ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயருடன் மேலும் நால்வரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் எனவும் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவிக்க இப்போது எந்த அவசியமும் இல்லை. இன்னமும் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்புகள் வரவும் இல்லை. கட்சிக்குள் ஒரு சிலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் கட்சியாக இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை. எவ்வாறு இருப்பினும் இம்மாத இறுதிக்குள் அறிவிப்புகள் பல வெளிவரவுள்ளன.
அதில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பையும் எதிர்பார்க்க முடியும். அடுத்த வாரம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூடும். இதில் பிரதான காரணிகள் குறித்தும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படும். அத்துடன் கூட்டணிக்கான யாப்பு உருவாக்கம் குறித்தும் கலந்துரையாட வேண்டியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த வினாவுக்கு, அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயர் அதிகமாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் மேலும் நால்வர் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அவர்களும் அவ்வப்போது ஊடகங்கள் முன்னிலையில் தம்மை வேட்பாளராக கூறிகின்றனர். கட்சி சார்பிலும் சிலரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சபாநாயகர் கரு ஜெயசூரிய, சரத் பொன்சேகா ஆகியோரின் பெயர்களையும் ஊடகங்களில் அவதானிக்க முடிகின்றது. எவ்வாறு இருப்பினும் கட்சிக்கென்ற ஒழுக்கம் நடைமுறைகள் உள்ளன. எனவே கட்சியாக எடுக்கும் தீர்மானங்கள் தனிநபர் தீர்மானமாக அமையாது. இது கட்சியின் செயற்குழு தீர்மானமாகவே அமையும்.
இம்மாத இறுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடைகிடைக்கும். எனி னும் கட்சிக்குள் பிளவுகள் எதுவும் ஏற்படவில்லை. கட்சியை பிளவுபடுத்த இடமளிக்கப்போவதும் இல்லை. இறுதியாக கட்சியின் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய இறுதி நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்றார்.