ஜனாதிபதி தேர்தல் விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான அடுத்தகட்ட நகர்வுகளிலும் அரசியல் பேச்சுக்களிலும் ஈடுபட்டுவருகின்றன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் தேர்தல் ஆணைக்குழு பிரதிநிதிகள் ஈடுபட்டுவருகின்ற சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன ஜனாதிபதி தேர்தலை நோக்கியான மக்கள் கூட்டங்களை நடத்திவருகின்றன. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷ தினமும் மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டு உரையாற்றிவருகின்றார். பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் தொடர்ந்து கோத்தபாயவுக்கான மக்கள் கூட்டங்களை நடத்திவருகின்றனர்.
அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியும் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் தனது வேட்பாளரை ஆதரித்து தேர்தல் கூட்டங்களை நடத்திவருகின்றன. இவ்வாறு ஜனாதிபதி தேர்தல் விவகாரம் நாட்டில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியுமே இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் புரியாத புதிரை வெ ளிக்காட்டிவருகின்றன.
சுதந்திரக் கட்சி தனி வேட்பாளரை அறிவிக்குமா? அல்லது ஏதாவது ஒரு பிரதான கட்சிக்கு ஆதரவளிக்குமா? என்ற விடயத்தை இதுவரை தெளிவான முறையில் அறிவிக்காமல் உள்ளது. சுதந்திரக் கட்சியை பொறுத்தவரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலைவிட அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலையே இலக்கு வைத்துள்ளதாக தெரிகின்றது. ஜனாதிபதி தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்காமல் ஒரு வகிபாகத்தை வகித்துவிட்டு பாராளுமன்ற தேர்தலில் யார் ஆட்சியமைப்பது என்பதனை தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதே சுதந்திரக் கட்சியின் நோக்கமாக இருப்பதாக தெரிகின்றது. கடந்தவாரம் இப்பகுதியில் நாம் அது தொடர்பில் அலசி ஆராய்ந்திருந்தோம்.
ஆனாலும் சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் தனது முடிவு தொடர்பில் புதிர்போட்ட வண்ணமே உள்ளது. ஒரு முடிவை சரியாக அறிவிக்காமல் இருக்கின்றது. இது அரசியல் களத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையாகும். சுதந்திரக் கட்சியின் நடவடிக்கைகளை பார்க்கும்போது பொதுஜன பெரமுன பக்கமே சார்ந்துபோகும் என்பது தெளிவாக தெரிகின்றது. ஆனால் மொட்டு சின்னத்தை ஏற்றுக்கொள்வதில் சுதந்திரக் கட்சிக்கு பாரிய தயக்கம் காணப்படுகின்றதாகவே தெரிகின்றது. மொட்டு சின்னம் அல்லாது வேறு
சின்னத்தில் வந்தால் பொதுஜன பெரமுனவுடன் இணைவது குறித்து பரிசீலிக்கலாம் என்று சுதந்திரக் கட்சி தொடர்ச்சியாக தெரிவித்துவருவதை காணலாம்.
நிலைமை இவ்வாறு இருக்க ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி மக்களைப்படுத்தும் பாடு பெரும்பாடாக இருக்கின்றது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் மக்களும் குழம்பியுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளேயே பாரிய குழப்பங்கள் நீடித்துவருகின்றன. தற்போதைய நிலையில் வேட்பாளர் பதவிக்காக ஐக்கிய தேசிய கட்சிக்குள் மும்முனை போட்டி இல்லாமல் போய்விட்டது. போட்டிக் களத்தில் சபாநாயகர் கருஜயசூரியவின் பெயர் இருந்தாலும் தற்போது ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் பெயர்களே அதிகளவில் பேசப்படுகின்றன. போட்டிக்களத்தில் இவர்கள் இருவருமே இருப்பதாக தெரிகின்றது.
ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே விட்டுக்கொடுப்பதாக இல்லை. தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்பதில் ரணில் விக்பிரமசிங்கவும் தீவிரமாக இருப்பதுடன் அதற்கான இராஜதந்திர நகர்வுகளிலும் அணுகுமுறையிலும் ஈடுபட்டுவருகின்றார். அதேபோன்று அமைச்சர் சஜித் பிரேமதாசவும் தானும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டே தீருவேன் என்பதில் உறுதியாக இருப்பதுடன் நாட்டின் பல பகுதிகளிலும் அவருக்கு ஆதரவான கூட்டங்களையும் நடத்திவருகின்றார். அந்தக் கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றும் சஜித் பிரேமதாச தான் நிச்சயமாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்பதனை உறுதியாக கூறிவருகின்றார்.
இந்த நிலையில்தான் ஐக்கிய தேசிய கட்சிக்குள் வேட்பாளரை தெரிவு செய்வதில் பாரிய முரண்பாடுகளும் இழுபறி நிலைமைகளும் நீடித்துவருகின்றன. இருவரில் எவருமே விட்டுக்கொடுப்பதாக இல்லை. இந்த சூழலில் கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
அதன்போது தான் கட்சியின் சார்பில் இம்முறை தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கின்றேன் என்ற வகையில் கருத்து வெளியிட்டிருக்கின்றார். அவர் இவ்வாறு நேரடியாக கூறினார் என்பதனைவிட அந்த தொனியில் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
எனினும் இதன்போது கலந்துரையாடலில் பங்கேற்றிருந்த சஜித் ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க சற்று முரண்பாடான நிலை தோன்றியுள்ளது. இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரை நேரடியாக சந்திக்க வைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல தடங்கல்களுக்கு பின்னர் இந்த சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் நீண்டநேரம் இந்த விடயம் குறித்து பேசப்பட்டுள்ள போதிலும் இணக்கப்பாடுகள் எதுவுமின்றி சந்திப்பு நிறைவடைந்துள்ளது. இதன்போது இருவருமே தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளனர். எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில முக்கிய விடயங்களை முன்வைத்திருக்கின்றார்.
இதேவேளை அமைச்சர் சஜித் பிரேமதாசவும் சில விடயங்களை உறுதியாக முன்வைத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் மக்களின் ஆதரவும் தனக்கு கிடைத்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதித் தலைவர் சஜித், தான் ஒருபோதிலும் கட்சியின் யாப்பினை மீறிய எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்பதை எடுத்துக்கூறியுள்ளார். தான் கட்சிக்குள் வீணான குழப்பங்களை ஏற்படுத்தவில்லை எனவும் கட்சியையும்
அரசாங்கத்தையும் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கமே தனக்கு இருப்பதாக அவர் பிரதமரிடம் எடுத்துக்கூறினார்.
எனினும் இதன்போது கருத்து கூறிய பிரதமர் ரணில், கட்சியாக எடுக்கும் தீர்மானங்களுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும். இதில் எவரும் நினைத்தால் போல் செயற்பட முடியாது. கட்சிக்குள் ஆதரவு இருக்குமானால் அதனை கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசி தீர்வு காண முடியும். வெளியில் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின்னர் முக்கியமான விடயம் ஒன்றை பிரதமர் முன்வைத்துள்ளார். அதாவது நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவதென்றால் கட்சியின் சகல தரப்பின் அல்லது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். அது மட்டுமல்லாது ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகள் மற்றும் தமிழ் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ளவும் புதிதாக இணைய இணக்கம் தெரிவிக்கும் கட்சிகள், வடக்கு, கிழக்கின் பிரதிநிதிகள் ஆகியோரின் இணக்கத்தை பெற்றுகொண்டால் உரிய தீர்மானம் எடுக்க முடியும் என அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதனை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டதாகவே தெரிகின்றது. அதன்படி தமிழ், முஸ்லிம் கட்சிகள், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துள்ள சிங்கள கட்சிகள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகளை சஜித் நடத்தி வருகின்றார். அதன்படி வார இறுதியில் இன்று அல்லது நாளை இது தொடர்பில் கட்சிக்குள் பேச்சு நடத்தி இறுதி தீர்மானம் எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் இவ்வாறு அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கூறியமைக்கும் காரணங்கள் இருக்கலாம். காரணம் ஐக்கிய தேசிய முன்னணியில் கூட்டு வைத்துள்ள சிறுபான்மை கட்சிகள் தன்னையே ஆதரிக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் கணக்கு போடலாம். எனவே கூட்டணி வைத்துள்ள சிறுபான்மை கட்சிகள் தன்னையே ஆதரிப்பதாக கூறினால் தான் வேட்பாளராகுவதில் சிக்கல் இல்லை என்று பிரதமர் கருதுகிறார். எனவே அவ்வாறு ஒரு அரசியல் காய் நகர்த்தலை முன்னெடுத்துள்ளார்.
ஆனால் மறுபுறம் அடிமட்ட மக்களின் ஆதரவு தனக்கே உள்ளது எனவே தன்னையே ஐக்கிய தேசிய முன்னணியில் கூட்டு வைத்துள்ள கட்சிகள் ஆதரிக்கும் என்று சஜித் அரசியல் கணக்கு போடுகின்றார். எனவே அவரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
அப்படியாயின் இப்போது தெளிவான முறையில் பந்து சிறுபான்மை கட்சிகளின் கைகளில் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியில்
கூட்டு கட்சி இல்லையாயினும் கூட அக்கட்சியின் ஆதரவு தேர்தலில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. தற்போதைய அரசியல் கள நிலைமைகளை பார்க்கும்போது தமிழ்க் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரையே ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படியாயின் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கப்போகின்றது? ரணிலையா சஜித்தையா? ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.
மேலும் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடமும் தற்போது அரசியல் பந்து காணப்படுகின்றது. மிக முக்கியமாக இந்த நான்கு தரப்பினரும் கூறப்போகும் முடிவிலேயே ரணில் விக்கிரமசிங்கவா, சஜித் பிரேமதாசவா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் என்று தெரிகிறது.
அதேபோன்று சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெலஉறுமய கட்சியும் இந்த விடயத்தில் ஒரு பிரதான பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எப்படியிருப்பினும் தற்போது கடந்துகொண்டிருக்கும் தினங்கள் மிகவும் தீர்க்கமானதாக அரசியல் களத்தில் பார்க்கப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவா, சஜித் பிரேமதாசவா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்திருக்கின்றது. ஆனால் கேள்விக்கான பதில் பாரிய இழுபறிக்குள்ளேயே சிக்கியிருக்கிறது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் மக்கள் விடுதலை முன்னணியும் தமது கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். ஆனால் சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் தொடர்ந்தும் தாமதித்துக்கொண்டிருக்கின்றன.
ஐக்கிய தேசியக்கட்சியைப் பொறுத்தவரையில் நிலைமை சற்று சிக்கலான தாகவே காணப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாச ஆகிய
இருவரும் தொடர்ந்தும் விட்டுக் கொடுக்காமல் நீடிப்பதன் காரணமாக நிலைமை தாமதமடைந்து செல்கின்றது. ஆனாலும் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. அவ்வாறு தேர்தலுக்கான அறிவிப்பு நெருங்கும்போது ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ந்தும் இந்தவிடயத்தில் தாமதத்துடன் செயற்பட முடியாது. விரைவாக ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் தான் போட்டியிடாமல் விட்டுக்கொடுத்தார். எனவே அவர் இம்முறை எப்படியாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றார். மறுபுறம் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் ஏற்கனவே தான் போட்டியிடுவேன் என மக்கள் மத்தியில் அறிவித்துவிட்டதால் அவராலும் அதிலிருந்து பின்வாங்க முடியாது. தான் பின்வாங்கவும் மாட்டேன் என உறுதியாக கூறியிருக்கிறார்.
ஜனாதிபதி மைத்திரி தரப்புடன் கூட்டணி அமைக்கப்போகின்றார் என்ற விடயத்துக்கும் சஜித் மறுப்பு வெளியிட்டுள்ளார். தான் அவ்வாறு ஒருபோதும் சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று சஜித் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரசியல் என்பது விசித்திரமானது. அரசியலில் எப்போதும் எதுவும் நடக்கலாம்.
எப்படியிருப்பினும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் வேட்பாளரை தெரிவு செய்வதில் தொடர்ந்து முரண்பாடுகளும் இழுபறியும் நீடிக்கின்றன. இறுதியாக தற்போது இது தொடர்பான விடயம் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டுக்கட்சிகளிடம் சென்றிருக்கிறது. கூட்டுகட்சிகள் யாரை ஆதரிக்கின்றனவோ அவர் வேட்பாளராகவரும் சாத்தியம் காணப் படுகின்றது. எனவே ரணிலா, சஜித்தா என்பதை ஐக்கிய தேசிய முன்னணியில்
அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளே தீர்மானிக்கப்போகின்றன என்பதே யதார்த்தமாகும். இன்னும் சில தினங்களில் முடிவு வரலாம்.
– ரொபட் அன்டனி –