இலங்கையைச் சேர்ந்த யுவதியொருவரை அவுஸ்திரேலியாவில் விபத்திற்குள்ளாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை அவுஸ்திரேலியாவின் விக்டோரியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மெர்பேர்ன், கிளெடன் பகுதியிலுள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கடந்த 29 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நிஷாலி பெரேரா என்ற 20 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
அதிவேகமாக வந்த கார் ஒன்று வெலிங்டன், சீனெக் புலேவட் பகுதியில் வீதியைக் கடந்துகொண்டிருந்த மாணவியை மோதித்தள்ளிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது.
இதன் பின்னர் விபத்தினை ஏற்படுத்திய கார், சம்பவம் நடைபெற்று ஒரு மணி நேரத்தின் பின் கிளெடன் நோர்த் ரோட் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் சென்றவரை பொலிஸார் தொடர்ந்தும் தேடிவந்த நிலையிலேயே சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதியையும் மேலும் ஒருவரையும் விக்டோரியப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
37 வயதுடைய ஷேன் கோக்ரேன் என்ற ஆணொருவரும், 33 வயதான லாரன் ஹிண்டஸ் என்ற பெண்ணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.