இலங்கையில் இன்று மூன்று அரசியல் அதிகார மையங்களாக விளங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கடந்தவாரம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவி மற்றும் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் குறித்து வெளிப்படுத்திய கருத்துகள், நாடு இன்னும் இரு மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்கவிருக்கும் நிலையில் உன்னிப்பாக நோக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.
மூவரையும் பொறுத்தவரை ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்பான விவகாரத்தில் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றபோதிலும், தங்களின் அரசியல் எதிர்காலம் என்று வரும்போது ஒரு புள்ளியில் அசௌகரியத்துடன் என்றாலும் சந்திக்கவே செய்கிறார்கள். அதாவது ஜனாதிபதி ஆட்சிமுறை நீடிப்பது அவர்களின் அரசியல் நலன்களுக்கு தற்போதைய கட்டத்தில் அனுகூலமாக இல்லை.
ஜனாதிபதி சிறிசேன இரண்டாவது பதவிக்காலத்துக்கும் ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கு பல்வேறு வியூகங்களை நாடியிருந்தபோதிலும், எதுவுமே சாத்தியப்படாத நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு பிறகு ஜனாதிபதியாக வருபவர் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டவராக இருக்கமாட்டார் என்றும் முழுமையான அதிகாரங்கள் பிரதமருக்கே சென்றுவிடும் என்பதால் ஜனாதிபதி வெறுமனே பொம்மைத் தலைவராகவே இருப்பார் என்றும் கூறத்தொடங்கியிருக்கிறார். கடந்தவாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, 19 ஆவது திருத்தம் காரணமாக அடுத்த அரசாங்கத்தில் ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள் மேலும் கத்தரிக்கப்படும். எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் வகிக்கமுடியாதவராக ஜனாதிபதி இருப்பார். தற்போது ஜனாதிபதியிடம் இருக்கும் பாதுகாப்பு அமைச்சும் கூட பிரதமரிடமே போய்விடும் என்று கூறினார். இத்தகைய ஒரு பொம்மை ஜனாதிபதி பதவியை அடைவதற்காக ஏன்தான் போட்டிபோடத் தயாராகிறார்களோ என்று தனக்கு வியப்பாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதேவேளை சுதந்திரக்கட்சி ஜனாதிபதித் தேர்தலில் தனியாக வேட்பாளரைக் களமிறக்கும் என்று அதன் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அறிவித்திருக்கிறார். அத்துடன் சுதந்திரக்கட்சியின் வேட்பாளராக வரக் கூடியவரின் பெயரும் தனக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதை பிரதான வாக்குறுதியாக நாட்டு மக்கள் முன்னிலையில் வைத்து ஆட்சிக்கு வந்தவர் ஜனாதிபதி சிறிசேன. புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டபோது நிறைவேற்று ஜனாதிபதி பதவி தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்று உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட கட்சியாக அவரின் தலைமையின் கீழ் சுதந்திரக் கட்சி மாறிய விந்தையையும் கண்டோம். இப்போது அந்த ஜனாதிபதி பதவியில் இனிமேல் ஒன்றுமில்லை என்று கூறுகின்ற அளவுக்கு அவர் சென்றிருக்கிறார். எட்டாத பழம் நரிக்கு மாத்திரமா புளிக்கிறது? 19 ஆவது திருத்தத்தை கொண்டுவந்து ஜனாதிபதி வசமிருந்த மட்டுமீறிய அதிகாரங்களை குறைத்ததன் மூலமாக உலகிலேயே தனது அதிகாரங்களை தளர்த்துவதற்கு மனமுவந்து முன்வந்த ஒரே ஆட்சியாளர் தானாகவே இருக்க முடியும் என்ற பெருமைக்கு, உரிமை கோரிய சிறிசேன இன்று அதே திருத்தத்தை பழிதூற்றிக்கொண்டு திரிகிறார்.
அதேவேளை, ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 19ஆவது திருத்தத்தை வெகுவாக புகழ்ந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. கடந்த வாரம் மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஒரு நிறுவனத்திடமே அதிகாரங்கள் குவிந்துகிடக்கும் நிலைமை உருவானது என்றும் அதை தனது அரசாங்கம் ஓரளவுக்கு மாற்றியமைத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்களை ஜனாதிபதி நியமிப்பதை அவசியப்படுத்தியதன் மூலமாக எமது அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நிலைவரத்தை சீர்செய்திருக்கிறது. பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை அமைச்சர்களின் கூட்டுப்பொறுப்பை அது வலுப்படுத்தியிருக்கிறது. இன்று வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற அரசாங்கத்தின் முக்கிய அம்சங்களும் (பதவியில் இருந்த ஜனாதிபதிகளினால் அடிக்கடி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவந்த மட்டுமீறிய அதிகாரங்கள் காரணமாக நாம் ஒழிப்பதற்கு உறுதிபூண்ட) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியும் அருகருகாக உளதாயிருக்கின்றன” என்று கூறியிருந்தார். அத்துடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி விளைவுகளை பொருட்படுத்தாமல் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யாதிருப்பதற்காக அந்த பதவியை இல்லாதொழிக்கவேண்டும் என்பதில் தான் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னைய ஆட்சியின் கீழ் அரசியலமைப்பு அப்பட்டமான முறையில் மீறப்பட்டதன் காரணமாகவே 19 ஆவது திருத்தம் அவசியமாயிற்று. அரசாங்க சேவையும் பொலிஸும் பெருமளவுக்கு அரசியல்மயப்படுத்தப்பட்டிருந்த நிலையையும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியதன் மூலமாக 19 ஆவது திருத்தம் சீர்செய்திருக்கிறது என்றும் மாலைதீவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.
புதிய அரசியலமைப்பின் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படும் என்று கூறிய அரசாங்கம் ஒரு இடைக்கால ஏற்பாடாகவே 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனாதிபதியின் அதிகாரங்களில் குறைப்பை செய்தது. புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் முட்டுக்கட்டை நிலையை அடைந்ததை அடுத்து ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு இப்போதைக்கு சாத்தியப்படக்கூடிய ஒன்று அல்ல என்ற நிலை தோன்றியிருக்கும் கட்டத்திலேயே மாலைதீவில் விக்கிரமசிங்க அந்த ஆட்சிமுறை ஒழிப்பில் இன்னமும் தான் உறுதியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதென்பது எப்போதுமே அந்தப் பதவியை அடைய முன்னர் அரசியல்வாதிகள் உரக்கப்பேசிய விவகாரம். ஆனால் இதுவரையில் அது தொடர்பில் உறுதிமொழியை வழங்கி ஆட்சியதிகாரத்துக்கு வந்த எந்தவொரு ஜனாதிபதியும் மட்டுமீறிய அதிகாரங்களை அனுபவிப்பதில் ருசிகண்ட பின்னர் தங்கள் மனதை மாற்றிக்கொண்டதே அண்மைக்கால வரலாறு. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இதுகால வரையில் ஜனாதிபதி பதவி வசப்படாமலே இருந்து வருவதால்தான் அதன் ஒழிப்பு குறித்து பேசுகிறார் போலும். அவர் ஜனாதிபதியாக வந்தால் (அதற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலே இறுதி வாய்ப்பாக இருக்கக்கூடும்) ஏனைய ஜனாதிபதிகளை விடவும் இதுவிடயத்தில் வித்தியாசமாக நடந்து கொள்வார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இது இவ்வாறிருக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னரும் கூட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி பலம்பொருந்தியதாகவே இருக்கிறது என்றும் அதிகாரங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டதனால் துவண்டுவிடாமல் அர்ப்பணிப்புடனும் துணிவாற்றலுடனும் செயற்படக்கூடிய ஒருவரால் உறுதியான முறையில் நாட்டை முன்னோக்கி வழிநடத்தமுடியும் என்றும் கூறியிருக்கிறார்.
கொழும்பில் கடந்த வாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ தொழில்முனைவோர் குழுவொன்றுடன் நடத்திய கலந்துரையாடலில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்தில் ஜனாதிபதியை விடவும் அதிகாரங்கள் கொண்டதாக பிரதமர் பதவியே விளங்கும் என்று ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன வெளியிட்ட கருத்து பற்றி கூறுகையில் பதவியை வகிப்பவரின் ஆற்றல்களிலேயே அதன் வலிமை தங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டார். அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருக்கின்ற போதிலும், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் போன்ற ஒருவரினால் ஜனாதிபதி பதவிவசம் இப்போது இருக்கின்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டே பலம்பொருந்திய ஒரு ஜனாதிபதியாக செயற்படமுடியும் என்பதையே அவர் அந்த கருத்தின் மூலம் நிறுவ முயன்றார் என்பது வெளிப்படையானது.
இவ்வாறாக பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கும் 19 ஆவது திருத்தம் குறித்து மூன்று தலைவர்களும் தங்களது அரசியல் நலன்களுக்குப் பொருந்திவரக்கூடிய முறையில் வியாக்கியானங்களை செய்திருக்கும் நிலையில், ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கதை ஒருபுறம் இருக்கட்டும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு 19 ஆவது திருத்தத்தின் கதி என்னவாக இருக்கப் போகிறது? இதுகுறித்து பிரதான கட்சிகளின் வேட்பாளர்களாக வரக்கூடியவர்கள் தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில் நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும்.
-வீ.தனபாலசிங்கம்