நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் “20”ஆம் திருத்தத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அமைச்சரவையில் சமர்ப்பித்து அமைச்சரவை அங்கீகாரத்தைக் கோரவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலையில் அமைச்சரவை கூடுகின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் 20ஆம் திருத்த சட்ட யோசனை அமைச்சரவை அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரதான காரணியை உள்ளடக்கி ஏனைய சில விடயங்களுடன் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் மூலமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வர்த்தமானியில் வெ ளியிடப்பட்டு பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்துக்கு கொண்டு
வரப்பட்டது. எனினும் கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் பிரதான கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் பிரதமர் -ஜனாதிபதிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக 20ஆம் திருத்தம் கவனத்தில் கொள்ளாது கைவிட்டபடியே இருந்தது.
பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதலை அடுத்து கட்சிகள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இப்போது நீக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருந்தன. இந்நிலையிலேயே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20ஆம் திருத்தம் குறித்து மீண்டும் கவனம் செலுத்தப்படுகின்றது.
இன்று அமைச்சரவை காலை 10 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூடவுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த 20ஆம் திருத்தத்தை சமர்ப்பிக்கவுள்ளார். இதில் பிரதானமாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் காரணிகளே உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
Eelamurasu Australia Online News Portal