மொழி மாறினாலும் நடிப்பு மாறாது, தன் காதல் நடிப்பு மீதானது என தனுஷின் பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.
‘அசுரன்’ படத்தை முடித்துவிட்டு, துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘பட்டாஸ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். சில நாட்களுக்கு முன்பு, பாண்டிச்சேரியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ‘கொடி’ படத்துக்குப் பிறகு இதில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தனுஷ்.
வயதான தனுஷுக்கு நாயகியாக சிநேகாவும், வயது குறைந்தவருக்கு நாயகியாக மெஹ்ரீனும் நடித்துள்ளனர். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ’நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்துக்குப் பிறகு ‘பட்டாஸ்’ படத்தில் நடித்துள்ளார் மெஹ்ரீன். இறுதி கட்ட பணிகள் முடித்து, டிசம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இதில் தனுஷுடன் நடித்தது குறித்து மெஹ்ரீனிடம் கேட்ட போது, “நிறைய அனுபவம் உள்ள நடிகர்களுடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. தனுஷ் அருமையான நடிகர். எந்தவிதமான காட்சியானாலும், ஒரே டேக்கில் நடித்துவிடுகிறார். அவரிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்கிறேன். எனக்குத் தமிழ் முழுமையாகத் தெரியாது.
அதனால், வசனங்களை மனப்பாடம் செய்துதான் பேசுகிறேன். என் காதல் நடிப்பு மீதானது. மொழி மாறினாலும் நடிப்பு மாறாது. எந்த மொழியில் நடிப்பதும் எனக்குப் பிடிக்கும். நடிகர்கள் அந்தந்த மொழிகளைக் கற்பது அவசியம். தெலுங்கு கற்றுள்ளேன். தமிழில் நடிக்க ஆரம்பித்துவிட்டதால், விரைவில் தமிழும் கற்பேன்’’ என்று தெரிவித்தார்.