நாட்டில் சரியான அரசியல் மாற்றம் ஒன்றை உருவாக்குவதன் மூலமாக மட்டுமே இந்த நாட்டின் நிலைமைகளை மாற்றியமைக்க முடியும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க மாற்று அரசியல் கொள்கை ஒன்றினை உருவாக்கும் திட்டம் எம்மிடம் உள்ளது என்றும் கூறினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் சரியான அரசியல் மாற்றம் ஒன்றை உருவாக்குவதன் மூலமாக மட்டுமே இந்த நாட்டின் நிலைமைகளை மாற்றியமைக்க முடியும். எம்மால் மட்டுமே இந்த நாட்டுக்கு ஏற்ற, தூய்மையான, அமைதியான அரசியல் மாற்றங்களை உருவாக்க முடியும். இன்று நாட்டில் அனைவருக்கும் தூய்மையான அரசியல் கலாசாரம் ஒன்றே வேண்டும். அதனையே நாம் உருவாக்க முயற்சிக்கின்றோம்.
இந்த நாட்டில் சகல மக்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழும் எமது மக்களின் கனவுகள் உள்ளது, ஏனைய நாடுகளை போல எமது நாட்டையும் அபிவிருத்தியடையச்செய்ய வேண்டும் என்ற கனவு உள்ளது. அதேபோல் இந்த நாட்டினை ஆட்சி செய்த எமது ஆட்சியாளர்கள் மீது கோவமும் எழுகின்றது.
ஆகவே இதில் எமது மக்கள் சரியாக சிந்தித்தால் மட்டுமே மாற்றங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். மாற்று அரசியல் கொள்கை ஒன்றினை உருவாக்கும் திட்டம் எம்மிடம் உள்ளது, சகல துறைகளிலும் மாற்றங்களை கொண்டுவரும் திட்டங்கள் எம்மிடம் உள்ளது. அதில் அனைவரும் எம்முடன் கைகோர்த்து செயற்பட வேண்டும்.
புதிய நாடொன்றை உருவாக்க அதற்கான வேலைத்திட்டத்தை இன்றே நாம் ஆரம்பிக்க வேண்டும். மாற்றம் ஒன்றினை உருவாக்கும் சரியான சதர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.