தெரிவுக்குழுவிடம் சாட்சியமளிக்க மைத்திரி இணக்கம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு சிறிலங்கா   ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற இந்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க முயற்சிகளை எடுப்பதுடன், ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசாரணைகளை நடத்தவும் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவுக்குழு மூலமாக தெரிய வருகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற  தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக்குழு தொடர்ச்சியாக பல தரப்பினரிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ள நிலையில் இறுதியாக ஜனாதிபதியை தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறும் அழைப்பு விடுத்தனர். எனினும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வரப்போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதியின் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதியை பாராளுமன்றத்திற்கு வரவழைக்காது ஜனாதிபதி செயலகத்திற்கு தெரிவுக்குழு சென்று அங்கேயே ஜனாதிபதியிடம் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ள தயாராகவும் தெரிவுக்குழுவின் முக்கிய உறுப்பனர் ஒருவர் மூலமாக தெரியவந்துள்ளது.