ஜனாதிபதித் தேர்தல்; இலவு காத்த கிளியின் கதை

எல்லோரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். நடைபெறவுள்ள தேர்தல், இலங்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற மாயை, ஊடகங்களால் கட்டியெழுப்பபட்டுள்ளது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் அரசியல் வரலாற்றில், ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலின் போதும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும், இவ்வாறான ஆலவட்டங்கள் கட்டப்படுவதுண்டு. இறுதியில், எதிர்பார்ப்புகள் காற்றுப்போன பலூன் போலாவதும் பின்னர், அடுத்த தேர்தலில் நம்பிக்கை வைப்பதுமெனத் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலும், அதற்கு விலக்கல்ல. இப்போது எல்லோரின் கவனமும் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள், யாருக்கு யார் ஆரவு தருவார்கள் போன்ற கேள்விகளிலேயே குவிந்துள்ளது. ஆனால், நாடு இதைத் தாண்டி பாரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. அது குறித்து வாய்திறக்க யாரும் தயாராக இல்லை. புதிய மீட்பர், எல்லாவற்றையும் சரி செய்வார் என்று நம்ப வைக்கப்படுகிறது.

எமக்கு ஞாபகமறதி மிக அதிகம். 2015இல் ஆட்சி மாற்றம் எதைச் சாதித்தது என்பதை நாம் அறிவோம். அதேபோல, மஹிந்த ராஜபக்‌ஷவின் பத்தாண்டுகால ஆட்சி எதைத் தந்தது என்பதையும் நாமறிவோம். ஆனால், இலங்கையர்கள் அதே வகையிலான தெரிவுகளை நோக்கியே நகர்கிறார்கள். இது, அறியாமையா அல்லது அரசியல் மடத்தனமா என்ற கேள்விக்குச் சரியான பதிலைத் தேடுவது கடினம்.

இலங்கையில் பரந்துபட்ட ஜனநாயகத்துக்கான கோரிக்கை, ஓர் இயக்கமாக வளர்ச்சியடையவில்லை. தேசியவாத அரசியலின் எழுச்சியும் முனைப்பட்ட இன முரண்பாடுகளும், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியலைத் தீவிர தேசியவாதத்தின் காலடிகளில் வீழ்த்தி, ஜனநாயகத்தை நோக்கிய நகர்வைச் சிதைத்தன.

இந்தச் சீரழிவில் இருந்து, இன்னமும் இலங்கை அரசியல் மீளவில்லை. அதிலிருந்து உடனடியாக மீள்வதற்கான பாதை, எம்முன் இப்போதைக்கு இல்லை. அதனாலேயே, தேசியவாத நிலைப்பாடுகளுடனேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலும் நோக்கப்படுகிறது.

2015இல் போற்றப்பட்ட நல்லாட்சியின் வரவு, ராஜபக்‌ஷ ஆட்சியை நீக்கி, ஊழற்காரக் கூட்டமொன்றின் இடத்தை இன்னோர் ஊழற்காரக் கூட்டம் பிடித்ததைவிட, நாட்டுக்கோ மக்களுக்கோ எதுவும் மாறவில்லை. இதேபோன்றதொன்றே மறுபடியும் நிகழக் காத்திருக்கிறது. அதற்காகத்தான் இத்தனை எதிர்பார்ப்பும்.

இலங்கையின் பிரதான முரண்பாடான தேசிய இன முரண்பாட்டுக்கு, நியாயமானதும் அனைவராலும் ஏற்றுக்கொ ள்ளக்கூடியதுமான தீர்வை, எந்தவொரு வேட்பாளரும் முன்வைக்கப் போவதில்லை என்பதை உறுதியாக நம்பலாம்.

இலங்கையில் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, குறைந்தபட்சம் வருத்தத்தைத்கூட எந்தவொரு பிரதான வேட்பாளரும் தெரிவிக்கப் போவதில்லை. (மன்னிப்புக் கேட்பதென்பதை நாம் மறந்துவிடலாம்). இதன் பின்னணியில், இலங்கையின் இனப்பிரச்சினையை ஒரு பொருட்டாகவே கருதாத ஒரு தேர்தல் குறித்து அக்கறைப்பட என்ன இருக்கிறது?

சிறுபான்மைத் தேசிய இனக் கட்சிகளின் அக்கறை, நாடாளுமன்ற ஆசனங்களை வெல்வது மட்டுமே. ஜனாதிபதித் தேர்தலில் அவற்றின் நிலைப்பாடு வரவுள்ள தேர்தல்களின் ஆசனக் கணக்கிலேயே தங்கியிருக்கும். தாம் பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லும் மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்த இயலாத அவை, தத்தம் தொகுதிகளுக்கு வழங்கக்கூடிய உறுதிமொழிகள், முன்னைய தேர்தல்களிலும் குறைந்துள்ளன.

ஆக மிஞ்சிச் சாரமற்ற வெற்று மிரட்டல்களை விடுப்பதை விட, அவை ஏதுஞ் செய்யா. எனவே, இக்கட்சிகள் எதுவித அறமோ நியாயமோ அற்ற முறையில் ஒரு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும். அதற்கு தனது மொட்டை நியாயங்களைச் சப்பைக் கட்டு கட்டும்.

இலங்கையின் பொருளாதாரம், மிகவும் சீரழிந்துள்ளது. தேசியப் பொருளாதாரம் முழுமையாக இல்லாமல் போயுள்ளது. அந்நியக் கடன்சுமை தொடர்ச்சியாக ஏறி வருகிறது. இதன் சுமை, பொதுமக்களின் தோள்களிலேயே ஏற்றப்படுகிறது. கல்வி, சுகாதாரம் ஆகிய சமூக நலன்கள் சீரழிக்கப்பட்டு விட்டன. சட்டம், ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டு, தேசியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டமெதையும் எந்த வேட்பாளரும் வழங்கப் போவதில்லை.

தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு, சிறுபான்மையினருக்கு நீதியானதும் சமத்துவமானதும், கொளரவமானதுமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தல், பொருளாதாரத்தை மீட்டெடுத்து, தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் ஆகிய மூன்று அடிப்படை விடயங்களில் வேட்பாளர்களின் நிலைப்பாடுகள் என்ன என்பதை வாக்காளர் ஒவ்வொருவரும் நோக்க வேண்டும். தேசியவாதக் கூச்சல்களுக்கு அப்பால் இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

ஏகலைன்