ஹாங்காங்கை சீனாவிடம் இருந்து மீட்க இங்கிலாந்து உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹாங்காங்கில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் ‘ஒரு நாடு இரண்டு நிர்வாகம்’ என்கிற கொள்கையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்து வருகிறது.
இந்த சூழலில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்போது சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரும் போராட்டமாக உருவெடுத்து உள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து ஹாங்காங்கை விடுவிக்கக்கோரி ஜனநாயக ஆதரவாளர்கள் போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வுகாண சர்வதேச நாடுகளின் ஆதரவை ஹாங்காங் போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர்.
அந்த வகையில் ஹாங்காங்கை சீனாவிடம் இருந்து மீட்க இங்கிலாந்து உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹாங்காங்கில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு நேற்று நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
இங்கிலாந்தின் தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தி போராடிய அவர்கள், “கடவுள் இங்கிலாந்து ராணியை காப்பாற்றுவார், இங்கிலாந்து, ஹாங்காங்கை காப்பாற்ற வேண்டும்” “ஒரு நாடு இரண்டு நிர்வாகம் என்கிற திட்டம் காலாவதியாகிவிட்டது” போன்ற கோஷங்களை முழங்கினர்.
அத்துடன், “1997-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஹாங்காங்குக்கு உரிய தன்னாட்சி அதிகாரத்தை சீனா வழங்கியிருக்கிறதா என்பதை இங்கிலாந்து உறுதி செய்ய வேண்டும்” எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.