வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களின் வாக்குகள் தீர்க்கமானவையாக இருக்கும் என்பதால், பேரம் பேசுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்து, பரவலாக இருக்கின்ற நிலையில், மஹிந்த தரப்பே பேரத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்து, தமிழ்க் கட்சிகள் தான் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பேரம் பேசும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், இதுவரையில் அவ்வாறான எந்தப் பேரமும் நடந்ததாகத் தெரியவில்லை.
ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த காலத்தில், அந்த அரசாங்கத்துடன் ஒட்டி, உறவாடிய தமிழ்க் கட்சிகள், எந்தப் பேரத்துக்கும் செல்லாமல், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க இணங்கிவிட்டன.
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டீ.பி, வரதராஜப் பெருமாளின் தலைமையிலான தமிழ்ச் சமூக ஜனநாயகக் கட்சி, உதயராசா தலைமையிலான சிறி டெலோ, விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, கலாநிதி விக்னேஸ்வரன் தலைமையிலான அகில இலங்கைத் தமிழர் மஹாசபை, ஈரோஸ் அமைப்பில் இருந்து பிரிந்த ஒரு குழு உள்ளிட்ட சிறிய தமிழ்க் கட்சிகள் பலவும், கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்க முடிவு செய்துள்ளன. அல்லது அவ்வாறான முடிவை எடுக்கும் நிலையில் உள்ளன.
இவற்றுடன், சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் அதே முடிவை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால், ஆட்சி மாற்றம், பிள்ளையானைச் சிறையில் இருந்து வெளியே கொண்டுவர உதவக்கூடும். அதைவிட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, ஏற்கெனவே மஹிந்தவின் கூட்டணியில்தான் இருந்தது.
இந்தக் கட்சிகள் எதுவுமே, பேரம் என்று எதையும் பேசாமல், மஹிந்த ராஜபக்ஷவிடமோ கோட்டாபய ராஜபக்ஷவிடமோ, வாக்குறுதி என எதையும் பெற்றுக்கொள்ளாமலேயே அதரவு அளிக்க இணங்கியிருக்கின்றன.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பேரம் நடத்தப் போவதாகவும் அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டதும், பேச்சுகளை நடத்தியே தீர்மானிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
இதுவரை எந்தத் தரப்புடனும் கூட்டமைப்பு, அதிகாரப்பூர்வமாக பேரத்திலோ பேச்சுகளிலோ ஈடுபட்டதாகத் தகவல் இல்லை. ஐ.தே.கவின் வேட்பாளராவார் எனக் கருதப்படும் சஜித் பிரேமதாசவுடன் ஒரு சந்திப்பு நடந்துள்ளதாக மாத்திரம் தகவல் உள்ளது.
எவ்வாறாயினும், பிரதான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான், பேரம் என்பது கைகூடும். ஏனென்றால், பிரதான கட்சிகளின் நிலைப்பாடுதான், அவற்றினது வேட்பாளர்களின் நிலைப்பாடாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை.
பிரதான கட்சிகளின் கொள்கைகளுக்கு அப்பால், அவற்றின் வேட்பாளர்களது தனிப்பட்ட கொள்கைத் திட்டமும் கவனிக்கப்பட வேண்டியவை.
எனவே, எல்லா வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டதும், அவர்களுடன் பேசிய பின்னரே முடிவெடுப்பது என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு சரியானதே.
அதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள், ஏதாவதொரு வேட்பாளருடன் தானாகச் சென்று பேரம் பேச முனையுமா, இந்தக் கட்சிகளுடன் பிரதான வேட்பாளர்கள் பேரம் பேச முன்வருவார்களா என்ற கேள்வி உள்ளது.
இவ்வாறான ஒரு நிலையில்தான், தமிழ் மக்களிடம் நேரடியாகவே ஒரு பேரத்தில் இறங்கியிருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷ.
பேட்டியில் அவர், தமிழ் மக்களுடன் வெளிப்படையான ஒரு வியாபாரத்தைப் (பேரம்) பேச முனைந்திருக்கிறார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட ஒரு தீர்வு பற்றிய கேள்விக்குப் பதிலளித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ,“எனக்கு வாக்களிக்காமல், என்னிடம் தீர்வை அவர்கள் (தமிழ் மக்கள்) எதிர்பார்க்க முடியாது. எங்களுக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாது.
“தங்களுக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை, தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும். வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எங்களுடன் இணைந்து ஒரு கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளலாம்” என்று அவர் கூறியிருக்கிறார்.
இதிலிருந்து அவர், தமிழ் மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதை நினைவுபடுத்தி, தனக்கு வாக்களித்தால்தான் அவர்களுக்கான தீர்வைத் தன்னால் வழங்க முடியும் என்று கூற முனைந்திருக்கிறார்.
2010 ஜனாதிபதித் தேர்தலில், வடக்கிலுள்ள மக்கள், மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவில்லை. சரத் பொன்சேகாவுக்குத்தான் அதிக வாக்குகளை அளித்திருந்தனர். அதுபோலவே, 2013 மாகாணசபைத் தேர்தலிலும், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணிக்கு, வடக்கு மக்கள் மரண அடி கொடுத்திருந்தனர்.
அப்போதெல்லாம் மஹிந்த ராஜபக்ஷ இப்படிப் பேசியிருக்கவில்லை. வடக்கிலுள்ள மக்கள் எனக்கு வாக்களிக்காவிட்டாலும், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டியது எனது பொறுப்பு என்றே அவர் கூறியிருந்தார். இப்போது, திடீரென எனக்கு வாக்களிக்காமல் என்னிடம் இருந்து தீர்வை எதிர்பார்க்க முடியாது என்று மிரட்டும் தொனியில் பேசத் தொடங்கியிருக்கிறார்.
இதன் மூலம் அவர், தமிழ் மக்களையும் கட்சிகளையும், அழுத்தம் கொடுத்தோ அச்சுறுத்தியோ, தன்பக்கம் இழுக்க முனைகிறார் என்றே தோன்றுகிறது.
தேர்தல் ஒன்றில், பொதுவாக வேட்பாளர்கள்தான் வாக்குறுதிகளை அளிப்பது வழக்கம்.
எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று அளித்த வாக்குறுதிகளை, எந்தவொரு சிங்களத் தலைவரும் நிறைவேற்றியதாக வரலாறு இல்லை.ஆனால், இப்போது மஹிந்த ராஜபக்ஷ அவ்வாறான ஒரு வாக்குறுதியைக் கொடுப்பதற்குக் கூடத் தயாரில்லை. முதலில், தமிழர்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும், அப்படி வாக்களித்தால் தான் தீர்வு பற்றித் தன்னிடம் கேட்க முடியும் என்று, மேல் நிலையில் இருந்து பேரம் பேச முனைந்திருக்கிறார் அவர். தாம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேசுவேன் என்று சில வாரங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். யாருடன் பேசுவீர்கள் எனக் கேட்டதற்கு, தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசுவேன் என்றும் எல்லாக் கட்சிகள், பிரதிநிதிகளுடனும் பேசி முடிவெடுப்பேன் என்றும் மஹிந்த அப்போது கூறியிருந்தார்.
தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசுவேன் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியதே, ஒரு சுத்துமாத்து முயற்சி தான். அது, காலத்தை வீணடிக்கின்ற- யதார்த்தத்துக்குப் புறம்பான ஒரு செயல் என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்போது, அவர் நேரடியாகத் தமிழ் மக்களிடம் ஒரு பேரத்தை முன்வைத்துப் பேச முனைந்திருக்கிறார். எனக்கு வாக்களித்து விட்டு தீர்வு என்னவென்று கேட்க வாருங்கள் என்று அழைத்திருக்கிறார்.
அதைவிட இன்னொரு விடயமும் உள்ளது. முன்னர் ‘13 பிளஸ்’ தீர்வு என்று கூறிய மஹிந்த ராஜபக்ஷ, இப்போது அதை ஏற்றுக்கொள்ளவும் தயாரில்லை.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து 6 மாதங்களில், 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று, அவருக்கு ஆதரவு அளிக்க முடிவுசெய்துள்ள ஈபிடீபி கூறியிருக்கிறது,
ஆனால், கோட்டாபய ராஜபக்வோ, ஒரு செவ்வியில் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது. காணி அதிகாரங்களையோ பொலிஸ் அதிகாரங்களையோ மாகாணங்களுக்கு கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.
இந்தக் கட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷவும் கூட, ‘13 பிளஸ்’ பற்றிய கேள்விக்கு, நழுவலாகவே பதில் அளித்திருக்கிறார்.
“ஆறு மாதங்களுக்குள் தீர்வைக் கொடுக்க முடிந்தால் கொடுப்போம். உடனடியாக, கொடுப்போம் என்று கூறிவிட முடியாது. இதுபற்றி நாம் பேசவேண்டும். 13ஆவது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும்” என்றே அவர் கூறியிருக்கிறார்.
மக்களுக்கு இப்போது எது தேவையோ அதனைக் கொடுப்போம் என்ற அவரது கருத்து, ‘13 பிளஸ்’ ஐ குறிக்கிறதா, ‘13 மைனஸ்’ ஐ குறிக்கிறதா என்பது கேள்வி.
ஏனென்றால், ‘13 பிளஸ்’ என்று நான் வாக்குறுதி எதையும் கூறவில்லை. அது ஊடகங்கள் தாமாகவே போட்டுக் கொண்டதென, அண்மையில்கூட மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.
தமிழ் மக்களை விடுவிக்கவே போர் தொடுத்ததாக இன்னும்கூட நியாயப்படுத்துகிறார் அவர்.
அப்படிப்பட்டவர், நாளை தமிழ் மக்கள் இப்போது கேட்பது, இது தான், இதனைத் தான் அவர்கள் விரும்புகிறார்கள் என ஒரு ‘அரைவேக்காடு’ அவியலைக்கூட அவர் திணித்து விட்டுப் போகக்கூடும்.
அதனால் தான், வாக்குறுதி எதையும் கொடுக்காமலேயே தமிழ் மக்களிடம் அவராகவே பேரத்தை ஆரம்பித்திருக்கிறார். இந்தப் பேரம், தமிழ் மக்களால் எப்படி புரிந்து கொள்ளப்படப் போகிறது என்பதை பொறுத்திருந்துப் பார்க்கலாம்.
கே. சஞ்சயன்