ஆகஸ்ட் 30ஆம் திகதி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாள் உலகளாவிய ரீதியாக நினைவு கூரப்பட்ட போது இலங்கையிலும் மூன்று இடங்களில்- வடக்கில் ஓமந்தையில், கிழக்கில் கல்முனையில் கொழும்பில் கோட்டை ரயில் நிலையம் முன்பாகவும் முக்கியமான போராட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
இலங்கையில் தெற்கிலும், வடக்கு, கிழக்கிலும் வெவ்வேறு காலகட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சத்துக்கும் அதிகம்.
1971 மற்றும் 1987–-90 ஜே.வி.பி கிளர்ச்சிகளின் போது, பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள், காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களைத் தேடும் போராட்டங்கள், கடந்த நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த போதும், இந்த நூற்றாண்டில் அது மறக்கப்பட்ட விடயமாகி விட்டது.
வடக்கு, கிழக்கில் முப்பதாண்டுகள் நீடித்த ஆயுதப் போராட்டம், 2009இல் முடிவுக்கு வரப்பட்ட போது, ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்ற போதிலும், இதுதொடர்பான சரியான பதிவுகளோ, எண்ணிக்கைகளோ யாரிடமும் இல்லை.
பலர் குடும்பங்களாகவே காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், உரித்துகளும் உறவுகளும், பின்னர் உயிரிழந்து போனது, இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றது போன்ற பல்வேறு காரணங்களால், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பலரது பதிவுகள் இன்னமும் கூட சரியான கணக்கெடுப்புக்குள் வரவில்லை.
வடக்கு, கிழக்கு, தெற்கில் இலட்சக்கணக் கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்த போதும். கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி நடந்த கவனயீர்ப்புப் போராட்டங்களில் பங்கெடுத்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டுமா என்பது சந்தேகம் தான்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், 900 நாட்களைக் கடந்தும் போராட்டங்களை நடத்தி வருகின்ற போதும், இந்தப் பிரச்சினை மீதான கவனம் குறைந்தே வருகிறது,
போராட்டங்களில் ஈடுபடுவோர், தீர்வு கிட்டாது என்ற சலிப்பில் ஒதுங்கத் தொடங்கியுள்ளனர். பலர் இறந்து விட்டனர். இன்னும் பல உறவுகள் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதுமாத்திரமன்றி வறுமை, அடுத்தவேளை உணவுக்கான போராட்டம், நீதி கிட்டும் என்ற நம்பிக்கை தொலைந்து போய் விட்டது என்பன போன்ற காரணிகளால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சோர்வடையத் தொடங்கியுள்ளனர்.
இது நீதியை எதிர்பார்த்திருக்கும் சமூகத்துக்கு பேரிடியான ஒரு விடயம். அதேவேளை நீதியை மறுக்கும், அநீதிக்கு காரணமான சமூகத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது.
இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த காலத்திலிருந்து, பலநூறு போராட்டங்களை நடத்தியும் கூட, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் உள்ள ஒருவரையும் கண்டுபிடிக்கவோ, அவருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளவோ முடியாத விடயமாகவே இருக்கிறது.
இந்த சலிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுபிடிப்பதற்கான அரசாங்க பொறிமுறைகள் மீதான நம்பிக்கையீனமாக வெளிப்பட்டு வருகிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையை கண்டறிவது, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஒரு பதிலைக் கூறுவது, அவர்களுக்கான இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்வது ஆகிய நோக்கங்களை முன்வைத்து, காணாமல் போனோருக்கான பணியகம் உருவாக்கப்பட்டது.
கடுமையான சவால்கள், அழுத்தங்கள், போராட்டங்களுக்குப் பின்னர் தான் சுதந்திரமான இந்தப் பொறிமுறை உருவாக்கப்பட்டது. ஐ.நாவின் உதவிகள், ஆலோசனைகளின் பேரில் உருவாக்கப்பட்ட இந்த பணியகத்தை தமது சாதனைகளில் ஒன்றாக தற்போதைய அரசாங்கம் கூறி வந்திருக்கிறது,
ஆனால், இவ்வாறான பொறிமுறையை பாதிக்கப்பட்டவர்கள் நம்புகின்ற நிலையில் இல்லை என்பதே இப்போதுள்ள முக்கியமான பிரச்சினையாக மாறியிருக்கிறது.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோருக்கான பணியகத்தின் பிராந்திய கிளை செயலகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
உடனடியாகவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர். அந்த செயலகம் திறக்கப்பட்டால் அதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், திடீரென அதிகாலையிலேயே அந்த செயலகத்தை திறந்து விட்டு அதிகாரிகள் ஓடி மறைந்தனர்.
காணாமல் போனோருக்கான செயலகமே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு பயந்து ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டிருக்கிறது,
ஆகஸ்ட் 30ஆம் திகதி அந்த பிராந்திய செயலகத்துக்கு முன்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சிலர் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்க, என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த பணியகம், இதுவரை அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையீனம் ஏற்பட்டு விட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையைக் கண்டறிவது ஒரு சில நாட்களில் முடியும் வேலை அல்ல, அது ஆண்டுக்கணக்கில் நடக்கக் கூடியது என்ற நியாயம் ஏற்றுக்கொள்ளக் கூடியது தான். அது மட்டும் தான் பிரச்சினை என்றில்லை.
இந்தப் பணியகத்துக்கு சட்ட அதிகாரம் கிடையாது, குறைந்தபட்சம் இதன் பரிந்துரைகளைக் கூட அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒன்றாக இல்லை. அரசாங்கம் இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்பட்டிருக்கவில்லை.
காணாமல் போனோருக்கான பணியகம் உருவாக்கப்பட்ட பின்னர், அரசாங்கத்துக்கு இடைக்கால பரிந்துரைகளைச் செய்திருந்தது. அதில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்கும் பரிந்துரை தவிர, ஏனைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முன்வரவில்லை.
குறிப்பாக, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படும் பொலிஸ் மற்றும் முப்படை அதிகாரிகளுக்கான, பதவி உயர்வுகள், புதிய நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பரிந்துரைத்திருந்த போதும், அதனை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை.
இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று காணாமல் போனோருக்கான பணியகத்தின் தலைவரான கலாநிதி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாவற்குழியில் இளைஞர்களை கைது செய்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்னவுக்கு பதவி உயர்வுகள் கொடுக்கப்பட்டன. இப்போது அவர் ஓய்வுபெற்று விட்டார். அவருக்கெதிராக தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு வழக்கில் அவருக்காக சட்டமா அதிபர் தரப்பே முன்னிலையாகிறது.
அதுபோல, இறுதிப்போரில் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்படும், 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இப்போது இராணுவத் தளபதியாக உயர்ந்து விட்டார்.
இதுபோன்று கடற்படை, பொலிஸ், இராணுவத்தில் குற்றம்சாட்டப்படும் பல அதிகாரிகள் தொடர்ந்து பதவி உயர்வுகளைப் பெற்று வருகிறார்கள். அதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறான நிலையினால் தான், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், ஒரு வித சோர்வும், இனி நீதியே கிடைக்காது என்ற சலிப்பும் நம்பிக்கையீனமும் ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையீனத்தையோ சலிப்பையோ பாதிக்கப்பட்டவர்களிடத்தில் இருந்து இனிமேல் நீக்குவது கடினம்.
இவ்வாறான நிலையில், தமது தரப்பு ஆட்சிக்கு வந்தால், காணாமல் போனவர்களின் பிரச்சினைக்கு தகுந்த பதில் அளிக்கப்படும் என்றொரு வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார் வாசுதேவ நாணயக்கார.
அவர் இப்போது, கோத்தாபய ராஜபக் ஷவை, ஜனாதிபதியாக்க முயற்சிக்கின்ற அணியில் இடம்பெற்றிருக்கிறார்.
அவர் அங்கம் வகிக்கின்ற கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான், அதிகளவு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் வடக்கு, கிழக்கில் நிகழ்ந்திருந்தன. அதுவும், 2005 தொடக்கம், 2010 வரையான காலப்பகுதியில், கோத்தாபய ராஜபக் ஷ பாதுகாப்புச் செயலராக இருந்தபோது தான், அந்தச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்றன.
அதனை வெள்ளை வான் கலாசாரம் அறிமுகப் படுத்தப்பட்ட காலம் என்றும் கூறலாம்.
இந்தக் காலகட்டத்தில் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று பதில் கூற வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது. அதனை அவர்கள் வெளிப்படுத்துவார்களாயின், அது வரவேற்கத்தக்கது.
காணாமல் போனவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்பது அவர்களின் உறவினர்களுக்கே தெரியும் எனவும், இதுபற்றி சர்வதேச விசாரணை சாத்தியமில்லை, அவர்களுக்கு நஷ்டஈடு கொடுத்து அவர்களின் பிரச்சினையை கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியானதும் தீர்த்து வைப்பார் என்றும், வரதராஜப்பெருமாளும் கூறியிருக்கிறார்.
ஆனால், என்ன நடந்தது என்ற பதில் மாத்திரமோ, நஷ்ட ஈடோ இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக இருக்க முடியாது. நஷ்ட ஈட்டை ஏற்றுக் கொள்ளுமாறு முன்னரும் பலமுறை அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதும் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு இணங்கவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது? அதற்கு என்ன காரணம்? அதற்கு காரணமானவர்கள், உத்தரவிட்டவர்கள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இனியாவது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட வேண்டும்.
வெறுமனே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவோம் என்றோ, என்ன நடந்தது என்று கூறுவோம் என்றோ தேர்தல் வாக்குறுதிகளை கொடுப்பது நம்பக்கூடியவையன்று.
இதுபோன்ற வாக்குறுதிகள் தற்போதைய அரசாங்கத்தினாலும் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், மீண்டும் வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இல்லை. அவர்கள் சோர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குரல் இப்போது ஓய்ந்து கொண்டிருக்கிறது.
என் .கண்ணன்