ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் ‘தாமரை மொட்டு ‘அல்லாத பொதுச் சின்னத்திலேயே போட்டியிடும். அவ்வாறு பொது சின்னத்துக்கு இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் சு.க தனித்து போட்டியிடும் நிலைமையே ஏற்படும் என்று சு.கவின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஹெட்டிபொல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த கால அரசியல் வரலாற்றை நோக்கும் போது கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கும் போது பிரதான கட்சியின் சின்னம் கூட்டணியின் சின்னமாக காணப்படாது. காரணம் கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகள் பாதிக்கப்படும் என்பதாலாகும்.
1994 ஆம் ஆண்டு ஆட்சியமைக்கப்பட்ட போது கதிரை சின்னத்திலேயே போட்டியிட்டோம். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதான கட்சியாக இருந்தமையால் நாம் கை சின்னத்தை பயன்படுத்தியிருக்கலாம். எனினும் நாம் அவ்வாறு செய்யவில்லை. அதே போன்று 2010 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட்ட போது அவரும் கை சின்னத்தில் போட்டியிட்டிருக்கலாம். எனினும் அவரும் அவ்வாறு செய்யவில்லை.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சின்னமான வெற்றிலை சின்னத்திலேயே அவர் போட்டியிட்டார். இந்த சின்னத்தைப் பாவித்து அனைவரையும் ஒன்றணைத்து அவர் தேர்லில் வெற்றி பெற்றார். தற்போது பொதுஜன பெரமுன பிரதான கட்சி போன்று காணப்படுகிறது. எதிர்காலத்தில் இதில் மாற்றங்கள் ஏற்படுமா என்று கூற முடியாது. எவ்வாறிருப்பினும் அந்த கட்சியின் சின்னத்தின் கீழ் சுதந்திர கட்சி தேர்தலில் களமிறங்காது. தாமரை மொட்டு சின்னம் இல்லாமல் வெறு எந்த சின்னமாக இருந்தாலும் அதற்கு நாம் இணக்கம் தெரிவிப்போம்.
கிராமங்களில் மொட்டு சின்னத்தில் சுதந்திர கட்சியால் வாக்கு கேட்க முடியாது. அதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அதே போன்று பொதுஜன பெரமுனவுக்கு சுதந்திர கட்சியின் சின்னமான கை சின்னத்தில் வாக்கு கேட்கவும் முடியாது. எனவே இரு கட்சிகளும் ஒன்றிணைந்து பொது சின்னமொன்றில் போட்டியிடுவோம் என்பதை வலியுறுத்துகின்றோம்.
தெற்கிலுள்ள கட்சி ஆதவாளர்கள் எம்மிடம் கலந்துரையாடும் போது, ‘ மொட்டு சின்னத்தை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். அதனைப் பார்க்கும் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி தான் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் நூற்றுக்கு 14 வீத வாக்குகள் முஸ்லிம் மக்களின் வாக்குகளாகும். எனினும் அதில் ஒருவர் கூட மோடிக்கு ஆதரவளிக்கவில்லை. எனவே சாதாரண முஸ்லிம் மக்கள் மொட்டு சின்னத்தை மோடியின் சின்னமாகவும், அவர் இந்துவாதி என்பதாலும் இம் மக்கள் அதனை தவிர்க்கிறார்கள் ‘ என்று கூறுகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு அனைவரதும் வாக்குகளும் அத்தியவசியமானவையாகும். சிங்கள மக்களது வாக்குகளை மாத்திரம் பெற்று தேர்லில் வெற்றி பெற முடியாது. தமிழ் மக்களானாலும், முஸ்லிம் மக்களானாலும் அனைவரும் ஒரு ஜனாதிபதிக்கே வாக்களிப்பார்கள். எனவே அவ்வாறான தலைவர் அடிப்படைவாதியாக இல்லாமல் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்க வேண்டும்.
எனவே தான் பொது சின்னத்தை அறிமுகப்படுத்தி தேர்லில் போட்டியிடுவோம் என்பதை வலியுறுத்துகின்றோம். பொதுச் சின்னமொன்றினூடாக ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றார்.