இந்தோனேசிய காட்டுத் தீ: சட்டவிரோதமாக காடுகள் எரிப்பா?

காட்டுத் தீ தொடர்பாக மலேசியாவும், இந்தோனேசியாவும் மாறிமாறி குற்றஞ்சாட்டி வந்த நிலையில் இது தொடர்பாக 200 பேரை இந்தோனேசியா கைது செய்துள்ளது

இதுகுறித்து இந்தோனேசிய போலீஸார் போலீஸார் தரப்பில், ‘ இந்தோனேசியாவின் மழைக் காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் 200 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காட்டுத் தீ விபத்து விவசாயத்திற்காக காடுகளை சட்டவிரோதமாக எரிப்பதனால் ஏற்படுகிறது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் மழைக் காடுகள் அமைந்துள்ள சுமத்ரா மற்றும் போர்னியோவில் கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் கடுமையான காற்று மாசு மற்றும் உடல்நலம் பாதிப்பு போன்றவை ஏற்படும் சூழல் உருவானது.

இதனைத் தொடர்ந்து காட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 ராணுவ வீரர்களை இந்தோனேசிய அரசு அனுப்பியது.சுமார் 239 மில்லியன் தண்ணீர் இதுவரை காட்டுத் தீயை அணைக்கப் பயன்படுத்தப்பட்டன. 5,062 தீ ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டன என்றும் இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்திருந்தது.

இந்தோனேசிய – மலேசியா மோதல்

இந்தோனேசிய காட்டுத் தீ காரணமாக கடுமையான காற்று மாசை சந்தித்து வருவதாக மலேசியா தெரிவித்தது.

மலேசியாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு எல்லாப் புகையும் இந்தோனேசியாவிலிருந்து வந்தவை அல்ல. காற்று மாசு மலேசியாவால்தான் உருவாகியுள்ளது இந்தக் காட்டுத் தீக்கு மலேசியாவில் உள்ள இரண்டு தொழிற்சாலைகள்தான் காரணம் என்று இந்தோனேசியா குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.