வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக சொல்லும்போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்றுகொண்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையில் இன்றையதினம் கற்றல் வளநிலையத்தை திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் கல்வியில் கை வைக்க வேண்டும். அதனால் தான் தமிழர்களின் இருப்பை உருக்குலைப்பதற்காக எமது கலாசார, விழுமியங்கள், வரலாறுகளை தாங்கி நின்ற பொக்கிசமான யாழ் நூலகம் வன் கொடுமையாளர்காளால் எரிக்கப்பட்டது.
அத்துடன் ஒரு இனம் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டுமானால் அது தன்னுடைய கலாசாரம், மொழியை பேணிக்காக்க வேண்டும் இல்லாவிடில் அந்த இனம் அழிந்ததாகவே முடியும். இன்று வெளிநாட்டு மோகத்தால் தமிழர்கள் தமது மொழியை தொலைத்து கொண்டிருக்கிறார்கள். கலாசார ரீதியான நிகழ்வுகளை வளர்கும் செயற்பாடுகளை அவர்கள் புலம் பெயர் நாடுகளில் கடைப்பிடித்தாலும் தமது பிள்ளைகள் மூலம் மொழியை தொலைத்து கொண்டிருக்கின்றனர்.
வெளிநாட்டு மோகம் மாத்திரமில்லாமல் மருத்துவ ரீதியாக சொல்லும் போது கூட இந்த தமிழினம் அழிவை நோக்கியே தான் சென்று கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லீம் பெண்களின் கருத்தரிப்பு வீதங்கள் முறையே 1.2, 1.4, 4.6 ஆக காணப்படுகின்றது.எனவே எமது இனம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் இப்போதே புரிந்துக்கொள்ள வேண்டும். நாம் மிகவும் குறைந்த வீதத்தில் உள்ள மக்கள்.
போரில் அழிவை சந்தித்த ஜப்பான் நாட்டிடம் உங்களிற்கு என்ன தேவை என்று அமெரிக்கா கேட்ட போது எமக்கு தொழில்நுட்ப கல்வி வேண்டும் என்றே கோரினார்கள். அதனாலே இன்று பொருளாதாரத்தில் அது உலக நாடுகளிற்கு போட்டியாக விளங்குகின்றது.நாமும் அழிவை சந்தித்த இனம் ஆனால் எங்கு சென்றாலும் எமக்கு வீடு தாருங்கள். வாழ்வாதாரம் தாருங்கள் என்று தான் எமது மக்கள் கேட்கிறார்கள். அந்த நிலை மாற்றபட வேண்டும். எம்மை நாம் காப்பாற்றி கொள்ள வேண்டுமானால் கல்வியை நோக்கி எமது பிள்ளைகளை முன்னிறுத்த வேண்டும் என்றார்.