அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதல் இடம் பெற்று இன்றுடன் 18 வருடங்கள் காலம் கடந்து விட்டது.
அமெரிக்காவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் சுமார் 3,000 உயிர்கள் காவுகொள்ளப்பட்ட 9/11 தினத்தின் 18 ஆம் ஆண்டு இன்று நினைவு கூரப்படுகின்றது.
இதே போன்ற ஒரு நாளில் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 அளவில் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு கோபுரத்தின் மீது அல்-கொய்தா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட விமானம் ஒன்று மோதி தாக்குதல் நடத்தியிருந்தது.
உலகத்தின் போக்கையே மாற்றி அமைத்த சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்த சொல்லிலடங்கா தீவிரவாத செயற்பாட்டை அடுத்து உலகெங்கிலும் உள்ள பல தீவிரவாத அமைப்புகள் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டன.
இந்த 9/11 தாக்குதலின் விளைவாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன.

அதனைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் பல இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜிஹாதிகள் அதிகமாக ஈர்க்கப்படுவதற்கும் இந்த தாக்குதல் சம்பவம் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியிருந்தது.
அதேவேளை, பாலி தீவு முதல் பிரஸல்ஸ் வரை தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு இந்த தாக்குதலும் தீவிரவாதிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
இந்தநிலையில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு பல வருடங்கள் கழித்த பின்னரும் சில இறுவெட்டுக்களை பழைமையான பொருட்கள் சேகரிக்கும் ஒருவர் வாங்கியிருந்தார். அதில் ஏறத்தாழ 2400 ஔிப்படங்கள் இருந்தன.
அவை அனைத்தும் நியூயோர்க் 9/11 தாக்குதல் குறித்த ஔிப்படங்களாக இருந்தன. குறித்த ஔிப்படங்கள் அனைத்தும் அடையாளம் தெரியாத ஒரு கட்டட தொழிலாளியால் பெறப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையத்தின் சிதிலங்களை அப்புறப்படுத்திய போது அவை பதிவு செய்யப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

ஔிப்படங்கள் அடங்கிய இறுவெட்டுகள் அனைத்தும் மோசமான நிலையில் இருந்தாலும், ஔிப்படங்களை அனைத்தையும் மீட்கக் கூடியதாக இருந்ததாக சேகரிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal