முஸ்லீம்களின் ஆடை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வினை இந்த அரசு பெற்றுத் தர வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
சபையின் 17 வது அமர்வு இடம்பெற்ற போதே அவர் இக்கோரிக்கையினை முன்வைத்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்
பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டிலே ஆடை சுதந்திரம் என்பது சட்டத்தால் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருந்தாலும் ஆங்காங்கு சில கசப்பான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
சட்டமானது சுற்றறிக்கை , வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக காலத்திற்கு காலம் தெளிவு படுத்தப் பட்டும் அதனை அறிந்திராத, அல்லது தவறான புரிதல்களைக் கொண்ட சில அரச அதிகாரிகளினால் பாடசாலைகள், பரீட்சை மண்டபங்கள், வைத்திய சாலைகள் போன்ற இடங்களில் வேண்டுமென்றே ஏற்படுத்துகின்ற இன்னல்களுக்கு முஸ்லீம் பெண்களும் மாணவிகளும் ஆளாகின்றனர்.
பரீட்சைகளின் போது எங்கேனும் ஓரிடத்தில் மேற்பார்வையாளர்களினால் இவ்வாறான இன்னல்களுக்கு முகங்கொடுப்பதோடு பரீட்சார்த்திகள் மனோநிலையாலும் பாதிக்கப் படுகின்றனர்.
அதே போன்று வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளும், தங்கி சிகிச்சை பெறுபவர்களும், பயணிகளும் இவ்வாறான பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதும் அவ்வப்போது ஆட்சியாளர்கள் தற்காலிக தீர்வு வழங்குவதும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
எனவே இனிமேலும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படாதவாறு சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உரிய முறையில் அறிவிப்பதன் மூலம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு முஸ்லீம்கள் கலாச்சார ரீதியான ஆடை அணிவதில் இருக்கின்ற பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வினை பெற்றுத் தந்து அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.