காவிரி வரலாறு

பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம். கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. பயணிக்கும் காவிரி, பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. இரு மாநில எல்லையில் 64 கி.மீ. என்பதையும் சேர்த்தால், காவிரி ஆற்றின் மொத்த நீளம் கிட்டத்தட்ட 800 கி.மீ.

இயற்கை ஆறுகள் நேர்க்கோட்டில் பாய்வதில்லை. காவிரி பொதுவாக தெற்கு, கிழக்கு திசைகளில் ஓடுகிறது. அது பாயும் நில அமைப்பு முதலில் குடகின் மலைப் பகுதியாகவும் பிறகு, தக்கணப் பீடபூமியின் மேட்டு நிலமாகவும், இறுதியில் தமிழகத்தின் சமவெளியாகவும் அமைகிறது.

கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு (ஊரகம்), சாம்ராஜ்நகர் மாவட்டங்கள் வழியாகவும், தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகவும் காவிரி பாய்கிறது.

காவிரிக் கரையில் அமைந்திருக்கும் முக்கிய நகரங்கள் கர்நாட கத்தில் குசால்நகர், மைசூரு, ரங்கப்பட்டணம். தமிழ்நாட்டில் மேட்டூர், ஈரோடு, கரூர், முசிறி, குளித்தலை, திருச்சிராப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார்.

வடிநிலப் பரப்பு

துணையாறுகள், கிளையாறுகள் உட்பட காவிரியின் வடிநிலம் எனப்படும் மொத்த நீரேந்துப் பரப்பு 81,303 சதுர கி.மீ. தமிழ்நாட்டில் 43,856 ச.கி.மீ., கர்நாடகத்தில் 34,273 ச.கி.மீ., கேரளத்தில் 2,866 ச.கி.மீ., புதுவையில் 160 ச.கி.மீ. காவிரியில் பாயும் சராசரி நீரளவு வினாடிக்கு 23,908 கன அடி.

காவிரித் தடம்

குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி பிறக்கிறது. குடகு மாவட்டத்தில் ஹாரங்கி ஆறு காவிரியில் கலக்கிறது. பிறகு, காவிரி மைசூரு அருகே மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமணதீர்த்தம் ஆகிய இரு ஆறுகளும் காவிரியில் கலக்கின்றன. கிருஷ்ணராஜ சாகரிலிருந்து வெளிப்படும் காவிரி, ரங்கப்பட்டணம் தீவைத் தோற்றுவிக்கிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி இரண்டாகப் பிரிந்து, வலப்புறம் ககனசுக்கி அருவியாகவும், இடப்புறம் பாறசுக்கி அருவியாகவும் 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. ககனசுக்கி அருவியில்தான் 1902-ல் ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு, கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இதன் பிறகு சிம்சா, அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இதையடுத்து ஆழமான குறுகிய பாறைகளின் வழியே காவிரி தமிழ்நாட்டை நோக்கிப் பாய்ந்து செல்கிறது. இங்கு அது ஆடு தாண்டும் காவிரி (மேகேதாட்டு) எனப்படுகிறது.

தமிழ்நாட்டில் காவிரி

மாநில எல்லை தாண்டி தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், புகைக் கல் என்னும் பொருளில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாம். ஒகேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து, அங்கிருந்துதான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது.

மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி (1.62 கி.மீ.), உயரம் 176 அடி (54 மீ). மேட்டூர் அணை தோற்றுவித்த நீர்நிலையான ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் பரப்பு 155 சதுர கிமீ.

அகண்ட காவிரி

மேட்டூரிலிருந்து புறப்பட்டுவரும் காவிரியுடன் பவானி ஆறு சேர்கிறது. அத்துடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின்பேரில், பவானி கூடுதுறைக்குத் திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு. பவானியிலிருந்து காவிரி ஈரோட்டை அடைகிறது. பெயர்தந்த அந்த இரு நீரோடைகளில் ஒன்று காவிரி, மற்றது காளிங்கராயன் வாய்க்கால்.

பிறகு, கொடுமுடி அருகேயுள்ள நொய்யலில் நொய்யலாறு காவிரியுடன் கலக்கிறது. கரூர் அருகேயுள்ள கட்டளையில் அமராவதி காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காவிரி விரிந்து செல்வதால் அகண்ட காவிரி என்று பெயர் பெறுகிறது.

கொள்ளிடம்

முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டி திருச்சிக்கு சற்று முன்னர் உள்ள முக்கொம்பில் மேலணையை அடைகிறது காவிரி. அங்கு இரண்டாகப் பிரிந்து, ஒரு கிளை கொள்ளிடம் ஆகிறது. வெள்ளப் பெருக்கின்போது மிகையாகப் பெருக்கெடுக்கும் நீரைத் திருப்பிவிட்டு அந்நீர் கொள்ளுமிடம் என்பதால் கொள்ளிடம் என்று பெயர்.

காவிரிக்குக் கொள்ளிடம் வடிகால் என்பதுபோல் காவிரிக் கழிமுகத்தில் பாயும் முதன்மையான எல்லா ஆறுகளுக்கும் வடிகால் ஆறுகள் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் நீர்ப்பாசன வாய்க்கால்போலவே வடிகால் வாய்க்காலும் இருப்பது பழந் தமிழரின் சிறந்த நீர் மேலாண்மைக்கு ஒரு சான்று.

கல்லணை

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டுக்கடங்காத காட்டாறாகப் பாய்ந்துகொண்டிருந்த காவிரியை அடக்கிக் கழனிகளில் பாய்ச்ச கரிகால் சோழன் கல்லணை கட்டினான். மலைக் குன்றுகள் ஏதுமற்ற சமநிலத்தில், இயந்திரங்களின் உதவியின்றி கல்லும் மண்ணும் கொண்டு மனிதன் கட்டிய மிகப் பழமையான அணை என்பது கல்லணையின் சிறப்பு. இது உலகிலேயே பயன்பாட்டிலுள்ள நான்காவது பழைய அணை.

நீர்த்தேக்கம் என்பதைவிடவும், நீரைக் கிளை பிரித்துவிடும் கலுங்கு முறை கொண்ட மதகு அணை என்று கல்லணையைச் சொல்லலாம். பழந் தமிழரின் கட்டுமானப் பொறியியல் அறிவுக்குச் சான்று. கல்லணை கட்டியதோடு அங்கிருந்து பூம்புகார் வரை காவிரிக்குக் கரை கட்டியவன் கரிகாலன்.

நெற்களஞ்சியம்

கல்லணையிலிருந்து காவிரி கவைகவையாகக் கிளைவிட்டு அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டியாறு, புது ஆறு, மன்னியாறு என்று பலவாகப் பிரிந்து, காவிரிக் கழிமுகம் (டெல்டா) படர்ந்து, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தைப் படைக்கிறது. கல்லணையிலிருந்து வெளியேறும் சராசரி நீரளவு: வினாடிக்கு 8,324 கன அடி.

காவிரியின் பயன்கள்

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 30 லட்சம் ஏக்கர் (12,000 ச.கி.மீ.) நிலப்பரப்பு காவிரிப் பாசனம் பெறுகிறது. காவிரிப் பாசனத்தை நம்பியுள்ள உழவர் தொகை பல லட்சங்களைத் தாண்டும். நைல் நதிக்கும் எகிப்திய நாகரிகத்துக்கும் உள்ள அதே உயிர்த் தொடர்பு காவிரி ஆற்றுக்கும் பழந் தமிழர் நாகரிகத்துக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் விவசாயம் மட்டும் அல்ல; வீராணம் திட்டவழி சென்னையின் குடிநீர்த் தேவையையும் காவிரிதான் பூர்த்திசெய்கிறது. காவிரியால் குடிநீர் பெறும் கிராமங்கள், நகரங்கள் ஏராளம்.

ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதி என்று சொல்லப்பட்ட காவிரி, இப்போது பிப்ரவரி முதல் மே வரை கிட்டத்தட்ட வற்றிப்போகும் நதி.

உடன்படிக்கைகள்-1892,1924

1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர்ப் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. 1924 அங்கே மைசூரு – கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூரு சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது. 1947-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் 1924 ஒப்பந்தப்படியே காவிரி நீர்ப் பகிர்வு நடந்துவந்தது.

1956-ல் மொழிவழி மாநில மறுசீரமைப்புக்குப் பின், குடகு கர்நாடகத்தின் பகுதி ஆயிற்று. 1954-ல் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் புலம் (யூனியன் பிரதேசம்) ஆயிற்று. புதுவையின் ஒரு பகுதியான காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்துவந்தது. கபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளத்தில் அமைந்திருந்தது. ஆகவே, புதிதாக கேரளமும் புதுவையும் காவிரி நீரில் பங்கு கேட்டன. பேச்சுவார்த்தை 1960-களின் முற்பகுதியில் தொடங்கி, 10 ஆண்டு காலம் நீண்டது.

ஆயக்கட்டு அங்கும் இங்கும்

1970-களில் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு கண்டறிந்தபடி, தமிழ்நாட்டின் காவிரி ஆயக்கட்டு (நீர்ப்பாசனப் பரப்பு) 25,80,000 ஏக்கர் என்றும், கர்நாடகத்தின் ஆயக்கட்டு 6,80,000 ஏக்கர் என்றும் தெரியவந்தது. தமிழகம் தன் ஆயக்கட்டைச் சுருங்கவிடக் கூடாது என்றும், கர்நாடகம் தன் ஆயக்கட்டை விரிவாக்க வேண்டும் என்றும் விரும்பியதுதான் உடன்பாடு ஏற்பட முடியாமல் போனதற்குக் காரணம்.

உச்ச நீதிமன்ற வழக்கு

1974-ல் ஒப்பந்தம் முடிந்த பிறகும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வழக்குத் தொடர்ந்து, பிரதமர் இந்திரா கேட்டுக்கொண்டதால் திரும்பப் பெற்றது.

இந்திய அரசமைப்பில் மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பகிர்வு தொடர்பான உறுப்பு 262 இந்திய அரசின் பொறுப்பைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர்ப் பூசல் சட்டம், 1956 என்பது தீராத சிக்கலைத் தீர்க்கத் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைப்பதற்கான வழிவகையைக் கொண்டுள்ளது.

1986-ல் தமிழக அரசு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி 1990 ஜூன் 2-ம் நாள் பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான இந்திய அரசு, காவிரித் தீர்ப்பாயம் அமைத்தது.

தீர்ப்பாயத்திடம் ஒவ்வொரு மாநிலமும் கேட்ட தண்ணீரின் அளவு (டிஎம்சி): கர்நாடகம்: 465, தமிழகம்: 566, கேரளம்: 99.8, புதுவை: 9.3.

உடனே தண்ணீர் திறக்க ஆணையிடுமாறு தீர்ப்பாயத்திடம் தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. தீர்ப்பாயம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி தீர்ப்பாயம் மறுபரிசீலனை செய்து இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.

1980-81க்கும் 1989-90க்கும் இடைப்பட்ட 10 ஆண்டு சராசரியைக் கணக்கிட்டு, ஒவ்வொரு நீர்ப்பாசன ஆண்டிலும் கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்பதே இடைக்காலத் தீர்ப்பு. மாத வாரியாகவும், அந்தந்த மாதமும் வாரவாரியாகவும் கர்நாடகம் திறந்து விட வேண்டிய நீரின் அளவு வரையறுக்கப்பட்டது.

கர்நாடகம் அதன் பாசனப் பரப்பை (ஆயக்கட்டு) அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது. இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது.

தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும் கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறித் தமிழகம் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூடிக் கிடந்தன.

1992, 1993, 1994 ஆண்டுகளில் போதிய மழைப் பொழிவு இருந்ததால், பெரிதாகச் சிக்கல் எழவில்லை. 1995-ல் பருவமழை பொய்த்ததால் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது.

காவிரி ஆணையம்

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றம் அறிவுறுத்தியபடி தமிழ்நாடு தீர்ப்பாயத்தை அணுகியது. தீர்ப்பாயம் 11 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டது. கர்நாடகம் இதை ஏற்க மறுத்ததால், தமிழ்நாடு மீண்டும் நீதிமன்றத்தை அணுகியபோது, பிரதமர் நரசிம்ம ராவ் இதில் தலையிட நீதிமன்றம் ஆணையிட்டது. பிரதமர் தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் 6 டிஎம்சி தண்ணீர் திறக்க ஆணையிட்டார்.

1997-ல் இந்திய அரசு காவிரி ஆற்று ஆணையம் அமைத்தது. கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த ஆணையம் அதிகாரமற்றதாக மாற்றப்பட்டது. இது பிரதமரையும் நான்கு மாநில முதல்வர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டது. எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டால்தான் இந்த ஆணையம் கூட முடியும். கூடினாலும் ஒருமனதாக மட்டுமே முடிவெடுக்க முடியும். இந்த ஆணையத்தால் ஒரு பயனும் விளையவில்லை.

இறுதித் தீர்ப்பு

2007 பிப்ரவரி 5 அன்று தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. கொள்ளிடம் கீழணை வரைக்கும் காவிரி வடிநிலத்தில் ஓராண்டு காலத்தில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டிஎம்சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுவைக்கு 7 டிஎம்சி ஒதுக்கப்பெற்றது. தமிழகத்துக்கு உரிய பங்கில் தமிழ்நாட்டுக்குள் கிடைப்பதுபோக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய அளவு 192 டிஎம்சிதான்.

கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு (டிஎம்சி) இடைக்காலத் தீர்ப்பில் 205 ஆக இருந்து, இறுதித் தீர்ப்பில் 192 ஆகக் குறைந்துபோனது. அதுவும்கூடக் கிடைக்க வழியில்லாமல் தவிக்கிறது தமிழகம்.

தமிழகமும் கர்நாடகமும் இத்தீர்ப்பில் குறைகண்டு, மீளாய்வு விண்ணப்பங்கள் தாக்கல் செய்தன.

இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் மாதவாரியாகத் திறந்துவிட வேண்டிய நீரளவு (டிஎம்சி) பின்வருமாறு அட்டவணையிடப்பட்டது: ஜூன்: 10, ஜூலை: 34, ஆகஸ்ட்: 50, செப்டம்பர்: 40, அக்டோபர்: 22, நவம்பர் 15, டிசம்பர்: 8, ஜனவரி: 3, பிப்ரவரி: 2.5, மார்ச்: 2.5, ஏப்ரல்: 2.5, மே: 2.5.

ஒரு மாதத்தில் தண்ணீர் குறைவாகக் கொடுத்தால், அடுத்தடுத்த மாதங்களில் அந்த நிலுவையைக் கொடுத்துக் கணக்கை நேர் செய்ய வேண்டும். பற்றாக்குறைக் காலத்தில் எவ்வளவு குறைவாகக் கிடைத்தாலும் இதே விகிதப்படி பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை கர்நாடகம் விடாப்பிடியாக எதிர்த்து நிற்கிறது.

மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு

தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமும் (Cauvery Management Board) காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட வேண்டும்; உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவிட்டிருக்கிறது. எனினும் எப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, காவிரி ஆற்று ஆணையத் தலைவர் என்ற முறையில் 2012-ல் ஒரு முறை, நாளொன்றுக்கு ஒரு விநாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்குக் கட்டளையிட்டார். கர்நாடக அரசு இந்தக் கட்டளையை நிறைவேற்ற மறுத்து உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாயிற்று. வேறு வழியின்றி தண்ணீர் திறந்துவிட்ட பின், கர்நாடகத்தில் பரவலான வன்முறைக் கிளர்ச்சி மூண்டது.

தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு 2013 பிப்ரவரி 20 அன்று இந்திய அரசு காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. அந்த நாள் முதல் இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது என்று பொருள். மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை இடைக்கால ஏற்பாடாக காவிரி கண்காணிப்புக் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. 1991, 2001, 2012 ஆண்டுகளில் கர்நாடகத்தில் மழைப் பொழிவு குறைவு என்று தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுத்து வன்முறைக் கிளர்ச்சி நடைபெற்றது. அப்போதும் இப்போது 2016லும் இதே சிக்கல்தான்.

அரசமைப்புச் சட்டப்படியான தீர்வு

இதற்குச் சட்டப்படியான தீர்வு என்பது இனியும் காலந்தாழ்த்தாமல் மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் அமைத்துத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உண்மையாகச் செயல்படுத்துவதே. இந்த விவகாரத்தில் இந்திய அரசு காட்டும் அக்கறையும், தமிழக அரசியல் கட்சிகள் கொடுக்கும் அழுத்தமுமே நிரந்தரத் தீர்வுக்கு வழிவகுக்கும்.

இறுதியில் ஒரு நாள் மேலாண்மை வாரியமும் ஒழுங்காற்றுக் குழுவும் ஏற்பட்ட பிறகு, அதையும்கூட கர்நாடகம் ஏற்க மறுக்கக் கூடும். வரலாற்றின் சுவரில் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது. மேலாண்மை வாரியத்தை ஏற்க மறுத்து கர்நாடகம் அவசரச் சட்டம் பிறப்பிக்கக் கூடும். அதற்கு எதிராக தமிழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகினாலும், உடனே முடிவுசெய்யாமல் மீண்டும் ஒரு சுற்று சுற்றிவிடும் ஆபத்து உள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இப்படித்தான் நடந்தது என்பதை மறக்க வேண்டாம். இந்திய அரசு கர்நாடகத்தின் பிடிவாதத்துக்குத் தரும் மதிப்பை தமிழ்நாட்டின் உரிமைக் குரலுக்குத் தந்து அரசமைப்புச் சட்டத்தின்படி தீர்வு காண வேண்டும்.

தியாகு