அமெரிக்காவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக ஐ.எஸ். ஆதரவாளர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் குயின்ஸ் பகுதியில், ஐஎஸ் அமைப்பிற்கு ஆதரவான செயல்களில் ஒரு வாலிபர் ஈடுபடுவதாக காவல் துறைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அந்த வாலிபரின் தகவல் பரிமாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வந்த காவல் துறை நேற்று அவரை கைது செய்தனர்.
விசாரணையில், 19 வயது நிரம்பிய அந்த வாலிபர், பாகிஸ்தானில் பிறந்தவர் என்பதும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களின் ஆதரவாளராக மாறியது தெரியவந்துள்ளது.
மேலும், நியூயார்க் நகரில் ஐஎஸ் அமைப்பின் பெயரில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. அவரிடம் அதகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு விசாரணையின் ஒரு அங்கமாக அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மற்ற விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.