தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரான ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி. ) வின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்தவாரம் ‘ கேசரி ‘ க்கு வழங்கிய நேர்காணலில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவு குறித்து தெரிவித்திருக்கும் கருத்து விரிவான விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஏனைய தேர்தல்களில் தமிழ் அரசியல் கட்சிகளை ஆதரிக்கலாம்.ஆனால், ஜனாதிபதி தேர்தல் என்று வரும்போது தமிழ் மக்கள் தென்னிலங்கை கட்சியொன்றை ஆதரிப்பதென்றால், தென்னிலங்கை கட்சியொன்றை அவர்கள் நம்புவதென்றால் ஜே.வி.பி.யே ஒரே தெரிவாக இருக்கமுடியும் என்று கூறியிருக்கும் திசாநாயக்க ” தமிழ் மக்களின் கொள்கைகள், எதிர்பார்ப்புகளை தென்னிலங்கை மக்கள் மத்தியில் சரியான முறையில் கொண்டுசெல்லவேண்டும் ; தமிழ் மக்கள் மத்தியில் எமது அரசியலை பலப்படுத்தவேண்டும்.இந்த இரு பணிகளையும் உருப்படியாக செய்யாமல் முன்னோக்கி நகரமுடியாது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுவரையான  தங்களது அணுகுமுறைகளினாலும் செயற்பாடுகளினாலும் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கமுடியவில்லை.இறுதிவரை முடியாது என்பது இதன்  அர்த்தமில்லை. வடக்கு, கிழக்கு மக்களின் மக்களை வென்றெடுக்கும் முயற்சிகளை தாங்கள் கைவிடப்போவதில்லை என்றும் ஜே.வி.பி.தலைவர் கூறியிருந்தார்.

தமிழ் மக்களின் தெரிவாக இருக்கக்கூடிய தென்னிலங்கை அரசியல் கட்சியென்றால் அது தங்களது கட்சியே என்று கூறுகின்ற அவர், இதுவரையில் தங்களால் அந்த  மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியாமல் போயிருப்பதற்கான அடிப்படைக் காரணங்களை ஒரு கணம் திரும்பிப்பார்ப்பது மிகவும் பொருத்தமானதாகவும் பயனுறுதியுடையதாகவும் இருக்கும். உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பின்னரான இன்றைய  காலகட்டத்தில் புதிய சிந்தனை வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர்கள் கூறிவந்திருக்கின்ற போதிலும், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தங்களது சிந்தனையில் புரிந்துகொள்ளக்கூடிய எந்த அடிப்படை மாற்றத்தையும் செய்துகொண்டதாக இல்லை. சிறுபான்மை  இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகள் மற்றும் மனக்குறைகள்  தொடர்பில் தெற்கில்  மக்கள் மத்தியில் எண்ணப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு   குறிப்பிடத்தக்க செல்வாக்குடைய  அரசியல் சக்தி என்ற வகையில் தாங்கள் எதைச் செய்திருக்கிறார்கள் என்பதை ஜே.வி.பி.தலைவர்கள் ஆத்மசோதனை செய்து பார்க்கவேண்டும்.

இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டு கால அரசியல் வரலாறு இனப்பிரச்சினை தொடர்பான ஜே.வி.பி.யின் நிலைப்பாடு எப்போதுமே தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு மாறானதாகவே இருந்துவந்திருப்பதை காட்டுகிறது. மார்க்சிய — லெனினச கோட்பாடுகளைப் பின்பற்றுகின்ற கட்சி என்று உரிமைகோரிக்கொள்கின்ற போதிலும்,சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரச்சினைகள் என்று வரும்போது அதுவும் குறிப்பாக, அதிகாரப்பரவலாக்கல் என்று வரும்போது ஜே.வி.பி.யிடம் ஒருபோதுமே முற்போக்கு கொள்கை அணுகுமுறை இருந்ததில்லை. இப்போதும் கூட அதிகாரப்பரவலாக்கல் குறித்து அவர்களின் நிலைப்பாடுகள் தெளிவானவையாக இல்லை. இது விடயத்தில் அந்த கட்சியின் வரலாற்றை ஒரு கணம் திரும்பிப் பார்ப்போம்.

1957 பண்டா — செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட வேளையில் ஜே.வி.பி.இருக்கவில்லை. ஆனால், அதன் தாபகத் தலைவரான றோகண விஜேவீர 1966 டட்லி — செல்வா உடன்படிக்கைக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கொழும்பில் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டார். அந்த நேரத்தில் விஜேவீர சீனச்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார். இனவாத நோக்கில் நடத்தப்பட்ட அந்த பேரணியில் பங்குபற்றக்கூடாது என்று கட்சி விதித்த கட்டுப்பாட்டையும் மீறி அவர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

அரசாங்கங்களை தூக்கியெறியும் நோக்கிலான ஆயுதக்கிளர்ச்சிகளை அதன் வரலாற்றில் இரு தடவைகள் முன்னெடுத்த ஜே.வி.பி. ஜனநாயக அரசியல் வாழ்க்கையில் தேசிய இனப்பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகளை ஒருபோதும் ஆதரிக்கவில்லை.ஜெயவர்தன அரசாங்கம் 1980 களின் ஆரம்பத்தில் மாவட்டசபைகளை அறிமுகப்படுத்தியபோது ஜே.வி.பி.அதை எதிர்த்து தென்னிலங்கை மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்தது.

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜனாதிபதி ஜெயவர்தனவும் 1987 ஜூலையில் இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கயைில் கைச்சாத்திட்ட வேளையில் தலைமறைவாக இயங்கிய ஜே.வி.பி.இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிரான போராட்டம் என்று கூறிக்கொண்டு அதன்இரண்டாவது ஆயுதக்கிளர்ச்சியை தீவிரப்படுத்தியது.

சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து அரசியலமைப்புக்கான 13 திருத்தத்தின் மூலமாக கொண்டுவரப்பட்ட மாகாணசபைகள் முறையையும் ஜே.வி.பி.நிராகரித்தது.

ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் 1989 பிற்பகுதியில் ஜே.வி.பி.யின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டு விஜேவீரவும் பல தலைவர்களும் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 5 வருடங்கள் ஒரு உறங்குநிலையில் இருந்த அந்த கட்சி 1994 ஜனநாயக அரசியலுக்கு மீண்டும்திரும்பியது.ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் மாகாணசபைகள் தேர்தல் உட்பட சகல தேர்தல்களிலும் அது போட்டியிட்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிருவாகம் 2002 நோர்வேயின் அனுசரணையுடன் மு்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கு எதிராக தென்னிலங்கையில் முடுக்கிவிடப்பட்ட இனவாதப் போராட்டங்களின் முன்னரங்கத்தில் ஜே.வி.பி.நின்றது. ஒரு கட்டத்தில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஜனாதிபதி திருமதி குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்திலும ஜே.வி.பி.பங்கேற்றது.அதன் முக்கிய தலைவர்கள் அமைச்சர் பதவிகளையும் ஏற்றுக்கொண்டார்கள்.ஆனால், 2004 சுனாமியில் பாதிக்கப்பட்ட வடக்கு — கிழக்கு மாகாணங்களில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியமர்வு பணிகளைச் செய்வதற்கு  விடுதலை புலிகளின் பங்கேற்புடன் நிருவாக ஏற்பாடொன்றை வகுப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை ஆட்சேபித்து அரசாங்கத்தில் இருந்து ஜே.வி.பி.வெளியேறியது.

பிறகு 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் நோர்வே அனுசரணை  சமாதான  முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்திக்கொண்டு போட்டியிட்ட மகிந்த ராஜபக்சவை ஜே.வி.பி.ஆதரித்தது. ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்காவிட்டாலும் அவரால் முன்னெடுக்கப்பட்ட முழுவீச்சிலான போரை அந்த கட்சி பூரணமாக ஆதரித்தது.போரில் அப்பாவி குடிமக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் குறித்து அவர்கள் பெரிதாக எதுவும் பேசியதில்லை.

ராஜபக்சவுடனான குறுகிய கால ஐக்கியத்துக்குப் பிறகு அவரிடமிருந்து பிரிந்த ஜே.வி.பி. அவரினதும் சகோதரர்களினதும் ஆட்சிக்கு எதிரான போராட்ட இயக்கத்தில் இணைந்துகொண்டது.2010 ,2015 ஜனாதிபதி தேர்தல்களில் எதிரணியின் பொதுவேட்பாளர்களை ஆதரித்த ஜே.வி.பி.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்கத்தை அதன் ஆரம்பக்கட்டங்களில் விமர்சன அடிப்படையில் ஆதரித்தது.ஆனால், அதன் கொள்கைகளையும் செயற்பாடுகளையும் பிறகு ஜே.வி.பி. கடுமையாக கண்டனம் செய்யத்தொடங்கியது. புதிய அரசியலமைப்பு வரைவுச்செயன்முறைகளில் பங்கேற்ற போதிலும் துடிப்பான பங்கை அக்கட்சி வகிக்கவில்லை ;அதிகாரப்பரவலாக்கல்குறித்து தெளிவான எந்த யோசனையையும் முன்வைக்கவுமில்லை.

இவ்வாறாக ஜே.வி.பி.யின் அரசியல் வரலாற்றை சுருக்கமாக இங்கு கூறமுனைந்ததற்கு காரணம் தேசிய பிரச்சினைக்கு அரசியல்தீர்வொன்றைக் காண்பதற்கு மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு முயற்சியையும் ஒருபோதுமே அது ஆதரிக்கவில்லை என்பதையும் சிறுபான்மை இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவாக நிற்கும் முற்போக்கு அரசியல் சக்திகளுடன் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டதில்லை என்பதையும் வரலாற்றச் சான்றுடன் உணர்த்துவதேயாகும்.

ஆகவே, தென்னிலங்கையின் வேறு எந்த அரசியல் கட்சியையும் விட தமிழ் மக்களின் தெரிவாக இருக்கக்கூடியது ஜே.வி.பி.யே என்று கூறுகின்ற அதன் தலைவர் திசாநாயக்க தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும் அந்த கட்சிகளை விடவும் வேறுபட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கவேண்டியது அவசியம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக, தமிழ் மக்களைப் பொறுத்தவரை  ‘ மதநம்பிக்கைக்கு ‘  ஒப்பானதாக அவர்களிடம்  நிலைபெற்றுவிட்ட அதிகாரப்பரவலாக்கல் விவகாரத்தில் இதுகாலவரை ஜே.வி.பி.கடைப்பிடித்துவந்த அணுகுமுறையையும் நிலைப்பாட்டையும் மாற்றிக்கொண்டால் தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறுவது குறித்து சிந்திக்க முடியும்.அத்தகைய மாற்றத்துக்கு தனது கட்சியை வழிநடத்துவதற்கு திசாநாயக்க அரசியல் துணிச்சலை வரவழைத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கலாமா?