பூகோளப்பந்தில் ஏற்பட்டுள்ள போட்டித்தன்மையும் வேகமும் மிக்க வாழ்வியல் போராட்டத்தில் எவ் வழியிலாவது சென்று வாழ்க்கை வட்டத்தில் திழைக்க வேண்டும் என்பதில் ஒவ்வொரு மக்கள் தரப்பினரும் வெவ்வேறுபட்ட சூட்சுமங்களை கையாள துணிகின்றனர்.
புகலிடக்கோரிக்கை, உயர்கல்வி, வேலைவாய்ப்பு, திருமண பந்தங்களென பல காரணங்களை அடியொற்றி இந்த புலம்பெயர் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் சட்டவிரோதமான புலம்பெயர் செயற்பாடுகளும் இல்லாமலில்லை.
ஆகாய மார்க்கமாக சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வதில் பல்வேறு நெருக்கடியான நிலைமைகள் இருப்பதால் அதிகளவானவர்கள் தமது உயிர்களை கூட துச்சமென மதித்து கடல்மார்க்கமாக வெளியேறிய, வெளியேற விளைகின்ற சந்தர்ப்பங்கள் குறித்து அன்றாடம் செய்திகள் வெளியாகின்றன.
குறிப்பாக, இலங்கைத்தீவானது நான்கு பக்கங்களும் கடலால் சூழ்ந்துள்ளமையால் கடல்மார்க்கமாக புலம்பெயர்ந்து செல்ல அதிகளவானவர்கள் விளைகின்றார்கள். இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் அதிகமாக அவுஸ்திரேலியா நோக்கியே பயணங்களை முன்னெடுக்கின்றனர்.
இத்தகைய சட்டவிரோத பயணங்களை கட்டுப்படுத்துவதற்காக இந்திய கடற்பிராந்தியத்தில் இலங்கையும், அவுஸ்திரேலியாவும் இறையாண்மை எல்லைகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை கூட்டாக முன்னெடுத்து வருகின்றன.
இதனால் பல்வேறு சட்டவிரோத கடற்பயண முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளதோடு சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு மத்தியில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை அடைய முற்பட்டவர்களும் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டு மீண்டும் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
கடந்த புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கிரேக் புரூணி, நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் செய்ததோடு அங்கு ஊடகவியலாளர் சந்திப்பிலும் பங்கேற்றிருந்தார்.
பொறுப்பதிகாரியின் விஜயம் குறித்த செய்தி சேகரிப்பிற்காக, அங்கு சென்றிருந்தபோது, நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகப் பகுதியில் இருந்த ஒரு சில கடற்றொழிலாளர்களிடத்தில் அவுஸ்திரேலியாவுக்கான கடற்பயணம் இங்கு நடைபெறுகின்றதா, எப்படி இந்த பயணங்களை மேற்கொள்கின்றார்கள், யார் இதனை செய்கின்றார்கள்? என்பது குறித்த கேள்விகளைக் கேட்டபோது ஒருசில தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
குறிப்பாக தமது பெயர், விபரங்களை வெளியிடாதீர்கள் என்ற நிபந்தனையுடன் அந்த கடற்றொழிலாளர்கள் கூறுகையில், ”நாங்கள் அவ்வாறான விடயங்களைச் செய்வதில்லை. ஆனால் படகுகளில் அவுஸ்திரேலியா நோக்கி கூட்டிச் செல்பவர்கள் இல்லாம லில்லை. அவர்களுக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றனர்.
அத்துடன், ‘அவ்வாறு படகுகளில் அழைத்துச் செல்பவர்கள் நேரடியாக அவுஸ்திரேலியா கடற்கரையில் சென்று விடுவதில்லை. மாறாக இலங்கை கடற்பரப்பிலிருந்து 2ஆயிரம் முதல் 2500 கடல்மைல்கள் தொலைவில் அவுஸ்திரேலியாவுக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான தீவுகள் மற்றும் மணற் திட்டுக்களில் விட்டுவிட்டு வருவார்கள். அவ்வாறு செல்லும் போது கடற்படையினர் கைது செய்தால் ஒன்றும் செய்யமுடியாது” என்றும் அந்தக் கடற்றொழிலாளர்கள் கூறினார்கள்.
மேலும், ”தற்போதைய காலத்தில் நபரொருவருக்கு இரண்டு இலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரையிலான பணத்தினை வசூலித்த பின்னரே படகில் அவர்களை ஏற்றிச் செல்கின்றார்கள் என்றும் கடற்படையினரிடத்தில் கைதானால் அப்பணம் திருப்பி அளிக்கப்படமாட்டாது என்றும் இதற்கான வேறு நபர்கள் இருப்பதாகவும் அவர்களுடன் தான் நீங்கள் மீதி விடயங்களை பேசி உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்றும் அந்த கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.
இவ்வாறிருக்க, நீர்கொழும்பு மீன் பிடித் துறைமுகத்திற்கு வருகை தந்திருந்த அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கிரேக் புரூணி, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானி டேவிட் ஹொலி, இலங்கை கடற்படையின் செயற்பாட்டு பணிப்பாளர் ரியர் அட்மிரல் நிராஜ் ஆட்டிகல ஆகியோர் ஊடக வியலாளர்கள் மத்தியில் கருத்துக்களை வெளியிட்டனர்.
முதலில் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானி டேவிட் ஹொலி கூறுகையில்,
”சட்ட விரோத மனிதக் கடத்தல்களை மிகுந்த சவால்களுக்கு மத்தியில் தடுத்துவருவதாக கூறியதோடு அவ்வாறான மனிதக்கடத்தல்கள் இடம்பெறும் பகுதிகளில் ஒன்றாக நீர்கொழும்பு கடற்பரப்பும் காணப்படுவதாக பல்வேறு மூலங்களிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் கூறினார்.
எவ்வாறாயினும், கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் வழங்கப்பட மாட்டாது என்ற உறுதியான நிலைப்பாட்டில் நாம் இருக்கின்றோம். அந்த தகவலை மீண்டும் மக்களுக்கு கூறுகின்றோம்” என்றார்.
இதேவேளை, குறுகிய கால இடைவெளிக்குள் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கிரேக் புரூணி,
”படகு மூலம் சட்டவிரோதமாக புலம் பெயர்வதனால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் நீண்டகால பின் விளைவுகள் ஏற்படுகின்றன. 2013 ஆம் ஆண்டில், இறையாண்மை எல்லைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
இதிலிருந்து 2018 வரையிலான காலப்பகுதியில் 820 சட்டவிரோத கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 50ஆயிரம் பேர்வரையிலானவர்கள் உட்பிரவேசிக்க விளைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் திருப்பியே அனுப்பப்பட்டுள்ளனர்.
இலங்கையுடன் இணைந்து பணியாற்றிய ஆரம்பத்திலிருந்து, 12 ஆட்கடத்தல் படகுகளில் பிரவேசிக்க முயன்ற 204 பேர் இதுவரையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு எந்த ஒருவரும் அவுஸ்திரேலியாவுக்கான பயணத்தில் வெற்றி பெறவில்லை.
இந்த ஆண்டின் மே இல் இரண்டு படகுகளில் 25 பேரும், ஜுனில் 5பேரும், ஜுலையில் 13 பேரும் கைது செய்யப்பட்டு உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் 2013 இலிருந்து வருடந்தோறும் தலா 10படகுகள் இலங்கை கடற்பரப்பிலிருந்து வருகை தந்திருந்தபோதும் 2018ஆம் ஆண்டு இரண்டு படகுகளும், இந்த ஆண்டு இதுவரையில் மூன்று படகுகளுமே வருகைதந்துள்ளன. ஆகவே இலங்கையுடனான கூட்டு நடவடிக்கை யில் கணிசமான முன்னேற்றம் உள்ளது.
எமது நாட்டின் தீவிர எல்லை பாதுகாப்பு கொள்கைகளின்படி, சட்டவிரோதமாக படகு மூலம் பயணம் செய்பவர்கள், அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்கோ அல்லது தொழில் புரிவதற்கோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவ்வாறான முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு சட்டரீதியாக புலம் பெயர்வதற்கு அவர்களுக்கு உள்ள ஏதேனும் வாய்ப்பை சுயமாகவே இழந்து விடுகின்றனர்.
அத்துடன் சட்டவிரோதமாக உட்பிரவேசிக்க முயன்ற எந்தவொரு நபரும் முகாம்களில் கூட தடுத்து வைக்கப்படவில்லை. கடந்த ஜுன் மாதம், சாத்தியமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் ஆட்கடத்தல் வியாபாரத்தில் இணைந்து கொள்வதைத் தடுக்க
”பூச்சிய வாய்ப்பு” என்ற பிரசாரத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
மேலும், அண்மைக்காலத்தில் அவுஸ்திரேலிய அரசியல் நிலைமைகள் மற்றும் இலங்கையின் உள்நாட்டு நிலைமைகளை பயன்படுத்தி சட்டவிரோத பயணங்கள் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றமையால் தான் இலங்கைக்கு வருகை தந்து எனது அறிவுறுத்தலை நட்புடன் விடுக்கின்றேன்” என்றார்.
இலங்கை கடற்படையின் செயற்பாட்டு பணிப்பாளர் ரியர் அட்மிரல் நிராஜ் ஆட்டிகல கூறுகையில், ”படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வது என்பது எதிர்பார்ப்பற்ற சிந்தனையாகும். படகுமூலம் சென்று அங்கு புகலிடக்கோரிக்கையையும் முன்வைக்க முடியாது. நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் மாத்திரம் அறுநூறுக்கும் மேற்பட்ட படகுகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு படகையும் தனித்தனியாக பரிசோதனைக்குட்படுத்துவது என்பதும் மிகவும் கடினமான பணியாகும். காலி, மிரிஸ்ஸ போன்ற பகுதிகளிலும் இதுதான் நிலைமை. இதனால் பலத்த சவால்களுக்கு முகங்கொடுத்தவாறு உள்ளோம்” என்றார்.
இதேவேளை, அவுஸ்திரேலிய பொறுப்பதிகாரியின் கள விஜயம் நிறைவடைந்ததையடுத்து அவ்விடத்தில் பிரசன்னமாகிய அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடி படகுகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுஜித் சமந்த, ”மீனவப் படகுகளில் மனிதக்கடத்தல்கள் எவையும் நடைபெறவில்லை. மீனவர்கள் மீது வீண்பழி சுமத்தப்பட்டு அவர்களுக்கு நெருக்கடிகள் அளிக்கப்படுகின்றன.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இலங்கைக்கு 175மில்லியன் டொலர்கள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அதனைப் பெற்றுக்கொள்வதற்கே இத்தகைய மிகைப்படுத்தல்கள் இடம்பெறுகின்றன. சட்டவிரோத மனிதக் கடத்தல்களை தடுப்பதற்கு முன்னதாக எமது கடற்பகுதிக்குள் அத்துமீறி வருகை தரும் மீன்பிடிப் படகுகளை இலங்கை கடற்படையால் ஏன் தடுக்க முடியாதிருக்கின்றது. அத்துமீறும் படகுகளை தடுத்தால் மீனவர்களின் வாழ்க்கை பாதுகாக்கப்படும்” என்றார்.
எவ்வாறாயினும், புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆஸி.புகலிடமளிக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்றாலும் அந்நாடு அதற்கு இடமளிக்காது என்று பகிரங்கமாக அறிவித்தபின்னர் உயிராபத்து மிக்க சவாலை கையிலெடுப்பது பயனற்றதொன்றாகும்.
அதேநேரத்தில் சட்டவிரோத படகுபயணங்களை தடுப்பதன் பேரில் அன்றாட வாழ்வுக்காக போராட்ட மிக்க தொழில்புரியும் கடற்றொழிலாளர்களை சிரமத்துக்குள்ளாக்குவதும் பொருத்தமற்றதொன்றாகின்றது. ஆகவே உணர்வு ரீதியான வாழ்வுரிமை விடயத்தினை பாதிப்பற்ற வகையில் கையாள்வது மிகவும் முக்கியமானதொன்றாகின்றது.
(ஆர்.ராம்)