‘நாயகன் படத்தில் ஒரு காட்சி. வேலுநாயக்கர் என்ற கதாபாத்திரம். அவரிடம் சிறுவயது மகள் கேட்பாள்’ அப்பா, நீங்க நல்லவரா, கெட்டவரா?’ அதற்கு வேலு நாயக்கர் பதில் அளிப்பார் ‘தெரியலையே அம்மா!’
சிம்பாப்வேயின் நீண்ட நாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயும் அதே மாதிரி தான்.
மக்களின் நேசத்தையும், வெறுப்பையும் சம்பாதித்த தலைவர். ரொபர்ட் முகாபே சிறந்த தலைவரா, மோசமானவரா என்று சிம்பாப்வே மக்களைக் கேட்டால், தெரியலையே என்று தான் பதில் கூறுவார்கள்.
காலணித்துவ ஆட்சியின் அடிமைத் தளைகளில் இருந்து தமது தேசத்திற்கு விடுதலை தேடித்தந்த தைரியமானதொரு தலைவன்.
அந்தத் தலைவன், தனது 95 வயதில் இறுதி மூச்சை விட்டபோது, அவர் எங்கே இருந்தார் என்பது கூட நாட்டு மக்களுக்குத் தெரியவில்லை.
மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற சகாப்தங்களுடன் ரொபர்ட் முகாபேயை ஒப்பிட முடியாமல் இருந்தமைக்கு பல காரணங்கள்.
ஒரு ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, சிம்பாப்வேயின் சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய தலைவர். ஆட்சி பீடத்தில் அமர்ந்து சர்ச்சைக்குரிய காணிக் கொள்கையை அமுலாக்கிய ஆட்சியாளர். தமக்கு எதிரான மாற்றுக்கருத்துக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிய எதேச்சாதிகாரி. தமது இளம் மனைவியின் ஆடம்பரங்களால் அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்த ஆண்மகன்.ரொபர்ட் முகாபேயின் வாழ்க்கை, மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டியதொன்று. அது நல்ல விடயங்களுக்காக மட்டுமல்ல. அவர் விட்ட தவறுகளுக்காகவும் தான்.
ஆபிரிக்கர்கள் என்றால் இளக்காரமா? கறுப்பர்கள் என்றால் தொடர்ந்தும் சிறுமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா என்று கலகக் குரல் எழுப்பி, ஒட்டு மொத்த ஆபிரிக்க மண்ணிலும் விடுதலை உணர்வை ஏற்படுத்திய தலைவர். தாம் விடுதலைப் போரை வழி நடத்தியவர் என்பதற்காக, தமது தேசத்தைக் கடைசி வரை ஆளும் தார்மீக உரிமை தனக்கே உண்டெனக் கருதிய பிடிவாதமும் அவரைச் சார்ந்தது.
கடவுள் வா என்று அழைக்கும் வரையில் நான் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருப்பேன் என ஆபிரிக்க ஒன்றியத்தின் பொது மேடையில் தயக்கம் இன்றி உரைத்த எதேச்சாதிகாரி.
1924ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி வெள்ளையர்கள் கறுப்பின விவசாயிகளுக்காக ஒதுக்கியதொரு பிரதேசத்தில் ரொபர்ட் முகாபே பிறந்தார். மந்தைகளை மேய்ப்பது குலத்தொழில். மாடுகளுடன் கழனிக்கு செல்கையில் கையில் புத்தகம் இருக்கும். தமது பத்து வயதில் தந்தை விட்டுச் சென்று விட, தாயின் உணர்வுச் சுழல்களில் சிக்கி வாழ்க்கையை இழந்து விடவில்லை. மாறாக, நம்பிக்கையுடன் கிறிஸ்தவ மிஷனரி கல்லூரிகளை நாடினார். படித்து பட்டம் பெற்றார்.
நெல்சன் மண்டேலாவின் அரசியல் சிந்தனைகள் அவரைக் கவர்ந்தன. இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்ட மகாத்மா காந்தியையும், ஜவஹர்லால் நேருவையும் உதாரணங்களாகக் கருதினார்.எனினும், தெளிந்ததொரு அரசியல் சிந்தனை முகாபேயிற்கு இருக்கவில்லை. மார்சிஸ- லெனினிஸம் அவரை ஈர்த்தது. ஒரு கட்டத்தில் ஆபிரிக்க சோஷலிசக் கொள்கைகளை ஆதரித்தார்.
வெள்ளையின கொடுங்கோலாட்சி உச்சம் பெற்றிருந்த வேளையில், அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது.
புகழ்பெற்ற ஸானு கட்சியைத் தொடங்கி அரசியல் செய்ய ஆரம்பித்த சமயத்தில் வெள்ளையின ஆட்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்டார். சிறைவாசம் அனுபவித்த சமயம் தமது ஒரே குழந்தை இறந்தபோது, இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள ஆட்சியாளர்கள் அனு மதிக்கவில்லை. அப்போது பிறந்த கோபத்தின் கனல் முகாபே என்ற அறிவாளியின் உள்ளத்தில் சுதந்திரத் தீயை மூட்டி விட்டது எனலாம்.
சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின்னர், ஆபிரிக்க தேசிய கொரில்லா இயக்கத்தை வழிநடத்தி, வெள்ளையின ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
1980ஆம் ஆண்டு முகாபேயின் ஸானு-பீஎவ் கட்சி சுதந்திர சிம்பாப்வேயின் முதலாவது தேர்தலில் அமோக வெற்றியீட்டியது. அவர் தேசத்தின் முதல் பிரதமரானார்.
பின்னர், 1987இல் அரசியல் யாப்பில் திருத்தங்களை சேர்த்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மாறினார்.
சிம்பாப்வேயின் ஆட்சியைக் கைப்பற்றியதும், தமது அரசியல் பகையாளியைக் கொன்று குவித்தமை பற்றி முகாபே மீது தீவிர விமர்சனங்கள் உள்ளன.
தாம் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த காலத்தில் தமது அரசியல் பகையாளியாக இருந்த ஜோஷூவா என்கோமோ என்பவர் தமக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கியபோது, ரொபர்ட் முகாபே இரும்புக்கரம் கொண்டு அடக்கினார். வடகொரியாவில் பயிற்சி பெற்ற துருப்புக்களைக் கொண்டு அரசியல் பகையாளிகளை ஒழித்துக் கட்டினார்.
இந்த ஒடுக்குமுறையில் முகாபேயின் படைகள் பொதுமக்கள் மத்தியில் இருந்தும் 20,000 பேரைக் கொன்று குவித்ததாக விமர்சனங்கள் உள்ளன.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது ஆட்சி பீடத்திற்கு சவால் விடுக்கப்படுவதை முகாபே சகித்துக் கொள்வ தில்லை. மோர்கன் த்ஸ்வாங்கிராய் என்ற அரசியல்வாதி ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியபோது, முகாபே சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்.
இந்த இயக்கம் சிம்பாப்வேயில் சிறுபான்மையினராக இருந்து கொண்டு பெருமளவு நிலத்தை தமது கையப்படுத்தியிருக்கும் வெள்ளைக்காரர்களின் பணத்தில் இயங்குகிறது என்று அவர் நம்பினார்.
வெள்ளைக்காரர்களிடம் இருந்து காணிகளைப் பறித்து கறுப்பின மக்கள் மத்தியில் விநியோகிக்கும் திட்டத்தைத் தொடங்கினார்.
இதற்காக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. நில உடமையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். நில அபகரிப்பு வன்முறைகளுக்கு வித்திட்டது. பலர் உயிரிழக்க நேரிட்டது. இது தவிர, வெள்ளைக்காரர்கள் பயிர் செய்த காணியில் கறுப்பினத்தவர்கள் கமத்தொழில் செய்வதில் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. போதிய பசளையோ, நீர்ப்பாசன வசதிகளோ, தேவையான பணமோ இருக்கவில்லை. பலர் கமத் தொழிலைக் கைவிட்டார்கள்.
விவசாயம் வீழ்ச்சி கண்டது. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. நிலைமை மோசமானது. மேற்குலக சமூகம் உதவி செய்ய முன்வந்தபோது, நாம் வெள்ளைக்காரர்களிடம் கையேந்துவதா என்று முகாபே இறுமாப்புப் பேசினார்.
உதவிகளை மறுத்தார். ஒத்துழைக்கவும் இல்லை. தீர்க்கமானதொரு பொருளாதாரத் திட்டமின்றி, அரசியல் நோக்கத்திற்காக காணிகளை மீளப்பெறும் திட்டம் சிம்பாப்வே தேசத்தை பொருளாதார சிக்கலுக்குள் தள்ளியது.
இந்த நிலைமை தேர்தல் களத்திலும் பிரதிபலிக்கத் தவறவில்லை.
2008ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றபோது, முதற்சுற்று வாக்கெடுப்பில் முகாபே தோல்வியுற்றார். முகாபேயின் தளபதிகள் திடீர் மூலோபாயத்தை வகுத்து, தேர்தலில் வெற்றி பெற்ற மோர்கன் த்ஸ்வாங்கிராயின் விசுவாசிகளைத் தாக்கினார்கள்.
இந்த வன்முறையில் 200 பேர் வரை கொல்லப்பட்டார்கள். இரண்டாவது சுற்று தேர்தல் நடந்தது. முகாபேயின் வெற்றியை த்ஸ்வாங்கிராயின் தரப்பு அங்கீகரிக்கவில்லை. அவர் வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்து நாற்காலியைத் தக்க வைத்துக் கொண்டார்.
ஒரு கட்டத்தில், எதேச்சாதிகாரி என்ற தோற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தாம் நல்லவர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த வேண்டிய தேவை முகாபேயிற்கு ஏற்பட்டது. இதற்காக பல திட்டங்களை வகுத்தார். ஊடகங்களுடன் நட்புறவானார்.
இந்த முயற்சிகளில் முகாபேயிற்கு உறுதுணையாக இருந்தவர், கிரேஸ் முகாபே. ஒரு காலத்தில் முகாபேயின் காரியதரிசியாக இருந்தவர். அவரது முதலாவது மனைவி மறைந்தபொழுது, அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர். தமது வாழ்க்கையில் தமக்கு நெருக்கமாக இருக்கும் பெண்மணி கிரேஸ் தானென பொது இடங்களில் முகாபே பகிரங்கமாகக் கூறினார்.
ஒரு கட்டத்தில் கிரேஸின் செல்வாக்கு அதிகரித்தது. அவர் தம்மை முக்கியத்துவம் மிக்கவராக சித்தரித்துக் காட்டினார். முகாபேயின் கட்சிக்குள் புகழ்பெற்றவராக பரிணமித்துக் கொண்டிருந்த பெண்ணை துணை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கு சதி செய்தார். இந்தப் பெண், குட்டைப் பாவாடை அணிந்தார் என்பதும், முகாபேயைக் கொல்ல சதி செய்தார் என்பதும் அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். இவை சோடிக்கப்பட்டவை என்பதை அனைவரும் அறிந்திருந்தார்கள்.
தமது தள்ளாத வயதில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டபோது, முகாபே வெற்றி பெற்றிருந்தார். அந்த வெற்றி குறித்து பல விமர்சனங்கள் இருந்தபோதும், சிம்பாப்வே மக்களுக்கு தமது சுதந்திரப் போராட்ட வீரன் மீதிருந்த நம்பிக்கை குறையவில்லை.
இருந்தபோதிலும், இந்த முதியவரை பகடைக்காயாக வைத்துக் கொண்டு, கிரேஸ் ஆட்சியைக் கைப்பற்ற முனைகிறோரோ என்ற சந்தேகம் எழுந்தபோது தான், முகாபேயிற்கு எதிரான அலை தீவிரம் பெற்றது.
2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முகாபேயின் இராணுவமே அவருக்கு எதிராக சதிப்புரட்சி செய்து, முகாபேயின் அரசியல் சீடராகக் கருதப்படும் எமர்சன் ம்நான்காவா என்பவரை ஆட்சிபீடத்தில் அமர்த்தியது.
இதே நிலைமையில் வேறொருவராக இருந்திருந்தால், முகாபே சிறையில் அடைக்கப்பட்டிருக் கலாம். அல்லது கொலை செய்யப் பட்டிருக்கலாம்.
ஆனால், சவால்களை அஞ்சாமல் வெற்றி கொண்ட தைரியமான தலைவர், தமது காணிகளை வெள்ளைக்காரர்களிடம் இருந்து மீட்டுத் தந்தவர் என்ற எண்ணம் சிம்பாப்வே மக்கள் மத்தியில் இருந்ததால், பதவி கவிழ்க்கப்பட்ட பின்னரும் ஹராரேயிலுள்ள சொகுசு மாளிகையில் தமது மனைவியுடன் சந்தோஷமாக வாழும் வாய்ப்பு அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டது.
கடைசிக் காலத்தில் முகாபேயிற்கு என்ன நோய் ஏற்பட்டது, அவர் எங்கே சிகிச்சை பெற்றார் என்ற விபரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. அவரை மக்கள் நல்லவராக போற்றினார்களா, தீயவராக தூற்றினார்களா என்பதும் தெரியவில்லை. மேற்குலக ஊடகங்கள் வாயிலாக நாம் பார்க்கும் முகாபே, வில்லத்தனம் மிக்கவராகத் தெரிந்தாலும், அவரொரு சகாப்தமாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் என்பது திண்ணம்.
– சதீஸ் கிருஷ்ணபிள்ளை –