அரசியல் நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது- ஹிருணிகா

தனக்கு அரசியல் நடவடிக்கைகள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டு வரும் இளைஞர் கடத்தல் தொடர்பான வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் தன்னை அறியாமல் இடம்பெற்ற ஒன்றெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து அரசியல் நடவடிக்கைகள் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அரசியலுக்கு வராமல் தனது தொழிலையேசெய்து கொண்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுவதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு பெண் அரசியல்வாதியாக இருப்பதால் பலரும் தமது குடும்ப பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை கோரி தம்மிடம் வருவதாகவும், அவ்வாறானதொரு சம்பவமே குறித்த இளைஞர் விடயம் என்றும் ஹிருணிகா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த வாகனம் இதுவரை தன்னுடையது அல்லவென எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் மறுக்கவில்லை என தெரிவித்துள்ள ஹிருணிகா, குறித்த வாகனமானது தானும், தன்னுடைய கணவரும் முதன் முதலில் வாங்கிய வாகனம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஓர் ஊடகம் தனக்கு எதிராக மிகவும் தரக்குறைவான செய்திகளை அன்று முதல் இன்று வரை வெளியிட்டு வருவதாகவும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனின் கருத்துக்களை கேட்டு குறித்த ஊடகம் அதனை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாகவும் ஹிருணிகா சுட்டிக்காட்டியுள்ளார்.