மீள்குடியேறி 10 வருடங்கள் கடந்தும் அடிப்படை வசதி இன்றி அவதியுறும் சோலை கிராம மக்கள்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட ‘பல்லவராயன் கட்டு சோலை’ கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மீள் குடியோறி சுமார் 10  வருடங்கள் ஆகியும் இது வரை தாங்கள் தொடர்ச்சியாக அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அவதியுறுவதாகவும் அரச அதிகாரிகள் தொடர்ச்சியாக பராமுகமாகச் செயற் படுவதாகவும் மெசிடோ நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் கருத்துக் கேட்கும் நிகழ்ச்சி திட்டத்தில் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பல்லவராயன் கட்டு சோலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் யுத்த காலப் பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தங்களுடைய சொந்த கிராமத்திலிருந்து  வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக ஆணைவிழுந்தான் , கந்தபுரம் , கோணாவில் முறிப்பு,  விஸ்வமடு, இருட்டுமடு உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களுக்கு இடம் பெயர்ந்து ஒவ்வொரு இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த பகுதி மக்கள் கார்த்திகை மாதம் அவர்களின் சொந்த நிலங்களில் மீள் குடியேற்றப்பட்டனர்.

ஆனால் மீள் குடியேறி 10 வருடங்கள் கடந்தும் பல்லவராஜன் கட்டு மக்கள் அடிப்படை வசதிகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் ஒழுங்கான போக்குவரத்து வசதிகள் இன்றி அன்றாட வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

 

அதே போன்று இது வரை குறித்த மக்களுக்கான ஒழுங்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் சுகாதரவசதிகள் அரசங்கத்தினால் செய்து தரப்படவில்லை எனவும் அதே நேரத்தில் தரம் 5 ஆண்டு வரை மாத்திரமே பாடசாலை காணப்படுவதால் 5 ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் 10 கிலோ மீற்றருக்கு மேற்பட்ட தூரம் காட்டுப் பாதைகளினால் பயணித்தே பாடசாலைக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக  பல்லவராஜன் கட்டு மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில்  இரவு நேரங்களில் யானைகளின் தொல்லைகள் கூட அதிகமாகக் காணப்படுவதால் தங்களால் பயிற்செய்கை மற்றும் வீட்டுத் தோட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

 

இந்த நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு ஆடம்பர வசதிகளைச் செய்து தராவிட்டாலும் அடிப்படை வசதிகளான ஆரம்ப சுகாதார நிலையம், வீதிகள் ,போக்குவரத்து போன்ற பொதுவான  வசதிகளையாவது செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.