கலிபோர்னியா படகு தீ விபத்து- 25 பேர் பலி – கடலில் மிதக்கும் சடலங்கள்!

கலிபோர்னியாவில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 25 பலியாகியுள்ளனர்.  கலிபோர்னியாவின் சண்டாகுறூஸ் கடற்கரை பகுதியில் படகில் ஏற்பட்ட தீ காரணமாகவே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

25 பேர் பலியானதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.அவர்களின் உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.

நான்கு உடல்களை மீட்டுள்ளோம்,ஆனால் அவைகளை அடையாளம் காணமுடியவில்லை  என முன்னதாக அதிகாரிகள் தெரிவிதிருந்தனர்.

கொன்செப்டன் எனப்படும் படகிற்கு அருகில் நான்கு சடலங்கள்  கடலில் மிதக்கின்றன  எனவும் அதிகாரிகள் தெரிவிததிருந்தனர்

படகில் 39 பேர் பயணித்துள்ளனர் இவர்களில் 26 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்..

படகி;ல் தீப்பிடித்ததை தொடர்ந்து  ஐந்து பேர் கடலில் குதித்துள்ளனர், என தெரிவித்துள்ள அதிகாரிகள் பயணிகள் கீழ் தளத்திலிருந்தனர், அவர்கள் தீயில் சிக்குண்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தீ மிகவும் கடுமையானதாக காணப்பட்டது  எனவும் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் தீயை அணைத்த பின்னரும் எங்களால் உள்ளே சென்று எவராவது உயிருடன் உள்ளனரா என்பதை பார்க்க முடியாத நிலை காணப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை படகில் தீப்பிடித்ததை தொடர்ந்து உதவிக்கு விரைந்த கடலோர காவல்படை கப்பலின் அதிகாரிகளுடன் படகின் தலைமை மாலுமி மேற்கொண்ட உரையாடல்கள் குறித்த சம்பவங்கள் வெளியாகியுள்ளன.

இந்த உரையாடல் படகின் தலைமை மாலுமி கடும் பதட்டத்தில் காணப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளது.

கடலோர காவல் படை கப்பலில் உள்ளவர்கள்  படகில் 33 பேர் உள்ளனரா அவர்களால் தப்பமுடியாதா என கேட்பதையும் ,அவர்கள் உள்ளே சிக்கியுள்ளனரா  கதவை உடைத்து அவர்களை காப்பாற்ற முடியாதா என  மீண்டும் கேட்பதையும் உரையாடல்கள் மூலம் அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை கடலில் குதித்து உயிர் தப்பிய ஐந்து பேரும் அருகில் காணப்பட்ட கிரேட் எஸ்கேப் என்ற படகிலிருந்தவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நாங்கள் படகில் உறங்கிக்கொண்டிருந்த வேளை பெரும் சத்தங்கள் கேட்டன என கிரேட் எஸ்கேப்பின் உரிமையாளர்களான பொப்பும் சேர்லி ஹன்சனும் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் வெளியில் பார்த்தபோது படகிலிருந்து உயிர் தப்பியவர்களை பார்த்தோம் அவர்கள் இயலாத நிலையில் கடலில் குதித்ததாக தெரிவித்தனர் என பொப்பும் சேர்லி ஹன்சனும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட படகு முற்றாக தீயில் சிக்கியிருந்ததை பார்த்தோம்,படகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தீயை அவதானிக்க முடிந்தது வெடிப்புச்சத்தங்களும் கேட்டன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.