தென்புலத்தில் சீனாவின் கரம் ஓங்கும் போது வடபுலத்தில் காணப்படக்கூடிய இந்திய – சீன எல்லையில் கடும் பதற்றம் ஏற்படும். எனவே தான் இலங்கையின் அரசியல் நிலைப்பாடு இந்தியாவுக்கு முக்கியமாகின்றது. அதற்காக குறுக்கீடுகள் தொடர்பான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. மறுபுறம் கடந்த ஆட்சியில் இடம்பெற்றதைப்போன்று இலங்கையில் மீண்டும் சீனாவின் கரம் மேலோங்குமாக இருந்தால் அதன் தாக்கம் இந்தியாவுக்கு கடுமையாக இருக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக துணைத்தலைவர் எம்.அப்துல் ரஹுமான் தெரிவித்தார்.
இலங்கை என்பது இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு மிகவும் நெருக்கமான நாடாகும். அவ்வகையான நெருக்கமான உணர்வுடன் தான் இலங்கை மக்களை இந்தியர்கள் கருதுகின்றனர். எனவே தான் இலங்கை வாழ் மக்களை சந்தித்து பேசுகின்றபோது வெளிநாடொன்றுக்குச் சென்ற உணர்வு எமக்கு ஏற்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக துணை தலைவர் எம்.அப்துல் ரஹுமான் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தென்புல மக்களின் எதிர்ப்புகள்
இந்திய தேசத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி மீது பல்வேறு வகையான நிலைப்பாடுகள் உள்ளன. இந்தியாவின் வட புலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி முறைமை குறித்து ஒரு சிறந்த எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு எதிர்மாறான நிலைப்பாடே இந்தியாவின் தென் புலத்தில் வாழும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வெளிநாட்டு உறவுகள், விவசாயத்துறையை முன்னேற்றுவதற்கான வழிமுறைகள் இவற்றில் காட்டக் கூடிய ஆர்வத்தை தாண்டி மத ரீதியிலான செயற்பாடுகளில் ஆழமாக செயற்படுகின்றமையே தற்போதைய ஆட்சியாளர்கள் மீதான தென் புலத்தின் எதிர்ப்புக்களுக்கு காரணமாகின்றது.
அதே போன்று வட புலத்தில் பெருவாரியாக வாழக் கூடிய இந்து மக்கள் ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு பண்பாடு, ஒரே வடிவிலான வணக்க வழிபாட்டு முறை என்ற இலக்கை நோக்கி போவதாக பாரதிய ஜனதா கட்சி குறிப்பிட்டமையினாலேயே வடபுல மக்கள் வரவேற்கின்றனர் .
இதில் தவறேதும் கிடையாது. ஆனால் இந்தியாவினுடைய தனி சிறப்பாக நாம் கருதக்கூடிய பன்முகத் தன்மை, சகல மதத்தையும் மதித்து செயற்படக் கூடிய மத சார்பற்ற நிலை என்பன கேள்விக்குறியாக்கப்படுகின்றது. ஆனால் இந்த தனிச்சிறப்பை இந்தியாவினுடைய தென் புல மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். எனவே தான் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகள் விரும்பத்தகாத விடயங்களாகக் காணப்படுகின்றன.
காஷ்மீர்
காஷ்மீர் விவகாரத்தில் காஷ்மீருக்கான தனி சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியிருக்கிறது. காஷ்மீருக்கான சிறப்புரிமைகள் தொடர்பான அரசியல் சாசனம் நீக்கப்பட்டமையே இந்திய அரசியல் சாசனத்துக்கு முரணானது என்பதே எமது நிலைப்பாடாகவும் காணப்படுகின்றது. இந்திய அரசியல் சாசனத்தில் 370 என்ற பிரிவு உருவாக்கப்பட்டபோது காஷ்மீருக்குரிய தனி அந்தஸ்தை அந்த மக்கள் விரும்புகிற காலம் வரை நீடிக்கும். அந்த மக்கள் விரும்பாவிடின் மாற்றுவதற்கான சந்தர்ப்பம் தாராளமாக உள்ளது. இதுவே இந்திய அரசியல் சாசனத்தில் 370 பிரிவின் உறுதிப்பாடாகவும் அமைந்துள்ளது.
சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கு முன்னர் ஜம்முகாஷ்மீர் மக்களின் ஆணையை மத்திய அரசு பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு காஷ்மீர் மக்களின் அங்கீகாரத்தைப் பெறாது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் ஊடாக இந்திய அரசியல் சாசன சட்டம் மீறப்பட்டுள்ளது. எனவேதான் எமது எதிர்ப்பை வலுவாக தெரிவித்து வருகின்றோம்.
பன்முக தன்மைக்கு சவாலாகும் ஒற்றைப்போக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பல்வேறு மத கலாசாரங்களைக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்கள் தனித்தனி மொழி சிறப்பு மிக்கவையாகும். ஒவ்வொரு மாநிலத்துக்கும் சுயாட்சி முறை காணப்படுகிறது. எனவே தான் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று கூறுகின்றோம். மத்தியில் இருக்கும் போது அனைவருடனும் ஒன்றிணைந்து ஆட்சி செய்ய வேண்டும். மாநிலங்களில் ஒவ்வொருவருடைய மொழி, மத, கலாசாரம் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியே முன்னெடுக்கப்படுகின்றன.
சுயாட்சியைக் கொண்டிருக்கக் கூடிய தனித்தனி மாநிலங்களுக்கான உரிமைகளை எல்லாம் அழித்துவிட்டு மத்தியில் இருந்து அனைத்து மாநிலங்களையும் ஆட்சி செய்துவிட வேண்டும் என்ற ஒற்றை நோக்கு பார்வையுடன் பிரதமர் நரேந்திர மோடி செயற்பட முயற்சிக்கின்றமை இந்தியாவினுடைய தனிச்சிறப்பு பார்வைக்கு நேர் எதிரானதாகும். எனவே இதுவரை காலம் காணப்பட்ட இந்தியாவினுடைய தனிச்சிறப்பு தற்போதைய ஆட்சியின் கீழ் குழி தோண்டி புதைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் எம் மத்தியில் காணப்படுகிறது.
வெளிநாடுகளுடனான உறவுகள்
வெளிநாடுகளினால் கேட்கக் கூடிய தேவைகளுக்கு ஏற்ப அந்தந்த நாடுகளுக்கு வழிகாட்டல்களை வழங்கிவிட்டு இந்தியாவில் தனக்கேற்றவாறு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியே முன்னெடுக்கின்றது. எனவேதான் சமஷ்டி ஆட்சி முறைமை விட்டு விலகி ஒற்றை ஆட்சியை நோக்கி பயணிக்கின்றதா என்ற ஐயப்பாடு ஏற்படுகின்றது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைகளில் பாரதிய ஜனதா கட்சியினுடைய அரசாங்கம் தெளிவான கொள்கையுடன் உள்ளதா என்ற சந்தேகமும் காணப்படுகிறது. ஏனென்றால் சொந்த நாட்டில் எந்த கொள்கையைக் கொண்டிருக்கிறார்களோ அதன் பிரதிபலிப்பாகவே வெளிநாட்டு கொள்கைகளும் அமையும்.
மாநில சுயாட்சியை மதித்து நடக்க வேண்டியதிலிருந்து விலகி இந்தியாவினுடைய பன்முகத் தன்மையை அழித்து ஏனைய நாடுகளுக்கு சுயாட்சி முறைகளில் போதிப்பது எந்தளவு ஏற்புடையது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு என்பது அரசியல், இராஜதந்திர ரீதியிலானதாகவும், காலா காலமாக தொன்டுதொட்டு வந்த உறவாகவுமே அமைந்துள்ளது.
இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அமையப்பெற்ற இரு நாடுகளுக்கிடையிலான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனூடாக இரு நாட்டு மக்களுமே அந்நியோன்யமாக பழகக் கூடிய வாய்ப்புக்கள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவின் விருப்பத்துக்கும் வேண்டுகோளுக்கும் அமைவாக இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு கப்பல் சேவை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இலங்கை அரசியலில் இந்திய குறுக்கீடு
இலங்கையின் அரசியல் விவகாரங்களில் இந்தியாவின் தாக்கம் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயங்களாகவோ அல்லது நிரூபிக்க கூடியவையாகவோ இல்லை. அண்டைய நாடு பலமானதாக காணும் பட்சத்தில் இவ்வாறு பழிசுமத்துவது சாதாரண விடயமாகும். ஒரு நாட்டினது அரசியல் மற்றும் தேர்தல் சூழ்நிலைகள் அதற்கு அப்பாலானதொன்றாகும். எனவே கடந்த ஆட்சிமாற்ற தேர்தலில் இந்தியாவின் குறுக்கீடு காணப்பட்டதாக கூறுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
கடந்த ஆட்சி முறையை நன்கு பரிசீலித்து வாக்களித்ததன் பிரதிபலிப்பாகவே இது காணப்படுகின்றது. இவ்வாறானதொரு பார்வையினையே இந்திய மக்கள் இலங்கை மீது கொண்டுள்ளனர்.
மேலும் இலங்கையின் கடந்த ஆட்சி சீனாவுடன் மிக நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தது. நட்பு ரீதியிலான உறவு என்றாலும் கூட எல்லைக்கோட்டின் அடிப்படையில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இன்று வரை கசப்புணர்வு தொடர்கின்றது. இந்தியாவுடன் சீனா போர்தொடுத்தபோது இலங்கையையும் ஒரு தளமாக்க சீனா முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்க வில்லை.
ஆனால் வர்த்தக ரீதியாக தற்போது சீனா இலங்கை அரசாங்கத்துடன் மிக நெருக்கமான உறவுகளை கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரானதொரு போர் மீண்டும் ஏற்படும் பட்சத்தில் இலங்கையையும் ஒரு தளமாக பயன்படுத்தும் உள்நோக்குடன் இவ்வாறு செயற்படுகின்றதோ என்ற சந்தேகம் எற்கனவே உருவாகியது என்பது உண்மைதான். ஆட்சியில் இருப்பவர்களைக்கொண்டு இந்த விடயம் நிதானிக்கப்படுகின்றது.
இலங்கையின் தற்போதைய ஆட்சியை கவனத்தில் கொள்ளும் போது கடந்த ஆட்சி மீது இந்தியா கொண்டுள்ள சந்தேகம் தற்போதில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுவடைந்து தொடர வேண்டுமாயின் இந்த சந்தேகமற்ற நிலை நீடிக்க வேண்டும்.
இலங்கை மற்றும் இந்தியாவில் இடம்பெறக் கூடிய ஆட்சி முறை மக்களின் நலன்களை மையப்படுத்தியதாக அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அந்த வகையில் ராஜபக் ஷவினுடைய ஆட்சிக் காலத்தில் தமிழ் பேசும் மக்களை நெருக்கடிக்குள் தள்ளினார்கள் என்பதை நினைத்து பார்க்கின்ற போது, இனியொரு முறை அந்த ஆட்சி வந்துவிடக்கூடாது. அவ்வாறு வந்தால் இந்த நாடு தாங்குமா? மக்கள் ஜனநாயக உணர்வுகளோடு வாழ்வார்களா? இரு நாட்டு மக்களுக்கும் இடையில் சுமுகமான நிலை ஏற்படுமா? என்பதெல்லாம் கேள்விகளாகவே காணப்படுன்கிறன.
மறுபுறம் ராஜபக் ஷவின் ஆட்சியின் ஊடாக சீனாவின் கரம் இலங்கையில் மீண்டும் ஓங்கிவிடுமோ என்ற அச்சம் காணப்படுகின்றது. இந்நிலை ஏற்பட்டால் இந்தியா – சீனா என்ற உறவில் ஒரு பதற்றம் உருவாகும். தென்புலத்தின் கரையை விட வடபுலத்தில் அருணாச்சலம் போன்ற மலைப்பிரதேசத்தில் காணப்பட கூடிய இந்திய – சீன எல்லையில் தாக்கம் செலுத்தும். அதே போன்று தென்புலத்தில் இலங்கையிடமிருந்து சீனா பெற்றுக்கொள்ளும் சலுகைகள் வடபுல எல்லையில் கடுமையாக தாக்கம் செலுத்தும்.
எனவே தான் ராஜபக் ஷவின் ஆட்சியின் மீள் வருகை இலங்கை – இந்திய உறவை கடுமையாக பாதித்துவிடும். அதே போன்று இந்தியா தொடர்பான சீனாவின் நிலைப்பாடு மோசமாக செல்வதற்கும் காரணமாக அமையும் என்பதில் ஐயப்பாடு இல்லை.
(லியோ நிரோஷ தர்ஷன்)