ஈழ தமிழ் தம்பதியினரை அவர்களது குழந்தைகளுடன் இலங்கைக்கு திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈழ தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என கோரி போரடி வரும் ஹோம் டு பைலோ அமைப்பு தனது டுவிட்டர் மற்றும் முகநூல்களில் இதனை தெரிவித்துள்ளது.
நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்- ஆதரவாளர்கள் விமானநிலையம் சென்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவேண்டும் என அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு வயது மகள் தருணிகாவிற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து ஆராயுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அதிகாரிகள் ஆராய மறுத்துள்ள நிலையிலேயே தமிழ் குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் 2012 மற்றும் 2013 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற நடசலிங்கமும் பிரியாவும் அங்கு திருமணம் செய்தனர். அவர்களிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நடேசலிங்கம் முன்னர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புவைத்திருந்தவர் என்பதால் அவர் இலங்கை திரும்பினால் சித்திரவதைகளிற்கு உள்ளாவார் என அவரது குடும்பத்தினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
நடேஸ் பிரியா தம்பதியினரின் புகலிடக்கோரிக்கையை ஏற்கனவே நிராகரித்துள்ள அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களை கடந்த 17 மாதங்களாக குழந்தைகளுடன் மெல்பேர்னின் தடுப்பு முகாமில் தடுத்து வைத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.
நடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவைபிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நடேஸ் பிரியா தம்பதியினரை குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் இன்று(29) இரவு மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து விமானநிலையத்திற்கு இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.
இந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை நடேஸ்பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே விமானம் புறப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தம்பதியினரை வரவேற்க பலர் காத்திருப்பதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பிரியாவை அதிகாரிகள் பலவந்தமாக விமானத்திற்குள் இழுத்து சென்றனர் விமானநிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சைமனே கமரோன் என்பவர் த ஏஜ்ஜிற்கு தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் எது குறித்தும் அக்கறையின்றி பிரியாவை இழுத்துச்சென்றனர்,அவர் கதறினார் இரு குழந்தைகளும் கதறினார்கள் அங்கு மிகவும் மனதை தொடு;ம் சம்பவங்கள் இடம்பெற்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.