நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த 36 வயது பாகிஸ்தான் அகதி தீக்குளித்த நிலையில், அவுஸ்திரேலிய வைத்தியசாலையில் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் தீக்குளித்த அவர் உயிருக்கு ஆபத்தான சூழலில் நவுருத்தீவிலிருந்து விமானம் வழியாக பிரிஸ்பேனுக்கு (அவுஸ்திரேலியா) அழைத்து செல்லபட்டார் என அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.
நவுருவில் உள்ள 300 க்கும் மேற்பட்ட அகதிகள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கிறார் ஐன் ரிண்டோல்.
கடந்த 2016ம் ஆண்டு, தீக்குளித்த ஈரானிய அகதி முறையான சிகிச்சையின்றி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் பாகிஸ்தான் அகதிக்கு அவுஸ்திரேலியாவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அகதிகளுக்கான மேலதிக மருத்துவத்துக்கு உதவும் வகையில் கொண்டு வரப்பட்ட மருத்துவ வெளியேற்ற சட்டத்தை அவுஸ்திரேலியாவின் ஆளும் லிபரல் அரசு நீக்க முயற்சிக்கும் நிலையில், அந்த முயற்சியினை கைவிட வேண்டும் என அகதிகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.
கடந்த 2013 முதல், கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்திரேலிய அரசு படகு வழியாக வருபவர்களை ஒருபோதும் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி வருகிறது.
இதன் காரணமாக சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal