ஆட்கடத்தலை முறியடிக்க அவுஸ்திரேலியாவிற்கு முழு ஆதரவு!

இலங்கையின் கரையோரத்தில் இடம்பெறும் ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் ஆகிய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியாவிற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.

 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியாவின் இறையாண்மை எல்லைகள் செயற்பாட்டின் தளபதி மேஜர் ஜெனரல் கிரேய்க் ப்ஃயூரினி தலைமையிலான தூதுக்குழுவினருடன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

மேஜர் ஜெனரல் க்ரேய்க் ப்ஃயூரினி தலைமையிலான தூதுக்குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, இலங்கையின் கரையோரத்தில் இடம்பெறும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளைக் குறைப்பதற்கு இலங்கை முழுமையான ஆதரவை வழங்குவதாக வெளிவிகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க உறுதியளித்தார்.

அத்தோடு சட்டவிரோத குடியேற்றத்தினால் ஏற்படத்தக்க ஆபத்துக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரசாரங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட நிலையானதும் நீண்டகால அடிப்படையிலானதுமான உத்திகளை கூட்டாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் வெளிவிவகார செயலாளர் இதன்போது எடுத்துரைத்தார்.