இலங்கையில் தேர்ச்சி பெற்ற அனுபவம் மிக்க அரசியல்வாதிகளில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவர். அவர் என்றும் மக்கள் பக்கம் இருந்தே முடிவுகளை எடுத்திருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் அவர் விட்டு கொடுப்பு செய்வதன் மூலம் அவருடைய நிலை உயர்வடையுமே தவிர் கீழ் இறங்காது.

இந்த விட்டு கொடுப்பின் மூலம் ஐக்கிய தேசிய கட்சியும் பாதுகாக்கப்படும். இந்த விட்டு கொடுப்பை செய்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதையே மலையக மக்களும் எதிர்பார்க்கின்றார்கள் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தலவாக்கலை லோகி தோட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் மூலமாக வீடுகளுகளுக்கான சமயலறை பொருட்களும், அத்தியவசிய பொருட்களும் சுமார் தால 25,000 ரூபாவுக்கு பெறுமதியான பொருட்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இந்நிகழ்வு அமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது பிரதேச சபை உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், நிதி செயலாளர், என கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சர் பொருட்களை வழங்கி வைத்தார்.
பொருட்களை வழங்கி வைத்த பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதலளிக்கும் போது இந்த கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று ஜனாதிபதி தேர்தல், ஜனாதிபதி வேட்பாளர் இது எல்லாம் உச்ச கட்டத்தில் இருக்கின்றது. இரண்டு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்ற நிலையில் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
இவ்வாறான ஒரு நிலையில் சஜித் பிரேமதாச மக்கள் ஆதரவு கூட்டங்களை நடத்தி வருகின்றார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தான் போட்டியிடுவார் என்று உத்தியோகபற்றற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சரியான முடிவை எடுப்பார் என ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பங்காளி கட்சிகளும் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் இருப்பதை ஊடகங்கள் வாய்லாக அறிய முடிகின்றது.
இந்த விட்டு கொடுப்பை செய்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து நீண்ட காலத்தின் பின் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த ஒருவர் ஜனாதிபதியாக வரக்கூடிய நிலைமையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்துவார் என அணைவரும் எதிர்பார்க்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதற்கு காரணம் நாங்கள் அதிகமாக சேவை செய்து வருகின்றோம். நாங்கள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அந்த விமர்சனங்கள் ஆரோக்கியமானதாகவும், காத்திரமானாதாகவும் அந்த விமர்சனங்கள் இருக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரித்தார்.
Eelamurasu Australia Online News Portal