இங்கு கல்வி கற்று வருகின்றனர்..

இக்கிராமங்கள் வசதிவாய்ப்புக்களில் பின்தங்கிய நிலையில் காணப்பட்டாலும் இங்குள்ள சிறார்கள் கல்வி கற்கும் கிளி.கோணாவில் மகா வித்தியாலயத்திற்கான மாணவர்களுக்குரிய வசதிவாய்ப்புக்கள் அனைத்தையும் அரசு வழங்கியுள்ளது. நிறைவான கல்விச் செயற்பாடுகளும் இப்பாடசாலையில் குறைவின்றி இடம்பெற்று வருவதனை மாணவர்களது பெறுபேறுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் கடக்கும் நிலையில், இவ்வருட இறுதியில் வைரவிழா நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வரும் நிலையில் கடந்த 12.09.2019 ஆம் திகதி வியாழக் கிழமை பாடசாலைச் செயற்பாடுகள் அனைத்தும் முடிவடைந்து அனைவரும் பாடசாலையை விட்டு வெளியேறியதன் பின்னர், பின்னிரவு வேளையில் பாடசாலைக்குள் புகுந்த குற்றவாளிகள் பாடசாலைக் கட்டிடத் தொகுதியிலுள்ள அதிபர் அலுவலகத்திற்குள் மண்ணெய் ஊற்றி தீ மூட்டி எரித்து அனைத்து முக்கிய ஆவணங்களையும் சாம்பலாக்கி மன்னிக்க முடியாத மனிதமற்ற பாரிய குற்றத்தைப் புரிந்துள்ளனர். மறுநாள் காலை பௌர்ணமி விடுமுறை நாள் விசேட வகுப்புக்காகப் பாடசாலைக்குச் சென்ற மாணவர்களும் ஆசிரியருமே இதனைக் கண்டு அதிபர் உள்ளிட்ட அனைவருக்கும் அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு விரைந்த பெற்றோர், பழைய மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் தீயை அணைக்க முற்பட்ட வேளையில் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளதனைக் கண்ணுற்றுக் கண்கலங்கி நின்றனர்.

இத்துன்பியல் காட்சியைக் கண்ட மாணவச்சிறார்கள் பலர் கண்ணீர் விட்டு விம்மி விம்மி அழுததனைக் காண்டவர்களது கண்கள் கலங்கின. பாடசாலையின் அலுவலகத்திலிருந்த அனைத்து முக்கிய ஆவணங்களும் எரிந்து சாம்பலாக்கப்பட்டு புகை வெளியேறிக்கொண்டிருப்பதனையும் அங்கு கற்கும் மாணவச் சிறார்களது நிலையையும் நோக்கி நினைக்கவே முடியாத ஒரு துன்பியல் சோக நிலை. அதில் எரிந்து அழிந்தவை அனைத்துமே மாணவர்களது மிகமுக்கியமான ஆவணங்கள்.

மாணவச் சிறார்களது ஒவ்வொரு ஆண்டிற்குமுரிய க.பொ.த.சாதாரணதரம், க.பொ.த.உயர்தரம் உள்ளிட்ட முக்கிய பரீட்சைப் பெறுபேறுகள், மாணவர்களது இணைபாட விதானச் செயற்பாடுகள், போட்டிகளில் பெற்றுக்கொண்ட சானை அறிக்கை ஆவணங்கள், அதிபர், ஆசிரியர்களது முக்கிய ஆவணங்கள், வருட அடிப்படையிலான மாணவர்களது புள்ளிப் பதிவேடுகள், பாடசாலைத் திட்ட,திட்ட முன்னேற்ற அறிக்கைகள், செயற்பாட்டறிக்கைகள், வருட அடிப்படையிலான கல்வி முன்னேற்ற அறிக்கைகள், புகைப்பட ஆதாரங்கள், வரலாற்றாதாரங்கள், வாழ்த்து மடல்கள், வரலாற்றுச் சாதனை ஆவணங்கள், வெற்றிக் கேடயங்கள் என பாடசாலைக்குரிய அனைத்து ஆவணங்களுமே ஈரமற்ற தீய கஜயவர்களது தீயில் எரிந்து நாசமாக்கப்பட்டுள்ளன.

இத்தீயை வைத்த தீயவன் இது பாடசாலை என்பதை ஒரு கணம் தனது மனதில் நினைத்திருப்பானாகவிருந்தால் இப்படிச் செய்திருக்கமாட்டான். இப்பாடசாலைக்குத் தீ வைத்தவன் மனிதப் பிறவியே இல்லை. இப்படியான இழிபிறப்பு இன்னும் இப்பாரில் இயல்பாக உலாவரக்கூடாது. இப்பாரிய குற்றத்தைப் புரிந்த குற்றவாளிகள் விரைவாகக் கண்டறியப்பட்டு இப்பாடசாலையில் கல்வி கற்கும் இந்த மாணவச் சிறார்கள் அறியக்கூடியதாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சட்டப்படி உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இது ஒரு படிப்பினையாக அமைய வேண்டும்.

குற்றம் செய்பவனுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதால் நாட்டில் குற்றவாளிகளும் குற்றச் செயல்களும் அதிகரிப்பதைத் தடுக்க முடியும். குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படாது குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதனால் பல குற்றவாளிகள் உருவாக்கப்படுகின்றார்கள். அவர்களால் குற்றச் செயல்களும் அதிகரித்துச் செல்கின்றன. இது தடுக்கப்பட வேண்டும் இதற்குரிய சிறந்த வழி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்குரிய தண்டனைகளை நிறைவேற்றுவதேயாகும்.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கோணாவில் மகா வித்தியாலயத்தை எரித்து அனைத்து ஆவணங்களையும் சாம்பலாக்கி நாசம் செய்த குற்றவாளிகள் பொலிஸாரினது உரிய நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட வேண்டும். இது இலங்கையில் மிக மோசமான ஒரு குற்றச் செயல் இது கல்வி அமைச்சுடன் தொடர்புடைய விடயம் இவ்விடயத்தில் இலங்கையின் கல்வி அமைச்சர் மிகுந்த கவனம் செலுத்தி இப் பாரிய குற்றத்தைப் புரிந்த குற்றவாளிகளைக் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாடசாலையைத் தீயிட்டு எரித்து இப்பாரிய குற்றம் புரிந்த குற்றவாளிகளைத் தப்பிக்கவிடக்கூடாது. கோணாவில் மகா வித்தியாலயத்தின் அதிபர் அலுவலகத்திற்குத் தீ மூட்டச் சென்றவர்கள் சம்பவம் நடந்த அன்றைய தினம் பின்னிரவு வேளையில்தான் பாடசாலைக்குள் நுளைந்து தீ மூட்டியிருப்பார்கள் என்பது சம்பவம் இடம்பெற்ற சூமலை நோக்கும் போது ஊகிக்க முடிகின்றது.

ஆகவே நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்திற்குரிய தொலைபேசியையே பயன்படுத்துபவர்களாகக் காணப்படுகின்றார்கள். இக்குற்றவாளிகளும் அன்றைய தினம் பாடசாலைச் சூழலுக்குள் கைத்தொலைபேசிகளுடனேயே சென்றிருப்பார்கள். அன்றைய தினம் கைத்தொலைபேசியுடன் அவர்கள் சென்றிருந்தால் அதனைக்கொண்டு பாடசாலை இடவமைப்புக்குள் அன்றைய தினம் இரவு யாரது கைத்தொலைபேசி சமிஞை இருந்துள்ளது என்பதைத் தொலைத்தொடர்பு நிலையத்தின் துணையுடன் அறிந்து குற்றவாளிகளைக் கைது செய்வது சுலபமானது.

பாடசாலையை எரித்த குற்றவாளிகள் தொலைபேசியுடன் சென்றிராது விட்டாலும் பொலிஸாரது உரிய நடவடிக்கைகளின் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்கையாகவுள்ளது.

எதிர்காலச் சந்ததிக்கு நல்வழிகாட்டிக் கல்வி புகட்டும் கல்வி அமைச்சின் திட்டத்தை செயற்படுத்தும் மேலான இடமான பாடசாலைக்குத் தீ மூட்டி எரித்த குற்றவாளிகளைக் கைதுசெய்து உரிய தண்டனை வழங்காது விட்டால் இப்படியான மிகமோசமான குற்றவாளிகள் பல இடங்களிலும் உருவாகி துணிவுடன் இப்படியான பாரதூரமான குற்றங்களைப்புரிய அவர்களுக்கு வாய்ப்பாக அமையும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்! இப்படியான குற்றங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது தடுக்கப்பட வேண்டும்!

-சி.சிவேந்திரன்-