ஆஸி.யில் பறவையின் தாக்குதலுக்கு ஆளானவர் மரணம்!

பறவையிடமிருந்து தப்பிக்க முயல்கையில், வேகமாக துரத்திவந்த பறவை தாக்கியதில், தலையில் காயம்பட்டு 73 வயது சைக்கிள் பயணி ஒருவர் இறந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளதாக ஆஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஆல்பர்ட் ஹிட்ச்காக் படத்தில் வருவது போன்று பறவை தாக்கி மனிதன் இறந்த இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து ஊடகங்கள் கூறியுள்ளதாவது:

சிட்னிக்கு தெற்கே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், வொல்லொங்கொங்கின் வடக்கு புறநகர்ப் பகுதியான வூனோனாவில் இச்சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது. அங்குள்ள நிக்கல்சன் பூங்காவின் வேலியை ஒட்டியப் பகுதியில் இந்த பயணி தனது சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப் பாதையிலிருந்து வெளியேறும்போது சைக்கிள் தலையில் மாக்பி, என்ற பறவை வந்து வேகமாக தாக்கியதில் தலையில் காயம் பட்டுள்ளது.

இதனால் தரையில் வீசப்பட்டவரை சற்றுத் தொலைவில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துகொண்டிருந்தது. விரைவாக, அந்த நபர் சிட்னியின் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு மாலையில் இறந்தார் என்று போலீசார் தெரிவித்தனர்.

பூங்கா அருகே சைக்கிளில் சவாரி செய்து கொண்டிருந்தவருக்கு ஏற்பட்ட தாக்குதல் குறித்து தெரிவித்த உள்ளூர்வாசிகள் அவரது தலையில் ஆக்ரோஷமாக தாக்கிவிட்டுச் சென்ற மாக்பிதான் குற்றவாளி என்று தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியா முழுவதும் மாக்பீக்களைக் கண்காணிக்கும் மாக்பி எச்சரிக்கை வலைத்தளம், இப்பகுதியில் சுமார் எட்டு தாக்குதல்களைக் காட்டுகிறது.

மாக்பி, ஆஸ்திரேலிய நாட்டின் முக்கியமான பறவை, வசந்த காலத்தை ஒட்டியே இந்தப் பறவையின் இனப்பெருக்கக் காலம். இத்தகைய காலகட்டத்தில்தான் அது கொஞ்சம் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளுமாம்.

வொல்லொங்கொங் நகர சபை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

நகர சபை இப்போது சம்பவம் நடந்த பாதைகளில் எச்சரிக்கை அறிகுறிகளையும் அபாய அறிவிப்புகளையும் வைத்துள்ளோம். எந்தவொரு அச்சுறுத்தும் மாக்பீஸ்கள் பற்றியும் சபையை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். எப்போதும் நகரசபை உதவி செய்ய காத்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியாவின் வசந்த காலத்தில் மாக்பி பறவைகளின் தாக்குதல் நாடு முழுவதும் நிகழ்கிறது.

ஆஸ்திரேலியாவின் இந்தப் பறவைகள் ஆகஸ்டில் இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன, மேலும் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க அது சில தாக்குதலில் ஈடுபடுகின்றன. மற்றபடி அதற்கு வேறு நோக்கங்கள் இல்லை. இதற்கு முன்னரும் பலமுறை மாக்பி தாக்குதல்கள் இதே பூங்காவில் நடந்துள்ளன.

இவ்வாறு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய மாக்பி என்பது ஐரோப்பிய பறவையின் பெயரைக்கொண்டிருந்தாலும் இது வேறுபட்ட இனமாகும், இனச்சேர்க்கை காலத்தில், யாராவது தங்கள் பாதைகளில் குறுக்கே வருவதுபோல தென்பட்டால் ஆக்ரோஷத்துடன் தனது எல்லையைத் தாண்டி வந்து மனிதர்களைத் தாக்கும்.

சிட்னி கவுன்சிலைச் சேர்ந்த சில உள்ளூர் வனச்சரகர்கள் ஒரு “அசுரன்” மாக்பியை சுட்டுக் கொன்றனர். இது பெரும் சர்ச்சையைத் தூண்டியது, இது பல ஆண்டுகளாக குடியிருப்பாளர்களை அச்சுறுத்தியதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது.

குறிப்பாக மாக்பி ஆக்ரோஷமான பறவை நகரின் வடமேற்கில் உள்ள ஹில்ஸ் ஷையரில் பலரைத் தாக்கி, சிலரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.