யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீட்டிலிருந்தவர்களை தாக்கி கொள்ளையிட்டார் என்ற சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரை கைது செய்துள்ளதாக சுன்னாகம் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்தக் கொள்ளைச் சம்வம் இணுவில் பகுதியில் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
இணுவில் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் சத்தம் கேட்டமையினால் வீட்டின் குடும்பத் தலைவர் கதவை திறந்துள்ளார் அப்போது முகத்தை முழுமையாக மூடியவாறு கூரிய ஆயுதங்களுடன் நின்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் குடும்பத் தலைவரை கடுமையாக தாக்கியதுடன் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
அங்கிருந்த அவரது மனைவியையும் பிள்ளைகளையும் தாக்கியதுடன் வீட்டியிலிருந்த மடிக்கணினி கையடக்கத்தொலைபேசிகள் என்பவற்றை கொள்ளையடித்தனர் மேலும் வீட்டிலிருந்த பெண்மணி அணிந்திருந்த தோட்டினையும் அபகரித்துள்ளனர்.
இதையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவல் துறை நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்தச் சம்வம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல் துறை புன்னாலைக் கட்டுவன் பகுதியைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தில் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து வீட்டில் திருடப்பட்டதாகக் கூறப்படும் மடிக்கணினியையும் அவரிடமிருந்து மீட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் இராணுத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் சுன்னாகம் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.