தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய்க்கு அவரது தாய் ஷோபா எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் முன்னணி நடிகராக விளங்குபவர் விஜய். இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சினிமா இயக்குனராகவும், தாய் ஷோபா சந்திரசேகர் பாடகியாகவும் உள்ளனர். விஜய்க்கு அவரது தாய் ஷோபா ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். இது சமூகவலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- “ஈன்றெடுக்கும் சிசு ஒரு செவிலியரின் உள்ளங்கையில் தவழ்ந்து பின் தாயின் உள்ளம் நோக்கி வரும். அவளும் உச்சி முகர்வாள். ஆனால், நான் பெற்ற பிள்ளை இன்று கோடானு கோடி தாய்மார்கள், ரசிகர்கள் உள்ளங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதையும் அவர்களும் அதை தளபதியாய் கொண்டாடிக் கொண்டிருப்பதையும் காண்கையில் என் இமை ஓரம் சிறு ஈரம் கசிந்து வழிகிறது. அதை மீறி வேறென்ன நான் எழுத்தில் வடிக்க விஜய் உன்னைப் பற்றி.
நீ என் கரம் பற்றி நடந்ததை, பின் நடந்ததை எல்லாம் (ஏற்றம், இறக்கம், தோற்றல், போற்றல்) அசை போட்டு பார்க்கையில் என் எண்ணங்களின் உச்சிக் குளிர்ந்து என் அகம் எங்கும் வடிகிறதே அந்த நுண்ணிய உணர்வுகளை எந்த காகிதத்தில் வடிப்பது. அமைதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஆர்பரிக்கும் இளவயதில் கூட நீ அமைதியின் அவதாரமாய் இருக்கையில், இயங்குகையில் என் ஆழ்மன ஊற்று பெருகி ஆனந்தம் வடிகையில் அதை எந்த பேனாவுக்குள் மையாய் ஊற்றி எழுத முடியும்.
நீ உன் அழுகை நிறுத்தி, முதல்முதல் உன் பூவிதழ் விரித்து, புன்னகைத்தது முதல் இன்று உன் இதயத்தளவு ரசிகர்களின் பெரு வெள்ளத்திற்கு இடையே இன்பத்தளிப்பில் நீ புரியும் புன்னகையை விவரிக்க… தேடி கிடைக்காமல் வார்த்தைகளை கடன் வாங்கும் (கோடி கோடியாய் பொருள் இருந்தும்) நிலையை ஒரு சிறப்பிதழுக்குள் என்னால் எப்படி எழுதி விட முடியும்?
சுருங்கக்கூறின் எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ராமச்சந்திரன், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னை கொண்டாட உலகமே காத்திருக்கையில், தாய் என்பதெல்லாம் மறந்து ரசிகர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாய் நானும் அடிக்கிறேன் ஒரு நீண்ட பிகில்…”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal
