அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தடுத்து நிறுத்துவதற்கான கோத்தபாய ராஜபக்சவின் முயற்சிகளிற்கு எதிராக லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க மனுதாக்கல் செய்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு கடந்த வாரம் கோத்தபாய ராஜபக்ச கலிபோர்னியாவின் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் திரிபுபடுத்தப்படலாம்,பரப்புரை செய்யப்படலாம் ஊதிப்பெருப்பிக்கப்படலாம் என கோத்தபாய ராஜபக்சவி;ன் சட்டத்தரணிகள் தமது மனுவில் தெரிவித்திருந்தனர்.
இலங்கையின் தேர்தலில் நீதிமன்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் முடிவுகளை தீர்மானிக்கலாம் எனவும் அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெறுவார் அவர் வெற்றிபெற்றால் வெளிநாட்டு தலைவர் ஒருவரிற்கு விசாரணைகளில் இருந்து விடுப்புரிமை அளிப்பது என்ற அடிப்படையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டியிருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
கோத்தபாய ராஜபக்சவின் இந்த மனுவிற்கு எதிராகவே அகிம்சா விக்கிரமதுங்க மனுதாக்கல் செய்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இன்னமும் பல சவால்களை எதிர்கொள்கின்றார் என அகிம்சா விக்கிரமதுங்க இந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோத்தபாயராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக இன்னமும் உத்தியோகபூர்வமாக மனு தாக்கல் செய்யவில்லை, அவர் அமெரிக்க பிரஜை என்பது இன்னமும் பிரச்சினைக்குரிய விடயமாக உள்ளது, மேலும் தேர்தல் ஆணையகத்திடம் அவரிற்கு எதிராக பல முறைப்பாடுகள் உள்ளன என அகிம்சா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
கோத்தபாயராஜபக்சவின் வழக்கை கைவிடுவது பொதுநலனிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம், என தெரிவித்துள்ள அகிம்சா விக்கிரமதுங்க சுதந்திர ஊடகங்களிற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றை பாதுகாப்பதே எங்கள் வழக்கின் நோக்கம் கோத்தபாயராஜபக்ச சுதந்திர ஊடகங்களிற்கும் பொதுநலன்களிற்கும் எதிராக பரந்து பட்ட சதியினை முன்னெடுத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலும் கோத்தபாய ராஜபக்ச குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றார் என தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள அகிம்சா விக்கிரமதுங்க அவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பதற்காக இலங்கை நீதிமன்றங்கள் தங்கள் வழக்குகளை கைவிடவி;ல்லை எனவும் தெரிவித்துள்ளார்.