சந்திரயான் 2 லேண்டரை நோக்கி ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதை பெற்றுக்கொண்டு லேண்டர் ஓரிரு நாட்களில் பதில் அளிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.
நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 திட்டம் 95 சதவீதம் வெற்றியை பெற்றுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் தரை இறக்கி 14 நாட்கள் ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கிய லேண்டர் கருவியை மட்டும் திட்டமிட்டபடி தரை இறக்க முடியவில்லை.
வேகம் அதிகரித்ததால் சற்று திசை மாறிவிட்ட லேண்டர் கருவி நிலவின் மேற்பரப்பில் தென்துருவ பகுதியில் விழுந்து கிடக்கிறது. அந்த லேண்டர் கருவிக்குள் இருக்கும் ரோவர் உள்பட சக்தி வாய்ந்த கருவிகள் அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தி கடந்த 7-ந்திகதி முதல் விஞ்ஞானிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இன்று 6-வது நாளாக இஸ்ரோ விஞ்ஞானிகள் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒப்புதலுடன் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. நாசா விஞ்ஞானிகள் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்தை மிக துல்லியமாக ஆய்வு செய்துள்ளனர்.
நாசாவிடம் விண்வெளியில் தகவல் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அதிநவீன கட்டுப்பாட்டு மையம் உள்ளது. அந்த கட்டுப்பாட்டு மையம் மூலம் லேண்டரை நோக்கி ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டுள்ளன.
லேண்டருக்கு நாசா விஞ்ஞானிகள் ‘ஹலோ’ என்று செய்தி அனுப்பியுள்ளனர். அதை பெற்றுக்கொண்டு லேண்டர் ஓரிரு நாட்களில் பதில் அளிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.
குறிப்பாக நாளை அல்லது நாளை மறுநாள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று நாசா நிறுவனம் கூறி உள்ளது. வருகிற 20-ந்தகதிக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தாவிட்டால் அதன் பிறகு அதை பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது.
எனவே அதற்கு முன்னதாக லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த நாசா விஞ்ஞானிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். நாசா நிறுவனத்திற்கு அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா, ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரீட் நகரம் மற்றும் ஆஸ்திரேலியா கான்பேரா ஆகிய 3 இடங்களில் மிக நவீன கட்டுப்பாட்டு மையம் உள்ளது.
அதற்கு முன்னதாக அங்கு ஆய்வு கூடம் அமைத்து விட வேண்டும் என்று அமெரிக்கா காய்களை நகர்த்தி வருகிறது. எனவேதான் தென் துருவத்தில் விழுந்து கிடக்கும் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த நாசா விஞ்ஞானிகள் இந்தியாவையும் விட தீவிரமாக உள்ளனர்.