கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது குடும்பத்தினர் மீது கருணை காண்பித்து தங்களை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்குமாறு பிரியா பிரதமர் ஸ்கொட் மொறிசனிற்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கிறிஸ்மஸ் தீவிலிருந்து எஸ்பிஎஸ் தமிழ்ச்சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தனது குடும்பத்தினர் சமீபத்தில் சந்தித்துள்ள துயரத்தின் சுமையை தான் உணர்வதாக தெரிவித்துள்ள அவர் தாங்கள் வாழ்ந்த குயின்ஸ்லாந்தின் சிறிய நகரிற்கு எப்போது மீண்டும் திரும்பலாம் என்பது குறித்து குழந்தைகள் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ,ஆகவே அவர் பிள்ளைகளின் உணர்வுகளை உணர்ந்துகொள்ளக்கூடியவராகயிருப்பார் என பிரியா தெரிவித்துள்ளார்.
எனது குடும்பத்திற்கு அவர் கருணை காட்டவேண்டும் என நான் மன்றாடுகின்றேன் எனவும் பிரியா தெரிவித்துள்ளார்.
எனது கணவர் மனமுடைந்துபோயுள்ளார் நானும் அதிகாரிகள் என்னை பலவந்தமாக விமானத்திற்குள் ஏற்றியவேளை காயங்களுக்குள்ளாகியுள்ளேன் என பிரியா தெரிவித்துள்ளார்.

நாங்கள் எப்போதும் வீட்டிற்கு செல்வோம் என குழந்தைகள் கேட்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரியாவின் இந்த வேண்டுகோளை நிராகரிக்கும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்கொட் மொறிசன் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள் என்பதற்காக தமிழ் குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் தங்கவைத்தால் அது மேலும் பலர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் வருவதை ஊக்குவிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இது பொதுமக்களின் மன உணர்வு தொடர்பானதல் இது அவுஸ்திரேலியாவின் எல்லைபாதுகாப்பு தொடர்பான விடயம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட தமிழ் குடும்பத்தினரை அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிப்பதற்கான தீர்மானத்தை இறுதி நேரத்தில் எடுத்தால் அது படகுகள் மூலம் நுழைய முயல்பவர்களை ஊக்குவிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal