பிரேசிலின் அமேசன் மழைக்காட்டுப் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான காட்டுத் தீ சம்பவங்கள் புதிதாக இடம்பெற்று பரவி வருகின்ற நிலையில் அதனை அணைக்கப் பல்லாயிரக்கணக்கான படையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை வத்திக்கானில் இடம்பெற்ற ஆராதனைகளைத் தொடர்ந்து ஆற்றிய உரை யின்போது அமேசன் காட்டுத் தீ குறித்து கவலையை வெளியிட்டுள்ளார்.
அமேசன் மழைக்காடுகள் இந்த உலகின் முக்கிய சுவாசப்பையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
“அமேசனில் பாரிய காட்டுத் தீ பரவி வருவது குறித்து நாம் மிகவும் கவலையடைந்துள்ளோம். அந்த (சுவாசப்பை போன்று வளியைச் சுத்திகரித்து வழங்கும்) காட்டு சுவாசப்பை எமது கோளுக்கு மிகவும் ஜீவாதாரமான ஒன்றாகும்” என அவர் கூறினார்.
அமேசன் பிராந்தியத்தில் சுமார் 1,663 புதிய தீ சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரேசிலின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவகம் தெரிவிக்கிறது.
இந்தத் தீயை அணைக்கும் செயற்கிரமத்தில் 6 பாரிய தீயணைப்பு விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ஜி–7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிரான்ஸுக்கு சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்ஸனும் இந்தக் காட்டுத் தீயை அணைக்கும் செயற்கிரமத்திற்கு உதவ நடவடிக்கை எடுத்துள்ளனர்.