காஷ்மீரும் வட அயர்லாந்தும் எங்கே ஒன்றுபடுகின்றன ? எங்கே வேறுபடுகின்றன ?

ஜூலை நடுப்பகுதியில் ஒரு நாள் பெல்பாஃஸ்டில் இருந்து டப்ளினுக்கு பஸ்ஸில் பயணம் செய்தேன். பெல்பாஃஸ்ட் வட அயர்லாந்தில் இருக்கிறது ; மதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதத்தினால் பளவுபடுத்தப்பட்ட  தீவின் ஒரு பகுதியான அயர்லாந்து குடியரசில் டப்ளின் இருக்கிறது.ஆனால், சோதனை நிலையம் எதுவும் இருக்கவில்லை ; வீதி அறிவிப்புகளில் மைல்கள் கிலோமீட்டர்களாக மாறியபோது, விளம்பர பதாகைகளில் விலைகள் பவுண்களில் இருந்து யூரோவாக மாறியபோது, எழுத்துக்களில் அசையழுத்தக்குறியைக் கண்டபோது எல்லையைக் கடந்துவிட்டேன் என்பதை புயிந்துகொண்டேன். இன்னொரு நாட்டில் நான் இருப்பதை எனது கையடக்க தொலைபேசி காட்டியது.

 

பயணம் எந்த தடையும் இடையூறும் இல்லாததாக இருந்தது. 1998 பெரிய வெள்ளி உடன்படிக்கையே அதைச் சாத்தியமாக்கியது.பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து ஐரிஷ் தேசியவாதிகள் போராட்டம் நடத்தியபோது ஐக்கிய இராச்சியத்திலும் வட அயர்லாந்திலும் ” குழப்பங்கள் ” ( The Troubles )என்று கூறப்பட்ட 30 வருடகால நெருக்கடியை அந்த உடன்படிக்கையே முடிவுக்குக்கொண்டு வந்தது. குழப்பங்களின்போது சுமார் 3500 பேர் இறந்தனர் ; அவர்களில் அரைவாசிப் பேர் குடிமக்கள் ; மூன்றில் இரு பங்கினர் பிரிட்டிஷ் படைகள் ; மிகுதி ஐரிஷ் ஆயுதக்குழுக்களின் உறுப்பினர்கள்.

ஜரிஷ் மதப்பிரிவுகளுக்கு இடையிலான மோதல் காஷ்மீர் நிலைவரத்துடன் ஒப்பிடக்கூடியதா? இந்திய அரசியலமைப்பின் 370 பிரிவை மோடி அரசாங்கம் செயலிழக்கச் செய்தததையடுத்து  காஷ்மீர் உலகம் பூராவும் தலைப்புச் செய்தியாகியது. வெளிநாட்டு ஊடகங்கள் அந்த மாநிலத்தை ஜம்மு — காஷ்மீர் என்று அல்ல, ” இந்திய ஆக்கிரமிப்புக் காஷ்மீர் ” (Indian – occupied Kashmir) என்றே அழைக்கின்றன.கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கு அப்பால் உள்ள பகுதிகளை ” பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் ” ( Pakistan – occupied Kashmir) என்று இந்திய அழைப்பதற்கு சமாந்தரமானதாக வெளிநாட்டு ஊடகங்களின் இந்த வர்ணனை அமைகிறது.காஷ்மீரிகளின் சம்மதம் இல்லாமல் சில பகுதிகளை சீனாவுக்கு விட்டுக்கொடுத்தபோதிலும் பாகிஸ்தான் தன்வசமுள்ள காஷ்மீரை ” அசாத் காஷ்மீர் ” என்றே அழைக்கிறது.

ஜம்மு – காஷ்மீரை ” இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் ” (Indian – administered  Kashmir) என்று பி.பி.சி.யும் மேற்குலகின் வேறு ஊடகங்களும் அழைப்பதை இந்தியா விரும்பவில்லை. அத்துடன் சில இந்தியர்கள் வட அயர்லாந்தை ” பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு அயர்லாந்து ” (British -occupied Ireland) என்று அல்லது மேலும் கூடுதல் பொருத்தமானமுறையில் ” ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு அயர்லாந்து ( English – occupied Ireland) என்று அழைக்கிறார்கள்.

ஆரவாரப்பேச்சுக்கள் ஒருபுறமிருக்க, காஷ்மீரினதும் வட அயர்லாந்தினதும் நெருக்கடிகள் எங்கே ஒன்றிணைகின்றன என்பதையும் அவற்றை வேறுபடுத்துபவை எவை என்பதை புரிந்துகொள்வது பயனுடையதாக இருக்கும். இரு நெருக்கடிகளிலும் மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் ஒரு சக்தியாக மதமே இருக்கிறது என்பது உண்மையே.இரு பிராந்தியங்களிலும் பொலிஸாரின் கொடுமைகள், ஆயுதப்படைகளின் அத்துமீறல்களும் துஷ்பிரயோகங்களும், குடிமக்களுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்கள், இனப்பாகுபாடு, மதக்குழுக்களிடையிலான வன்செயல்கள், பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள், மறைத்துவைக்கப்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிப்பு எதிரிகளுக்கு உடந்தையாக செயற்பட்டவர்களின் மர்மமான மரணங்கள்,  சோதனை நிலையங்கள மீதான ் தாக்குதல்கள், குண்டுவைத்து தகர்ப்புகள் என்று எல்லாமே இடம்பெற்றன.

ஆனால், ஐக்கிய ஐரிஷ் குடியரசொன்றை விரும்பும் மிகவும் தீவிரமான தேசியவாதிகளான வட அயர்லாந்துப் போராளிகளும் ஐக்கிய இராச்சியத்துடனேயே தொடர்ந்தும் இருக்கவிரும்பும்  பிடிவாதமான யூனியன்வாதிகளும் (Unionists) இறுதியில் பேச்சுவார்த்தை மூலம்  உடன்பாடொன்றுக்கு வந்தார்கள். அந்த உடன்பாடு வட அயர்லாந்துக்கு கணிசமான சுயாட்சியை வழங்கியதுடன் அங்கு இராணுவப் பிரசன்னத்தை கணிசமானளவுக்கு குறைத்தது.வட அயர்லாந்து அதன் சொந்த முதலமைச்சரை தெரிவுசெய்கிறது.  (இந்திய அரசியலமைப்பின் 370 பிரிவின் அர்த்தம் போன்ற ) கணிசமான அதிகாரப்பரவலாக்கமும் இருக்கிறது ; அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் அரசாங்கங்கள் அமைக்கப்படுகின்றன. ( தற்போது அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு  கட்சிகளினால் இயலாமல் இருப்பதன் காரணத்தால் சட்டசபை இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் ஜம்மு — காஷ்மீரீல் நடந்ததைப்போன்று கட்சிகளின் கூட்டணியினால் அனுப்பப்பட்ட தொலைநகல் மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியான ஆளுநரை சென்றடையவில்லை என்ற காரணத்தால் சட்டசபை இடைநிறுத்தப்பட்டது போன்று வட அயர்லாந்தில் இடம்பெறவில்லை. )

வட அயர்லாந்தில் எந்த விதமான குற்றச்சாட்டும் இல்லாமல் முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை ; இணையத்தொடர்பு நிறுத்தப்படவில்லை ; துருப்புகள் அணிவகுத்துச் செல்லவில்லை ; மக்கள் நடமாட்டம் இனறி வீதிகள் வெறிச்சோடவில்லை ; அணிவகுத்துச் செல்லவில்லை ; மக்கள் நடமாட்டம் இனறி வீதிகள் வெறிச்சோடவில்லை ; கத்தோலிக்கர்களோ அல்லது புரட்டஸ்தாந்துக்காரர்களோ ஆவேசத்துடன் வீதிகளி்ல் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவில்லை ; பெலற் துப்பாக்கிகளினால்  ( Pellet guns) சுடப்பட்டு கண்கள்  குருடாகிப்போகும் என்று எவரும் அங்கு அஞ்சவில்லை.

நிச்சயமாக பெல்பாஃஸ்ட் பிளவுபட்ட ஒரு நகராகவே காணப்படுகிறது ; சமூகங்களை சுவர்கள் பிரிக்கின்றன ; வட அயர்லாந்தில் உள்ள லண்டன்டெறிக்கான வீதி அறிவிப்பில் ‘ லண்டன் ‘ என்ற சொல்லுக்கு வெள்ளையடிக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறது ; போர் நிகழ்வுகளைச் சித்திரிக்கும் சுவரோவியங்கள் பிரிவினையை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன  — ஒரு பக்கம் இடதுசாரி கெரில்லாக்களை புகழ்ந்து போற்றுகிறது, மறுபக்கம் இஸ்ரேலிய ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்துகிறது.

அக்டோபர் 31 அளவில் எந்தவொரு இணக்கப்பாட்டையும் காணாமலேயே பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக்கிக்கொள்வது என்ற தனது  பகட்டுவித்தையை பிரதமர் போறிஸ் ஜோன்சன் நடத்திக்காட்டுவாரேயானால், ஏதோ ஒரு வடிவில் சில எல்லைச்சோதனை நிலைகள் மீண்டும் வரக்கூடும்.அவ்வாறு வந்தால், பரஸ்பர சந்தேகங்களும் ஏற்படும் ; அதனால் வன்செயல்களும் மூளக்கூடிய சாத்தியத்தை மறுப்பதற்கில்லை. ஏனென்றால், தேவைப்படுபவர்களுக்கு மாத்திரமே எல்லை என்பதை அங்கீகரிக்கின்ற பெரிய வெள்ளி உடன்படிக்கையின் விளைவானதே  வட அயர்லாந்தின் சமாதானம். ஒரு வட ஐரிஷ் நபர் விரும்பினால் ஐரிஷ்கானாகவும் பிரிட்டிஷ்காரராகவும் இருக்கலாம். அவ்வாறு அவர் விரும்பவில்லையானால், யாதேனுமொரு அடையாளம் பற்றி குற்றவுணர்வோ அல்லது கவலையோ இல்லாமல் அவர் இருக்கலாம்.

இரு அடையாளங்களுமே மதத்தினாலும் தேசியவாதத்தினாலும் பிரிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை கலாசாரத்தினால் ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றன.அயர்லாந்தைச் சேர்ந்த சீமஸ் ஹீனி உலகின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர் ; அவரின் நினைவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதன்மையான ஒரு அரும்பொருட்காட்சியகம் பெல்பாஃஸ்டுக்கு வெளியே அமைந்திருக்கிறது. பங்களாஷேிலும் இந்தியாவிலும்  ரவீந்திரநாத் தாகூர் கொண்டாடப்படுவதைப் போன்று அங்கு இரு தரப்பினராலும் சீமஸ் ஹீனியின் கவிதை கொண்டாடப்படுகிறது.

உண்மையிலேயே, காஷ்மீரில் பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது ; பாரதூரமான துஷ்பிரயோகங்கள் செய்யப்பட்டிருக்கின்றன ; நம்பிக்கை அற்றுப்போய்விட்டது ; தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது என்ற உணர்வே மக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது. இந்திய அரசாங்கத்தின் தீர்மானத்தையடுத்து தேசியவாதிகள் மத்தியில் காணப்படுகின்ற மகிழ்ச்சி ஆரவாரம் எந்தவொரு எதிர்ப்பையும் — அமைதி வழியிலானதாக இருந்தாலும் கூட — அடக்குவதாக இருக்கிறது ; ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தத்துவக் கலாநிதி பட்டதாரி மாணவியாக இருக்கும் அரசியல் செயற்பாட்டாளரான ஷீலா ரஷீத்தை தனியார் தொலைக்காட்சி சேவைகள் உட்பட பிரசார இயந்திரங்கள் விரட்டிக்கொண்டிருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும்.அத்துடன் காஷ்மீரிகள் மத்தியில் நிலவுகின்ற அந்நியமயமாதல் உணர்வையும் இது வலுப்படுத்துவதாக அமைகிறது.

ஜம்மு – காஷ்மீரையும் வட அயர்லாந்தையும் ஒப்பிடுவது இரு பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு அநீதி செய்வதாகும். வட அயர்லாந்து அனுபவிக்கின்றதைப் போன்ற  திறந்த போக்கை உருவாக்குவதற்கு பெருந்தன்மையும் பரந்த மனப்பான்மையுடனான சிந்தனையும் அவசியமாகும்.ஆனால், தான்தோன்றித்தனமான அரசியல்வாதிகள் இந்தியா செய்திருப்பதைப்போன்ற — போறிஸ் ஜோன்சன் செய்யப்போவதாக அசசுறுத்துவதைப் போன்று — விளைவுகளைப் பொருட்படுத்தாமல் சதுரங்கப் பலகையை புரட்டிவிடுவார்கள்.ஜம்மு — காஷ்மீர் வட அயர்லாந்து ஆகிவிடவில்லை ; வட அயர்லாந்து ஜம்மு — காஷ்மீர் ஆகிவிடக்கூடாது.

( சலீல் திருப்பதி லண்டனைத் தளமாகக்கொண்ட எழுத்தாளர் )