புதிய படங்களில் சமந்தா ஒப்பந்தம் ஆகாமல் இருக்க காரணம்?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருப்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஓ பேபி’. தெலுங்கில் உருவான இந்தப் படத்தை நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ‘மிஸ் க்ரானி’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘96’ தெலுங்கு ரீமேக்கில் மட்டுமே நடித்து வந்தார். வேறு எந்தவொரு புதிய படத்திலுமே அவர் ஒப்பந்தமாகவில்லை.

இது குறித்து விசாரித்த போது, அவர் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருவது தெரிந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் உருவாகும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் சென்னையில் தான் நடைபெற்று வருகிறது.

இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்களை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர். மேலும், ‘96’ தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பையும் எப்போதோ முடித்துவிட்டாராம் சமந்தா. இந்த வெப் சீரிஸ் தனக்கு புதியதோர் பரிமாணத்தைக் கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார். ஆகையால் வெப் சீரிஸ் பணிகளை முடித்துவிட்டுத் தான் புதிய படத்துக்கான கதை கேட்கும் பணிகளைத் தொடங்கவுள்ளார்.