அரச தொலைக்காட்சி ரூபவாஹினியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாகப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட அவருடைய இந்தத் திடீர் நடவடிக்கை ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது. இதனால் பலதரப்பிலிருந்து கவலையும் கண்டனமும் வெளியிடப்பட்டிருக்கின்றது.
அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்ற அல்லது அதன் பொறுப்பிலுள்ள ஒரு நிறுவனம் அரச சார்புடையதாகவே இருக்கும். அரச சார்புடையதாகவே செயற்படும் என்ற பொதுவான கருத்தியல் நாட்டில் நீண்ட காலமாகவே நிலவுகின்றது. அரச சார்புடையதாகக் கருதப்படுகின்ற அல்லது அரசுக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற ஒரு நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தால் என்ன அல்லது ஓர் அமைச்சின் கீழ் இருந்தால் என்ன, எல்லாம் ஒன்றுதானே என்ற கேள்வி எழலாம்.
அரச நிறுவனம் ஒன்றின் ஊடாக அரசாங்கம் தனது நிலைப்பாடு மற்றும் அதன் கொள்கை நிலை செயற்பாடுகளை வெளிப்படுத்துவதில் தவறேதும் இருக்க முடியாது.
அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மைக்கு அது அவசியம். ஆனால், அரசாங்கம் என்ன செய்கின்றது, எவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காக ரூபாவாஹினி கடந்த காலங்களில் எவ்வாறு மிகத் தீவிரமாகச் செயற்பட்டிருந்தது என்பதை நாட்டு மக்கள் மறந்துவிட முடியாது. அது அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை, நியாயமானவை என்ற அரசியல் பிரசாரம் சார்ந்து இருந்தன. அதனால், அதன் நம்பிக்கைத் தன்மை மக்கள் மத்தியில் கேள்விக்குறிக்கு ஆளாகி இருந்தது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளே சரியானவை என நியாயப்படுத்துவதற்கான பிரசார ஊடகமாக அரச நிறுவனம் ஒன்றைப் பயன்படுத்துவதை முறையானதொரு செயற்பாடாகக் கருத முடியாது. அது ஆட்சி அதிகாரத்திலுள்ள கட்சியினதும், ஆட்சியாளர்களினதும் சுய அரசியல் இலாபங்களைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறைச் செயற்பாடாகவே இருக்க முடியும். அந்த வகையிலேயே ரூபவாஹினி கடந்த காலங்களில் ஆட்சியாளர்களினால் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதுவே இந்த நாட்டின் கடந்த கால அனுபவம்.
இந்த அனுபவத்தின் பின்புலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரூபாவாஹினியை தொலைக்காட்சி நிறுவனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் நேரடிப் பொறுப்பில் திடீரென கொண்டு வந்துள்ளதை ஒரு சாதாரண நடவடிக்கையாகக் கருத முடியாதுள்ளது. அதற்குத் தகுந்த காரணங்கள் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. அதேவேளை, தவிர்க்க முடியாத தேவையொன்றின் அடிப்படையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.
இதனால், ஏற்கனவே அரசாங்க பொறுப்பின் கீழ் செயற்பட்டு வருகின்ற ஒரு நிறுவனத்தை அதுவும் ஓர் ஊடக நிறுவனத்தை விசேடமாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும், என்ன நடந்தது, என்ன நடக்கப்போகின்றது என்ற ஐயப்பாடு மிகுந்த கேள்விகள் எச்சரிக்கை மிகுந்த அச்ச உணர்வுடன் எழுந்திருப்பதைக் காண முடிகின்றது.
அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்தது
யுத்த மோதல்கள் இடம்பெற்ற காலங்களில் ரூபவாஹினி தொலைக்காட்சி அரசாங்கத்தின் முழுமையான ஊதுகுழலாக, அதன் பிரசார பீரங்கியாகவே செயற்பட்டு வந்தது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராகவே அரச படைகள் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன. படையினர் பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்காக பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டினார்கள் என்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக இந்த தொலைக்காட்சி சேவை பயன்படுத்தப்பட்டிருந்தது.
ரூபவாஹினியை ஓர் ஊடக நிறுவனமாக, யுத்தகளத்தின் உண்மையான நிலைமைகளை மக்களுக்கு வெளிப்படுத்துகின்ற ஓர் ஊடகமாக அப்போது அரசு பயன்படுத்தவில்லை. அதனைப் பொது நிலை – நடுநிலையிலிருந்து செயற்படுவதற்கு அனுமதிக்கவில்லை. விடுதலைப்புலிகளை வெறுமனே பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, அரசாங்கத்தின் எதிரிகளாக மட்டுமல்லாமல், நாட்டு மக்களின் எதிரிகளாக உருவகித்துக் காட்டுவதற்காக அந்தத் தொலைக்காட்சிச் சேவை முழு அளவில் பயன்படுத்தப்பட்டது.
யுத்த மோதல்களின்போது நாட்டில் இரண்டு பிரிவினர் மாத்திரமே இருக்கின்றார்கள். அதாவது பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் என்றும் இரண்டு பிரிவினர் மாத்திரமே இருக்க முடியும். இருக்க வேண்டும் என்று அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும், அவருடைய சகோதரராகிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவும் சூளுரைத்துச் செயற்பட்டிருந்தார்கள்.
இதனால் இராணுவ நடவடிக்கைகளில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பற்றி குறிப்பிடுகையில், ரூபவாஹினியின் செய்தியாளர்கள் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்பதைக் கூறிவிட்டு, இராணுவத் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புக்களை ‘எங்களில் …….. இராணுவ வீரர்களை பயங்கரவாதிகள் மிலேச்சத்தனமாகக் கொன்றார்கள்’ என்ற சொற்பதங்களைப் பிரயோகித்து செய்தி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்தளவுக்கு ரூபவாஹினி என்ற தொலைக்காட்சி ஊடகம் ஊடகத்திற்குரிய நடுநிலை தவறி, ஆட்சியாளர்களினால் சுயலாப அரசியலில் தன்மயப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் அரசாங்கத்தின் முழுமையானதோர் அதீத பிரசார ஊதுகுழலாகக் கருதப்பட்ட ரூபவாஹினியின் செய்திகளில் நடுநிலை ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் நம்பிக்கை இழந்திருந்தனர். யுத்த மோதல்களில் அரசாங்கத் தரப்பின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படுத்துவதற்கான ஆதாரமாகவே ரூபவாஹினியை அவர்கள் மேற்கோள் காட்டினர்.
யுத்த காலத்தில் மட்டுமல்ல யுத்தத்தின் பின்னரும் ஆட்சியில் நீடித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான 6 வருட ஆட்சிக் காலத்திலும்கூட இத்தகைய நிலைமையே நீடித்திருந்தது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய 2015 ஆம் ஆண்டின் பின்னர் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. எனினும் ஜனாதிபதியின் திடீர் நடவடிக்கை காரணமாக ரூபவாஹினி மீண்டும் தனது பழைய நிலைக்குத் திரும்புவதற்கான வழி திறந்துவிடப்பட்டுள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.
அதிகாரப் போட்டி
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகள் நியாயப்பாடான ஒரு போக்கிலேயே தென்பட்டன. ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி ரூபவாஹினியின் போக்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்றே கூற வேண்டும்.
ஏனெனில் இருகட்சி அரசாங்கத்தின் உயர் தலைவராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சில நடவடிக்கைகளை எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் போன்ற அணுமுறையுடன் ரூபவாஹினி அரசியல் ரீதியாக விமர்சனம் செய்திருந்தது. தனக்கு எதிரான முறையில் முன்னெடுக்கப்பட்ட ரூபவாஹினியின் இந்த விமர்சனப் போக்கு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படையாகவே தனது அதிருப்தியையும் மனக்கிலேசத்தையும் வெளியிட்டிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி, ஒரு காலத்தில் தங்கள் இருவரது அரசியல் எதிரியாகக் கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை அரசியலமைப்புக்கு முரணான வகையில் பிரதமராக நியமிக்கும் அளவுக்கு அதிகாரப் போட்டி தீவிரம் பெற்றிருந்தது.
அதிகாரப் போட்டி என்று வரும்போது, ஜனநாயகத்தின் மீதான பற்று மக்கள் நலன்கள் மீதான கரிசனை போன்றவையெல்லாம் துச்சமாக மதிக்கப்படுகின்றன. இந்த வகையில்தான் 2018 ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் புரட்சியொன்றை ஏற்படுத்தி நாட்டையே நெருக்கடி நிலைக்குள் தள்ளியிருந்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தை இணைந்து உருவாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அரசியல் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ள ஒரு பின்னணியில் தனது நிறைவேற்று அதிகார சக்தியைப் பயன்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நடவடிக்கைகளைத் துணிவுடன் மேற்கொண்டு வருகின்றார்.
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலைமைகளைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்தாலோசிக்காமலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவேந்திர சில்வாவுக்குப் பதவி உயர்வு வழங்கி நாட்டின் இராணுவத் தளபதியாக நியமித்தார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பில் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவை உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இராணுவத் தளபதியாக்கியதன் மூலம் அவர் கடும் கண்டனங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
கண்டனமும் மறுப்பும்
மனித உரிமை அமைப்புக்களைப் போலவே ஜனநாயக சக்திகள், ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள் மட்டுமல்லாமல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, அந்த நியமனத்தை மீளப்பெற வேண்டும் என கோரியிருந்தன. கண்டனங்கள், அழுத்தங்கள், வேண்டுகோள்கள் அனைத்தையும் புறந்தள்ளிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்தி சமாதானம், ஐக்கியம், நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான நிகழ்ச்சிகளை வெளியிடுவதற்காக ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலையொட்டி அரசியல் களம் சுறுசுறுப்படைந்துள்ளது. வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கட்சிகள் முனைந்துள்ள நிலைமையும், தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள் தமது கொள்கைப் பிரகடன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலைமையும் அந்த களத்தைப் பரபரப்பான ஒரு சூழலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
இத்தகைய தேர்தல் கால சூழமைவிலேயே ரூபவாஹினியை ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்துள்ளார். ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையிலான அரசியல் அதிகாரப் போட்டி தீவிரமடைந்துள்ள ஒரு நிலையிலேயே இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நியமித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் களத்தைக் கருத்திற்கொண்டு அரசியல் உள்நோக்கத்துடன், சட்டவிரோதமாக ரூபவாஹினியைத் தனது கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சின் கீழ் அவர் கொண்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.
ஆயினும் அந்தக் குற்றச்சாட்டை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய வீரகுமார திசாநாயக்க மறுத்துரைத்துள்ளார். ஜனாதிபதி தனது அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலையிலேயே ரூபவாஹினியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். அவர் தனது அதிகார வரம்புக்கு உட்பட்ட வகையிலேயே செயற்பட்டுள்ளார். ஆனாலும் சிலர் ஜனாதிபதி சட்டவிரோதமாக தன்னிச்சையாகச் செயற்பட்டுள்ளார் என தவறாகக் கற்பிதம் செய்து அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்கள். ஆனால் ஜனாதிபதி தனக்குள்ள அதிகார வரம்புக்கு உட்பட்ட வகையிலேயே செயற்பட்டுள்ளார் என வீரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.
ரூபவாஹினியின் செயற்பாடுகளை மேம்படுத்தி அதன் நிகழ்ச்சிகளை சீர் செய்கின்ற நடவடிக்கைகள் தாமதப்படுத்தப்பட்டிருந்தன. அதனால் அந்த நிறுவனத்தின் நன்மைக்காகவே ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சின் கீழ் அதனைக்கொண்டு வந்துள்ளார் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
ஆனால் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத ஊடகத்துறை அமைச்சின் கீழிருந்த ரூபவாஹினி நிறுவனத்தின் காணொளி காணொலி நிகழ்ச்சிகளில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி சமாதானம், ஐக்கியம், நல்லிணக்கம் என்பனவற்றை உருவாக்கும் வகையிலேயே அந்த நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்படுவதாக அரச வர்த்தமானியில் வெளி யிடப்பட்ட அறிவித்தலில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
குழப்பகரமான நடவடிக்கை
அரச ஊடக நிறுவனத்தின் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உண்மையில் எழுந்துள்ளதா என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதைப் பின்னணியாகக் கொண்டுதான் நாட்டில் சமாதானம், ஐக்கியம் நல்லிணக்கம் என்பனவற்றை உருவாக்க வேண்டி இருக்கின்றதா என்பதற்கான விளக்கங்களும் ஜனாதிபதி தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.
ஆனால் ரூபவாஹினி நிறுவனத்தின் நிர்வாகச் செயற்பாடுகளிலும், அந்த நிர்வாகத்திற்கான ஆளணி நியமனத்திலும் சீர்கேடுகள் இடம்பெற்றிருந்தன, குழப்பங்களும் நேர்ந்திருந்தன என்ற காரணத்தைக் காட்டி இந்த அமைச்சு மாற்றம் இடம்பெற்றுள்ளது என்ற விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அமைச்சரவை அந்தஸ்து பெறாத அமைச்சராகிய ருவான் விஜேவர்தனவின் கீழ் செயற்பட்டு வந்த ரூபவாஹினியின் நிர்வாகச் செயற்பாடுகள் திருப்திகரமாக அமைந்திருக்கவில்லை என்ற காரணமும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் தனது பொறுப்பின் கீழ் இருந்த ரூபவாஹினி நிறுவனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் மாற்றியபோது, அதுகுறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை. அதுபற்றிய தகவல்கள் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று அமைச்சர் ருவான் விஜேவர்தன செய்தியாளர்களுடனான சந்திப்பில் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை நியமங்களுக்கு முரணானது என காரமான வார்த்தைப் பிரயோகம் கொண்ட ஒரு கடிதத்தை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நிர்வாகக் கட்டமைப்புக்கு உரிய ஆளணி நியமிக்கப்பட வேண்டும் என்பதை, தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும் தன்னால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் அந்த கூட்டுத்தாபனத்தின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதை ஜனாதிபதியே தடுத்திருந்தார் என்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் அந்த நிறுவனத்தைக் கொண்டுவந்து அறிவித்துள்ளமை குழப்பகரமான நடவடிக்கை என்றும் ருவான் விஜேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்த காலத்தில்கூட ரூபவாஹினி கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கொண்டு வரப்படவில்லை என்பதைக் கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது என்றும், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையானது, நாட்டின் ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் என்ற வெளிப்படுத்தலைத் தடுக்க முடியாது என்றும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தராகிய அமைச்சர் மங்கள சமரவீரவின் பொறுப்பில் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இருந்தபோதே அரசியல் ரீதியான அரசல் புரசல் உருவாகியிருந்தது. பின்னர், அது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த, ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவராகிய ருவான் விஜேவர்தனவின் பொறுப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த நிறுவனம் தொடர்பில் கட்சி ரீதியாக ஜனாதிபதியுடன் ஏற்பட்டிருந்த இழுபறி நிலைமை முடிவுக்கு வரவில்லை.
அத்தகைய ஒரு நிலையிலேயே ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தேசிய பாதுகாப்பை உள்ளடக்கி, சமாதானம், ஐக்கியம், நல்லிணக்கம் என்ற அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்ச்சிகளின் ஊடாக நாட்டு மக்களின் பொழுதுபோக்கு அம்சம் சீர்செய்யப்பட வேண்டும் என்பதை நிலைநிறுத்துவதாகக் கூறி ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச் சின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டு வந்துள்ளார்.
இந்த நடவடிக்கை ஊடக சுதந்திரத்துக்கு விரோதமானது என்றும் தேர்தல் காலச் சூழலில் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டிய கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலானது என்றும் ஊடக சுதந்திர ஊடக இயக்கம் உழைக்கும் ஊடகவியலாளர்கள் அமைப்பு போன்ற அமைப்புக்கள் கண்டனம் வெளி யிட்டுள்ளன. ஜனாதிபதி தனது தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புக்கள் கோரியிருக்கின்றன.
உண்மையில் ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கட்சி ரீதியாக எழுந்துள்ள அரசியல் அதிகாரப் போட்டியின் விளைவாகவே ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஊடக நிறுவனங்கள் சுதந் திரமாகக் கட்டுப்பாடுகளின்றி செயற்பட வேண்டிய ஒரு காலச்சூழலில் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முதற்படியாகவே ரூபவாஹினி விவகாரம் கையில் எடுக்கப் பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
அரச நிறுவனமாகிய ரூபவாஹினிக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்ந்து ஏனைய அரச சார்பற்ற ஊடக நிறுவனங்களுக்கும் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகளுக்கான சமிக்ஞைகளே ஜனாதிபதி தேர்தலையொட் டிய அரசியல் சூழலில் காணப்படுகின்றது. இது கவலைக்குரியது. ஆபத்தானது.
பி.மாணிக்கவாசகம்