ராட்சசி படத்தை பார்த்து பாராட்டிய மலேசிய அமைச்சர் மாஸ்லே மாலிக்கிற்கு நன்றி தெரிவித்து நடிகை ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார்.
ஜோதிகா நடிப்பில் வெளியான படம் ‘ராட்சசி’. இப்படம் கல்வியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை மலேசிய அமைச்சர் மாஸ்லே மாலிக் என்பவர் பார்த்து ஜோதிகா மற்றும் படக்குழுவினரை பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் மலேசிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஜோதிகா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு இந்திய திரைப்படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்ததோடு, அந்த படத்தில் கூறியது போல் தங்கள் நாட்டில் கல்வியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய தங்களுக்கு எனது நன்றிகள். கல்வி அமைப்பில் மாற்றம் வேண்டும் என்ற எங்களது குழுவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக உங்கள் பாராட்டை நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த படத்தில் பணிபுரிந்த 90% பேர் அரசு பள்ளியில் படித்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இந்த படத்தில் வலிமையான காட்சிகளாக வந்துள்ளது. அடிப்படை மக்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும், அனைத்து தரப்பினர்களும் கல்வி விஷயத்தில் சமமாய் நடத்தப்பட வேண்டும் என்ற எங்களது எண்ணத்தின் ஒரு சிறு வெளிப்பாடு தான் இந்த படம்.
இந்தியாவில் மிகப்பெரிய கல்வி மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற எங்களது இந்த முயற்சிக்கு எங்களது கல்வி அமைச்சரும் இந்த படத்தை பார்த்து பாராட்டியது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்கள் படக்குழுவினர்களுக்கு நீங்கள் கொடுத்த பாராட்டு இந்த படத்தையும் இதன் கருத்தையும் உலக அளவில் எடுத்து செல்ல உதவியாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி’ என்று ஜோதிகா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.