தலைநிமிர்ந்து வாழ ! எழுக தமிழுக்கு அணி திரளுங்கள்!!

எமது அன்பிற்கினிய தமிழ் மக்களே!

யுத்தம் முடிந்து சுமார் ஏழரை வருடங்கள் உருண்டோடிவிட்டது. நாங்கள் வாக்களித்து உருவாக்கிய ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒன்றரைவருடம் ஆகிவிட்டது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளது. புதிய அரசாங்கம் இலங்கைத்தீவில் ஒரு நல்லாட்சியை உருவாக்கும் அது தமிழ் மக்களுக்குமான நல்லாட்சியாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் இலங்கை தமிழ்மக்கள் தொடர்பாக முன்னைய அரசாங்கம் கொண்ட அதே நிகழ்ச்சி நிரல்களையே இந்த அரசாங்கமும் கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது.

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர், அம்பாறை, திருகோணமலை போன்ற இடங்கள் பாரிய சிங்களக் குடியேற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அவை பௌத்த சிங்கள பிரதேசங்களாக மாற்றப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை என்கிற சிங்கள தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. அதே போன்று திருகோணமலை மாவட்டத்தில் சேருவாவிலை என்னும் புதிய சிங்களத் தொகுதி உருவாக்கப்பட்டது. அதே போன்று அம்பாறையும் சிங்கள மாவட்டமாகியது. தற்போது அதன் பெயரும் திகாமடுமல்ல என மாற்றப்பட்டுள்ளது.

இப்பொழுது 95 வீதம் தமிழ் மக்களைக் கொண்ட வடக்கு மாகாணத்தினை சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்குள் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டங்களை இராணுவத்தினரின் பங்களிப்புடன் இந்த அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. தமிழ் மக்களின் எதிர்ப்புக்களையும் மீறி வடக்கு-கிழக்கின் பலபகுதிகளில் குறிப்பாக வடக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் திருகோணமலையின் பல பிரதேசங்களிலும் சிங்கள பௌத்த மக்கள் இல்லாத இடங்களில் மிகப் பெரிய அளவில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதும் புத்தர்சிலைகளை நிறுவுவதுமான பணி மிக வேகமாக நடைபெற்று வருகின்றது. இதனை நிறுத்துமாறு தமிழ் மக்கள் கோரியும்கூட அந்தக் கோரிக்கையை உதாசீனம் செய்து, இராணுவம் ஒரு தொடர்பணியாக இதனை முன்னெடுத்து வருகின்றது.

வடக்கு – கிழக்கு மாகாணத்தை சிங்கள பௌத்த ஆளுமைக்குள் கொண்டுவருவதற்கான செயற்பாடே இதுவென நாம் அஞ்சுகின்றோம். தமழ் மக்களின் தனித்துவம் அவர்களின் அடையாளம் பாதுகாக்கப்படவேண்டுமாயின், இலங்கை அரசாங்கத்தின் பௌத்த விகாரைகளை நிறுவுவதற்கான செயற்பாடுகளும், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குகின்ற நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

அரசியல் தீர்வின் முக்கியத்துவம்

இலங்கையில் ஒரு புதிய அரசியல் சாசனம் கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தை ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றி புதிய அரசியல் சாசனத்திற்கான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த அரசியல் சாசனம் என்பது சம~;டித் தீர்வுத் திட்டத்தின் பிரகாரம், இணைந்த வடக்கு கிழக்கில், தமிழர் தேசம், அதன் தனித்துவமான இறைமை, சுயநிர்ணய உரிமை என்பனவற்றின் அடிப்படையில் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும். இது விடயத்தில் தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் உள்வாங்கப்படல் வேண்டும். இன்னமும் இரண்டு மாதங்களில் புதிய அரசியல் சாசனம் வர இருக்கின்றது. தமிழ்மக்களைப் பொறுத்தவரை இது முக்கியமான காலகட்டம். இந்தக்கால கட்டத்தை நாம் தவறவிடக்கூடாது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் தனது கூட்டத் தொடரை ஆரம்பித்திருக்கும் காலகட்டத்தில், ஐ.நா. பொதுச்சபை தனது கூட்டத்தொடரை தொடங்கியிருக்கும் வேளையில் இப்போராட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இராணுவம் குவிக்கப்பட்டு இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. பத்து இலட்சம் மக்கள் வாழ்கின்ற இந்தப் பிரதேசத்தில் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, கடற்படை, விமானப்படை மற்றும் பொலிசார் என்பவர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்ள்ளனர்.

இவ்வாறு இராணுவத்தினரை வைத்திருப்பதன் காரணமாக வடக்கு மாகாணம் மட்டும் 67,000 ஏக்கர் காணிகளை இப்படையினர் தம்வசம் வைத்திருக்கின்றார்கள். இந்தக் காணிகளில் பெருமளவு விவசாய உற்பத்திக்காகவும், விளையாட்டுத் திடல்களாகவும், உல்லாச விடுதிகளாகவும் பாவிக்கப்பட்டுவரும் அதேசமயம், இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக இக்காணிகளில் இருந்த தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து இன்றும் முகாம்களிலும் வாடகை வீடுகளிலும் அகதிகளாக வாழ்ந்துவருகின்றனர். இந்த மக்கள் முழுமையாக தமது சொந்தக் காணிகளில் குடியேற வேண்டும். அவ்வாறு குடியேறுவதனூடாகத்தான் தமது வாழ்வாதாரங்களான விவசாயம், மீன்பிடி போன்றவற்றை உத்தரவாதப்படுத்திக்கொள்ள முடியும். அவ்வாறு அவர்கள் மீளக்குடியேற வேண்டுமாயின் இராணுவத்தினர் அவர்களது காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும். கிழக்கு மாகாணத்திலும் இராணுவத்தினர் பிரசன்னமாகியுள்ளனர். எனவே வட-கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவம் அகற்றப்படல் வேண்டும் எனக் கோருகின்றோம்.

சர்வதேச மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான சட்டஉரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. எனவே சர்வதேச விசாரணை ஒன்றினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக மேற்கொள்ளுமாறு கோருகின்றோம்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும். காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான உண்மைகள் கண்டறியப்படவேண்டும். முன்னர் ஏற்பட்ட நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாவண்ணம் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டும் உண்மைகள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். என்றும் இந்தப் பேரணியினூடாகக் கோருகின்றோம்.

யுத்தத்தின் காரணமாக விவசாயிகள், மீனவர்கள் மிகப்பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் வரையில், தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் மற்றும் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருப்பதும், தமிழ் மக்களது கரைவலைப்பாடுகளை சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதும் எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை சீர்செய்து வடக்குமாகாண மீனவர்களின் வாழ்வாதாராத்தை மீளக்கட்டியெழுப்ப வழியேற்படுத்துமாறு இந்த பேரணியினூடாக வலியுறுத்த விரும்புகின்றோம்.
மேற்கண்ட விடயங்களை வலியுறுத்தி, ‘எழுக தமிழ்’ எனும் தொனிப்பொருளில் மாபெரும் பேரணி ஒன்றை நடாத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவையில் இணைந்துள்ள பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும், பல்கலைக்கழக சமூகமும் வணிகர் அமைப்புக்களும், தொண்டு நிறுவனங்களும், விவசாய மீனவ அமைப்புக்களும் ஒன்றுகூடி முடிவெடுத்தன.

எதிர்வரும் 24ஆம் திகதி காலை 9.00மணிக்கு நல்லூரிலிருந்தும் திருநெல்வேலி பல்கலைக்கழக சந்தியிலிருந்தும் இப்பேரணிகள் புறப்பட்டு யாழ் முற்றவெளியைச் சென்றடைந்து, எமது கோரிககைகளை வலியுறுத்தும் பிரகடனங்களும் மேற்கொள்ளப்படும்.

அன்பிற்கினிய தமிழ் மக்களே!

இவை தேர்தலை மையப்படுத்திய கோரிக்கைகள் அல்ல. ஒட்டுமொத்த தமிழினத்தின் கோரிக்கைகள். நாம் உருவாக்கிய புதிய ஆட்சியிலும் எமது பிரச்சினைகள் இன்னமும் பூதாகாரமாக வளர்ந்துகொண்டு செல்கின்றன. இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழரினதும் கடமையாகும்.

எனவே எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமையன்று தாங்கள் இந்தப் பேரணியில் கலந்து கொள்வதுடன், தங்களது கடைகளையும், சந்தைகளையும், ஏனைய வேலைத் தளங்களையும் பூட்டி அனைத்து தொழிலாளர்களையும் இந்தப் பேரணியில் கலந்துகொள்ள ஊக்கமளிக்குமாறு அனைத்து வணிகப் பெருமக்களையும் சிறுதொழில்முனைவோர்களையும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

இடம் பெயர்ந்த மக்கள், காணாமல் போகச்செய்யப்ட்டோரின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவுகள், மீனவர்கள், விவசாயிகள், பல்கலைக்கழக சமூகத்தினர், கல்விச்சமூகத்தினர் அரசு மற்றும் அரசுசாரா ஊழியர்கள், மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்று விரும்புகின்ற அனைவருரையும் இந்தப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.