ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 301 ரன்னில் ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.
ஓய்விற்கு பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி இரட்டை சதத்தை பதிவுசெய்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 497 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராடு 3 விக்கெட்டுகளும், ஜாக் லீச், கிரெய்க் ஒவர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 81 ரன்னும், ஜோ ரூட் 71 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில், ஜோஸ் பட்லர் 41 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.