‘ ஒரு நாடு, இரு சமூக அமைப்புமுறைகள் ‘ பயன்தரவில்லை!

சீனாவின் ஹொங்கொங் விசேட நிருவாகப் பிராந்தியத்தில் வன்முறை ஆர்ப்பாட்டங்களை மூளவைத்த சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டமூலம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றது.ஆனால், மார்ச் மாதத்தில் தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள் இன்னமும் தொடர்கின்றன ;அவற்றின் தீவிரம் அதிகரித்து பரவலாக வன்முறைகளும் இடம்பெறகின்றன.அதனால் கிழக்காசியாவின் பொருளாதார இயக்கமையம் என்று வர்ணிக்கப்படும் அந்த பிராந்தியம் முடங்கிப்போய்க்கிடக்கிறது.

சீனாவில் இருந்து தப்பியோடிவரும் குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதற்கு வசதியான ஒரு ‘ புகலிடமாக ‘ ஹொங்கொங் மாறுவதற்கு காரணமாக இருக்கும் சட்ட ஓட்டைகளை மூடுவதை நோக்கமாகக்  கொண்டதே சீன நாடுகடத்தல் சட்டமூலம்.ஆனால், அதேவேளை சீனாவின் கொள்கைகளை  எதிர்க்கும் ஹொங்கொங் வாசிகள் சீன அரசின் அனுசரணையுடன் ‘ கடத்திச்செல்லப்படுவதை ‘ இந்த சட்டமூலம் நியாயப்படுத்தக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இந்த கவலை தான்  கிளர்ச்சியை மூளவைத்தது.

ஹொங்கொங் விசேட நிருவாகப் பிராந்தியத்தின் நிறைவேற்று அதிகார தலைவி கெறீ லாம் நாடுகடத்தல் சட்டமூலம் ” செத்துவிட்டது ” என்று கூறியிருக்கின்ற போதிலும், அதை அவர் உத்தியோகபூர்வமாக வாபஸ்பெறவில்லை.சட்டவாக்க செயன்முறைகள் முடிவுறுத்தப்பட்டுவிட்டது.ஆனால், சட்டமூலம் அவ்வாறே இருக்கிறது. சந்தர்ப்பம் வரும்போது அதற்கு புத்துயிரளிக்கப்படலாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அஞ்சுகிறார்கள்.

ஆனால், கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டங்கள் சட்டமூல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு அப்பால் சென்று ஜனநாயகத்துடனும் கம்யூனிஸ்ட் சீனாவுடன் ஹொங்கொங்  மேலும் ஒருங்கிணைக்கப்படக்கூடிய சாத்தியங்கள் மற்றும் 2047 ஆம் ஆண்டில் முழுமையாக சீனாவுடன் ஒன்றிணைக்கப்படவிருப்பது குறித்த பரந்த பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துபவையாக மாறியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

நாடுகடத்தல் சட்டமூலம் முழுமையாக வாபஸ்பெறப்படவேண்டும் ; பொலிசாரின் நடத்தைகள் குறித்து முழுமையான சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் ; கைது செய்யப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள்  விடுதலை செய்யப்படவேண்டும் ; அமைதியான  ஆர்ப்பாடடங்களை .’ கலகங்கள் ‘ என்று வர்ணிப்பதை நிறுத்தவேண்டும்  என்று ஆர்ப்பாட்டக்காரர்கள்  கோருகின்றார்கள். ஜூன் 9 சட்டமூலத்துக்கு எதிராக சுமார் பத்து இலட்சம் பேர் அணிதிரண்டார்கள். ஜூன் 16 இருபது இலட்சம் பேர் வீதிகளில் இறங்கினார்கள். அந்த ஒவ்வொரு தடவையும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கையை பொலிசார் குறைவாக 240,000 , 338,000 என்று அறிவித்தார்கள்.ஆனால்,  பொலிசார் கூறிய இந்த எண்ணிக்கைகள்  கூட கணிசமானவையே.

வரலாற்று நோக்குநிலை

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஹொங்கொங் 1997 ஆம் ஆண்டில் சீனாவின் ஒரு பகுதியாக்கப்பட்டது.ஆனால், ‘ ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் ‘ என்ற கோட்பாட்டின் கீழ் அது சுயாட்சிப் பிராந்தியமாகவே இருந்தது.2047 ஆம் ஆண்டில் ஹொங்கொங் முழுமையாக சீனாவுடன் ஒன்றிணைக்கப்படவிருக்கிறது.

ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வழக்கப்பட்ட மேற்கத்தைய பாணி சுதந்திரங்களுக்கு பழக்கப்பட்ட ஹொங்கொங் மக்கள் ஜனநாயக முறைமை ல்லாத சீனாவுடன் முழுமையாக ஒன்றிணைய விரும்பவில்லை.நாடு கடத்தல் சட்டம் போன்றவற்றை  எதிர்காலத்தில் வரவிருக்கும் ‘ இருள்சூழ்ந்த ‘ ஒன்றிணைப்புக்கான முன்னோடிகளாக நோக்கி அவர்கள் அஞ்சுகிறார்கள். ஹொங்கொங் சீனாவுக்கு திருப்பிக் கையளிக்கப்பட்ட 22 வருட  நிறைவு தினமான ஜூன் முதலாம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹொங்கொங் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு சூறையாடியதுடன் நகரின் காலனித்துவ கால கொடியையும் அதன் மேல்  ஏற்றினார்கள்.

உள்ளுர்வாசிகளிடம் இருந்து ஹொங்கொங்கை சீனாவின் ஹான் ( Han Dynasty )அரச வம்சம் கைப்பற்றிய கி.பி.111 தொடக்கம் 1842 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரிடம் ஜிங் அரச வம்சம் ( Qing  Dynasty )இராணுவரீதியாக முழுமையான தோல்வியை கண்டதைத் தொடர்ந்து அவர்களிடம் கையளிக்கப்படும் வரை அந்த பிராந்தியம் சீனாவின் பகுதியாகவே இருந்தது.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் வணிகர்கள் ஜிங் அரச வம்சத்துடன் (1644 — 1911) தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டனர்.பிரிட்டிஷ் குடியானவர்கள் பெரிதும் விரும்பிய ஆனால் அவர்களால் எங்குமே கண்டறியமுடியாதிருந்த தேயிலையையும் பட்டு புட்டுத்துணியையும்  ஜங் வம்ச ஆட்சியில் இருந்த சீனா உறபத்தி செயதது. சீனா வெள்ளியைப் பெற்றுக்கொண்டு தேயிலையையும் பட்டையும் விற்பனை செய்தது.ஆனால், ஜிங் ஆட்சியின் கீழ் ஒரு சில வணிக நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே  வணிகம் விளங்கியது ; வருடத்தில் ஐந்து மாதங்களுக்கு மாத்திரமே  வணிகம் அனுமதிக்கப்பட்டது.

 அபினி யுத்தம் 

ஆனால், கல்கத்தாவை தளமாகக் கொண்டியங்கிய (பிரிட்டிஷாருக்கு சொந்தமான ) கிழக்கிந்திய கம்பனி வங்காளத்தில் வளர்ந்த அபினை சீனாவுக்கு விற்பனை செய்யத்தொடங்கியதும் நிலைவரங்கள் பெருமளவுக்கு மாற்றமடைந்தன. மருந்துக்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்ட அபின் விரைவாகவே சீனாவில் களியாட்டத்துக்கான பிரபல போதைப்பொருளாக மாறியது. அதனால் அபின் இறக்குமதியையும் விற்பனையையும் ஜிங் அரச வம்ச ஆட்சி தடைசெய்தபோது கிழக்கிந்திய கம்பனி அதை சீனாவுக்கள் சட்டவிரோதமாக கடத்த ஆரம்பித்தது. சீனாவில் சட்டவிரோத அபின் விற்பனை பிரிட்டனின் வருடாந்த வருவாயின் பத்து சதவீதமாக அமைந்தது என்று அமெரிக்க வரலாற்றியலாளர் மெல்வின் பார்ன்ஸ் ஜூனியர் கூறுகிறார்.

அபின் மீதான சீனத்தடை 1839 ஆம் ஆண்டில் யுத்தத்துக்கு வழிவகுத்தது.அதுவே அபினி யுத்தம் என்று வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. மேலும் மோதல்களை அடுத்து 1842 நான்ஜிங் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன் விளைவாக ஜிங் அரச வம்சம் ஹொங்கொங்கை பிரிட்டனிடம்  “என்றென்றைக்குமாக ”  விட்டுக்கொடுத்தது.

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், மேற்கத்தைய, இந்திய மற்றும் சீன வணிகர்களின் வருகையை அடுத்து ஹொங்கொங் ஒரு சர்வதேச பரிமாணத்தை எடுக்க ஆரம்பித்தது. ஜிங் வம்ச ஆட்சியின் கீழான சீனாவில்  போர்கள்  சுமார் 3 கோடி பேரை பலியெடுத்தன.அதன் விளைவாக சீனப்பெருநிலப்பரப்பில் இருந்து ஹொங்கொங்கிற்கு பெரும் எண்ணிக்கையில் அகதிகள் வந்தனர்.1898 ஆம் ஆண்டில் ஜிங் அரச  வம்சத்துடன் பிரிட்டன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டது.அதன் விளைவாக ஹொங்கொங் தீபகற்பத்தில் ” புதிய ” பிராந்தியங்கள் புதிய குத்தகைக்கு பிரிட்டனிடம் 99 வருடங்களுக்கு  கொடுக்கப்பட்டன.

20 ஆம் நூற்றாண்டில் மாவோ சே துங் தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட கட்சிக்கும் ஷியாங் காய்  ஷேக் தலைமையிலான தேசியவாதிகளுக்கும் இடையே மூண்ட உள்நாட்டுப்போர் நிறைவளமுடைய  வணிகர்கள் உட்பட பத்து இலட்சத்துக்கும் அதிகமான சீனர்களை ஹொங்கொங்கிற்கு குடிபெயரவைத்தது. அது 1945 — 1949 காலகட்டத்தில் இடம்பெற்றது.

அந்த குடிபெயர்வின் விளைவாக ஹொங்கொங்கிற்கும் சீனப்பெருநிலப்பரப்புக்கும் இடையில் வாழ்க்கை முறையில், கலாசாரத்தில் மற்றும் பொருளாதார பழக்க வழக்கங்களில் கடுமையான வேறுபாடுகள் வளர ஆரம்பித்தன.ஹொங்கொங் தனித்துவமான அடையாளமொனறைப் பெறலாயிற்று. மாவோவின் மகத்தான முன்னோக்கிய பாய்ச்சலும் (Great Leap Forward 1958 — 1962 )) மகத்தான கலாசாரப் புரட்சியும் (Great  Proletarian Cultural Revolution 1966 — 1976 ) ஹொங்கொங்கிற்கும் சீனாவுக்கும் இடையிலான வேறுபாடுகளை மேலும் அதிகரிக்கச்செய்தன. சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய ஹொங்கொங்கின்  நிகர உள்நாட்டு உற்பத்தி 100 சதவீதத்தினால் வளர்ந்தது.

அரசியல் ரீதியிலும் ஹொங்கொங் முன்னேறியதாக விளங்கியது ; பிரிட்டனிடமிருந்து அரைச் சுதந்திரமுடையாதாக மாறியது. ஹொங்கொங் ஒரு நாள் முழுமையான சுதந்திர நாடாக வந்து இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்று பிரிட்டிஷ் பொதுநலவாயத்தின் ஒரு உறுப்புரிமை பெற்றதாக விளங்கும் என்று ஹொங்கொங்கில் இருந்த பலர் நம்பிக்கையுடன் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், பிரிட்டன் அந்த நேரத்தில் ( சீனா இப்போது செய்வதைப் போன்று ) ஜனநாயகத்தை ஒரு எல்லைக்கு அப்பால் ஊக்கப்படுத்த விரும்பவில்லை. இது 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களிலும் வயதுவந்தோருக்கான சர்வஜன வாக்குரிமை கோரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.ஆனால், அந்த போராட்டங்கள் பயனற்றவையாகின. 99 வருட குத்தகையின் முடிவில் 1997 ஆம் ஆண்டில் சர்வாதிகார சீனாவிடம் பிரிட்டன்  ஹொங்கொங்கை  கையளித்தபோது அதன் மக்கள் எதையும் செய்யமுடியாதவர்களாக பார்த்துக்கொண்டு நின்றார்கள். எவ்வாறெனினும் , ஒரு நம்பிக்கை ஔிக்கீற்று தென்படவே செயதது.ஹொங்கொங் கைமாற்றத்துக்கான வருடமாக 1997 ஆம் ஆண்டை நிர்ணயித்த 1985 சீன — பிரிட்டிஷ் கூட்டுப் பிரகடனம் கம்யூனிஸ்ட் சீனாவுக்கும் ஹொங்கொங்கிற்கும்இடையில் பாரிய சமூக , அரசியல் இடைவெளி இருப்பதை கருத்திலெடுத்தது.அதன் விளைவாக ” ஹொங்கொங் விசேட நிருவாகப் பிராந்தியத்தை ” உருவாக்கி, வெளியுறவு , பாதுகாப்பு விவகாரங்கள் தவிர்ந்த சகல விவகாரங்களிலும் அதற்கு கணிசமான சுயாட்சியை சீனா வழங்கவேண்டியேற்பட்டது.

விசேட நிருவாகப் பிராந்தியத்துக்கு சுயாதீனமான நீதி அதிகாரம் இருக்கிறது.ஹொங்கொங்கின் சட்டங்கள்  பெருமளவுக்கு மாற்றியமைக்கப்படாததாகவே இருந்துவருகின்றன.கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் உட்பட ஹொங்கொங் அனுபவித்த அரசியல் சுதந்திரங்களை 50 வருடகாலத்துக்கு பாதுகாக்கவேண்டியிருந்தது.

ஆனால், கைமாற்றம் இடம்பெற்ற உடனடியாக சீனா அதன் உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டியது.ஹொங்கொங்கின் புதிய இடைக்கால சட்டசபைக்கு மக்களால் தெரிவுசெய்யப்படாதவர்களை சீனா நியமித்தது.ஜனநாயக  — ஆதரவு  செயற்பாட்டாளர்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள் எனினும் எந்தப் பயனும் கிட்டவில்லை.2000 களில் ஹொங்கொங்கின் சட்டங்களை மதிப்பதாக சீனா இணங்கிக்கொண்ட போதிலும், அவற்றை வியாக்கியானம் செய்வதில் இருந்த வேறுபாடுகள் நிலைவரத்தை மாசுபடுத்தின.

பெய்ஜிங்கின் சார்பில் ஹொங்கொங்கின் பிரதம நிறைவேற்று தலைவர் ருங் ஷீ — ஹுவா தேசத்துரோக சட்டமூலத்தை அறிமுகப்படுத்தினார். சீன பெருநிலப்பரப்பில் தடைசெய்யப்பட்டிருந்த அமைப்புக்களை ஹொங்கொங்கிலும் தடைசெய்வற்கு அனுமதிக்கும் சட்ட ஏற்றாடுகளை அது கொண்டிருந்நது.பரந்தளவில் ஆ்ர்ப்பாட்டங்கள் இடம்பெற்றபோதிலும் பெய்ஜிங் அசைந்துகொடுக்கவில்லை

ஹொங்கொங் சட்டசபைக்கு  வேட்பாளர்களை அங்கீகரிப்பதற்கான உரிமையை தன்வசம் வைத்திருக்கப்போவதாக 2014 ஆம் ஆண்டில் சீனா அறிவித்தது. அந்த தீர்மானத்தையடுத்து சுதந்திரமான தேர்தல்களைக் கோரும் மூன்றுமாத கால போராட்டம்  மூண்டது. அந்த போராட்டங்களுக்கு எதிராக சீனா ” தேசபக்த கல்வி இயக்கத்தை ” ஆரம்பித்தது. ” ஒரே சீனா ” என்ற அடையாளத்தை வளர்ப்பதற்கு ஹொங்கொங்கில் கல்வி பாடவிதானத்தை மாற்றியமைக்கும் நோக்குடனானதே அந்த இயக்கம்.சீனாவுக்காக தாங்கள் மனதிற்கொண்டிருக்கும் எதிர்காலத்திற்குள் ஹொங்கொங்கை கூட்டிணைப்பதற்கு சீனத் தலைவர்கள் அவசரப்படுகிறார்கள் என்று மெல்வின் பார்ன்ஸ் ஜூனியர் ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்துக்காகவும் மியாமி பல்கலைக்கழகத்துக்காகவும் எழுதிய ஆய்வறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

“ஆனால், பழைய ஹொங்கொங் சந்தடியின்றி அடங்கிப்போவதற்கு மறுத்திருக்கிறது.ஹொங்கொங்வாசிகள் தங்களது பழைய அடையாளத்தின்  அம்சங்களையும் கூடுதல் ஜனநாயகத்தைக் கொண்ட எதிர்காலம் பற்றிய கனவுகளையும் கைவிட மறுப்பார்களேயானால், ஒரு நாடு, இரு சமூக அமைப்புமுறைகள் ஏற்பாடு போதுமானதல்ல என்று நிரூபிக்கப்படலாம்.முழுமையான ஒன்றிணைவுக்கு இன்னமும் 18 வருடங்கள் இருக்கும் நிலையில், 150 வருடங்களுக்கும் அதிகமான பிரிவினையினால் உருவாக்கப்பட்ட பெரும் பிளவை  இரு தரப்பினரும் எவ்வாறு இணைக்கப்போகிறார்கள் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது ” என்று பார்ன்ஸ் கூறுகிறார்.

 பி.கே.பாலச்சந்திரன்

( நியூஸ் இன் ஏசியா )