காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதம் மேலும் வளரும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரம் முசாபராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
காஷ்மீர் விவகாரம் ஒரு சர்வதேச பிரச்சினையாகும். இது குறித்து ஐரோப்பிய யூனியனும், இங்கிலாந்து பல்கலைக்கழகமும் விவாதித்து வருகின்றன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.
அந்த மாநிலத்தை 2 ஆக பிரித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றியுள்ளது. காஷ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கையால், அங்கு பயங்கரவாதம் மேலும் வளரும். இதை இந்தியாவுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்.
அடுத்த வாரம் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன். அப்போது நான் காஷ்மீர் மக்களை ஏமாற்ற மாட்டேன். கடந்த காலங்களில் யாரும் செய்யாத வகையில் அவர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன்.
கடந்த பிப்ரவரி 14-ந்தேதி புல்வாமாவில் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் இத்தகைய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும். இந்தியா செங்கலை வீசினால், நாங்கள் கல் மூலம் திருப்பி தாக்குவோம்”
இவ்வாறு இம்ரான்கான் பேசினார்.